பட்டப்பகலில் குடும்பப் பெண் ஒருவரை வெட்டிக் கொலை செய்த பின்னர் இளைஞர் ஒருவர் தனக்குத்தானே பெற்றோல் ஊற்றித் தீமூட்டிக் கொண்டார் என்று யாழ்.பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
உடல் முழுவதும் எரிகாயங்களுக்குள்ளான இளைஞர் ஆபத்தான நிலையில் சிகிச்சைக்காக யாழ்.போதனா வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டார்.இந்தப் பயங்கரச் சம்பவம் யாழ். பஸ்ரியன் சந்தியில் நேற்றுப்பிற்பகல் 3.30 மணியளவில் இடம்பெற்றது. கச்சேரி நல்லூர் வீதி, மூத்தநயினார் கோயிலடியைச் சேர்ந்த சுதாகரன் அகிலா (வயது28) என்பவரே வெட்டிக் கொல்லப்பட்டார்.
அவரை வெட்டிக் கொன்ற பின்னர் தீ மூட்டிக் கொண்ட இளைஞர் ஹற்றனைச் சேர்ந்த சுப்பிரமணியம் சத்தியன் (வயது28) என்றும் பொலிஸார் தெரிவித்தனர். இவர் ஹற்றனைச் சேர்ந்தவர். யாழ்ப்பாணத்திலுள்ள பிரபல ஹோட்டல் ஒன்றில் பணியாற்றியவர்.
அகிலாவைக் கத்தியால் வெட்டிய பின்னர் அவருடன் கூட வந்த சகோதரியின் மகனான சிறுவனைக் கொலை செய்யும் நோக்கில் கத்தியுடன் துரத்தினார் என்றும் அச்சிறுவன் அவ்விடத்திலிருந்து தப்பி ஓடி விட்டான் என்றும் பொலிஸார் கூறினர். கொலைசெய்யப்பட்ட அகிலாவின் மூத்த சகோதரியும் இந்த இளைஞரும் நண்பர்கள் என முதல்கட்ட விசாரணை களில் தெரிய வந்துள்ளது. அவர் கொழும்பிலுள்ள உறவினரைப் பார்ப்ப தற்கென நேற்றுமுன்தினம் யாழ்ப்பா ணத்திலிருந்து புறப்பட்டுச் சென்றுள்ளார். இதனால் அவரது பாடசாலை செல்லும் இரண்டு பிள்ளைகளையும் அழைத்து வரும் பொறுப்பு அகிலாவிடம் விடப் பட்டது. பிற்பகல் 2.30 மணிக்கு பாட சாலைக்குச் சென்று சகோதரியின் மற்றைய மூத்த மகனை அழைத்துக் கொண்டு அகிலா வீடு திரும்பும் வழியிலேயே அவர் கொலை செய்யப்பட்டார்.
சம்பவத்தை நேரில் கண்ட சாட்சிகள் தெரிவித்ததாவது:
சிறுவன் கேட்டதனால் பஸ்ரியன் சந்தியிலுள்ள கடை ஒன்றில் மாங்காய் வாங்குவதற்காக அவர்கள் தரித்தனர். சிறுவன் கடைக்குள் நுழைய, அந்த இடத்திற்கு வந்த சத்தியன் தான் வைத் திருந்த கிறிஸ் கத்தியினால் அகிலாவின் கழுத்தில் ஓங்கி வெட்டியதோடு இடுப்புக்கு மேல் பகுதியில் கத்தியால் குத்தினான்.
கழுத்து வெட்டப்பட்ட அகிலா அலறித் துடித்தபடியே மண்ணில் சாய்ந்தார். சத்தம் கேட்டு கடைக்குள் இருந்து வெளியே வந்த சிறுவன் இந்தப் பயங் கரக் காட்சியைக் கண்டு அலறியபோது இளைஞன் சிறுவனையும்கத்தியுடன் துரத்தினான். மீண்டும் கடைக்குள் புகுந்த சிறுவன் உட்பக்க வாயிலின் ஊடாக ஓடித் தப்பினான். அவனைத் துரத்தியபடி கடைக்குள் நுழைந்த இளைஞன், துரத்தும் முற்சியைக் கைவிட்டு மேசையில் கத்தியைப் போட்டுவிட்டு வெளியே வந்து தனக் குத்தானே பெற்றோலைத் தனது உடல் முழுவதும் ஊற்றி தீ மூட்டினான். பற்றி எரிந்த தீயுடன் சென்று கீழே வீழ்ந்து கிடந்த அகிலாவையும் கட்டி அணைத்து மண்ணில் புரண்டான்.இந்தப் பயங்கரக் காட்சியைக் கண்ட வீதியால் சென்ற பொது மக்கள் விரைந்து செயற்பட்டு எரிந்து கொண்டிருந்த வர்கள் மீது மண் அள்ளி வீசியும் தண்ணீர் ஊற்றியும் தீயை அணைத்தனர்.
உடனடியாகவே இருவரும் ஓட்டோ ஒன்றில் சிகிச்சைக்கென யாழ். போதனா வைத்தியசாலைக்குக் கொண்டு செல்லப்பட்டனர். வைத்தியசாலையை அடைய முன்னரே அகிலா இறந்து விட்டார் என போதனா வைத்தியசாலை வட்டாரங்கள் தெரிவித்தன. கத்தி வெட்டினால் அவரது கழுத்தில் மூன்று அங்குல காயம் ஏற்பட்டது என்றும் அந்த வட்டாரங்கள் மேலும் கூறின.
சத்தியனின் உடலில் 80 வீதத்திற்கும் அதிகமான பகுதி தீயில் வெந்துள்ளது.இந்தச் சம்பவம் தொடர்பாக யாழ். பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர். சம்பவம் இடம் பெற்ற இடத்துக்குச் சென்ற பதில் நீதிவான் எம்.திருநாவுக்கரசு அங்கு விசார ணைகளை மேற்கொண்டார்.சம்பவ இடத்தில் அகிலா சென்ற மோட்டார் சைக்கிள் சேதத்துடன் விழுந்து கிடந்தது. அவருடையது எனச் சந்தேகிக் கப்படும் கை மணிக்கூடு ஒன்றும் அவ் விடத்தில் இருந்து எடுக்கப்பட்டது. விசாரணைகளின் பின்னர் பொலிஸார் மோட்டார் சைக்கிளை மீட்டு பொலிஸ் நிலையத்துக்குக் கொண்டு சென்றனர். கொலை செய்யப்பட்ட அகிலா திருமணமானவர். அவரது கணவர் வெளி நாட்டில் தொழில் புரிந்து வருகிறார். எதிர்வரும் டிசெம்பர் மாதம் அளவில் அவர் யாழ்ப்பாணம் வரவிருந்த நிலையில் இந்தச் சம்பவம் இடம்பெற்றுள்ளதாக அகிலாவின் தாயார் தெரிவித்தார்.




0 Responses to கழுத்து வெட்டப்பட்ட அகிலா அலறித் துடித்தபடியே மண்ணில் சாய்ந்தாள் (படம் இணைப்பு)