என் மகன் குற்றமற்றவன். அவனை விடுதலை செய்யுங்கள்’’ என்ற குரலோடு நீதி கேட்டு அற்புதம்மாள் நடக்கத் தொடங்கி, இருபது ஆண்டுகள் ஆகிவிட்டது. மகனின் தூக்குத்தண்டனை மீதான கருணை மனு நிராகரிக்கப்பட்ட நிலையில், இன்னமும் வேகத்தோடும், நம்பிக்கையோடும் அதிகாரத்தின் கதவுகளை தட்டத் தொடங்கியிருக்கிறார் அற்புதம்மாள்.
அற்புதம்மாள்?
முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தி கொலை வழக்கில் குற்றம் சாட்டப்பட்டு மரண தண்டனை விதிக்கப்பட்ட பேரறிவாளனின் தாயார். பத்தொன்பது வயதில் இவர் மகன் அறிவை விசாரணைக்கென அழைத்துச் சென்றது சி.பி.ஐ.! ராஜீவ் காந்தி கொலை வழக்கில் அவனுக்குத் தொடர்பு இருப்பதாக அவர்கள் சொன்னதும் அதிர்ந்து போனார் அற்புதம்மாள். தன் மகன் நிரபராதி என நிரூபிக்க இவர் மேற்கொண்ட போராட்டங்கள் யாரையும் கலங்க வைத்து விடுபவை.
மகனைநீதிமன்றத்தில் சந்திப்பது, மனுபோட்டுக் காத்திருந்து சிறையில் சந்திப்பது, வழக்கறிஞர்களைச் சந்திப்பது, மகனுக்கு ஆதரவு கேட்டு மாற்று இயக்கங்களைச் சந் திப்பது, கூடவே மகன் துவண்டு போகாமல் இருக்க அவனுக்கு நம்பிக்கையளிப்பது... இதைத்தவிர கடந்த இருபது ஆண்டுகளில் அற்புதம்மாள் தனக்காக எதையும் செய்து கொள்ளவில்லை. மகனுக்கு மரண தண்டனை அறிவிக்கப்பட்ட போதும், அவன் வழக்கில் இருந்து விடுதலையாகி விடுவான் என நம்பிக்கையோடுதான் இருந்தார்.
இப்போது பேரறிவாளனோடு சேர்ந்து முருகன், சாந்தன் ஆகியோரது மரண தண்டனை மீதான கருணை மனுவையும் தள்ளுபடி செய்து விட்டார் குடியரசுத் தலைவர் பிரதீபா பாட்டீல்.
காலில் ஒரு பழைய செருப்பு, தோளில் ஒரு கைப்பை, கண்களில் ஏக்கம் என இருபது ஆண்டுகளாக பேருந்தில், ரயிலில், நடந்து என மகனின் விடுதலைக்காக பயணி த்துக் கொண்டேயிருக்கும் அந்தத் தாயின் எஞ்சிய வாழ்க்கை என்பது மகனின் விடுதலை மட்டுமே! அது கேள்விக்குறியாகி இருக்கும் நிலையில் அற்புதம்மாளைச் சந்தித்தோம்.
“91-வது வருஷம் மே மாதம் ராஜீவ்காந்தி படுகொலை நடந்தது. நாங்கள், ‘இவ்வளவு பெரிய தலைவரை அநியாயமாக கொன்னுட்டாங்களே’ என ஆதங்கப்பட்டோம். நாங்கள் பெரியாரை படித்து அவர்வழி நடப்பவர்கள். ராஜீவ் கொலை தொடர்பாக திராவிடர் கழகத்தினர் வீடுகளில் விசாரணை நடந்தது. அதேபோல் ராஜீவ் கொலை நடந்து பத்து நாட்களுக்குப் பிறகு ஜோலார்பேட்டையில் உள்ள எங்கள் வீட்டுக்கு சி.பி.ஐ. அதிகாரிகள் வந்தார்கள். எங்க வீட்டு டி.வி மேல் இருந்த பிரபாகரன் படத் தைப் பார்த்தார்கள். எங்கள் மகனைப் பற்றி விசாரித்தார்கள்.
‘அவன் டிப்ளமோ எலக்ட்ரானிக்ஸ் படித்திருக்கிறான். இப்போது மேல்படிப்பு படிக்க பெரியார் திடலில் தங்கியிருக்கிறான்’ என்றோம். எங்களுக்கு மனம் கொள்ளாமல் திடலில் வந்து அறிவைச் சந்தித்தோம். குழந்தை முகத்தோடு சிரித்தபடியே எங்களோடு அன்றைய பொழுதைக் கழித்தான். அன்று மாலையே சி.பி.ஐ. அதிகாரிகளும் அங்கு வந்திருந்தார்கள். அதுதான் எங்கள் மகனோடு நாங்கள் கொஞ்சி மகிழ்ந்த கடைசி நாள்’’ கொஞ்சம் கலங்குகிறார்.
“ராஜீவ்காந்தி படுகொலைக்கு என் குழந்தைதான் பெல்ட் பாம் தயாரிச்சான் என குற்றம் சொன்னார்கள். அதற்காக ஒன்பது வால்ட் பேட்டரி ரெண்டு வாங்கினானாம். அதற்கான ரசீதும் காட்டினார்கள். எந்த பெட்டிக் கடையில் வாங்கும் பேட்டரிக்கு ரசீது கொடுக்கிறார்கள் என்று தெரியவில்லை. அவன் எந்தத் தவறும் செய்யாதவன். அவனை எப்படியெல்லாம் சித்திரவதை செய்து வாக்குமூலம் வாங்கினார்கள் என்பதை அவன் எழுதிய புத்தகத்தைப் படித்துத்தான் தெரிந்து கொண்டேன்’’ மீண்டும் கலங்குகிறார்.
‘‘பிறகு அவனை செங்கல்பட்டு சிறப்பு சிறைச்சாலையில் அடைத்தார்கள். அவனைப் பார்ப்பதற்காக தினமும் சிறைக்குப் போவேன். பெரும்பாலும் அவனை பார்க்க விட மாட்டார்கள். பழம், பிஸ்கட் வாங்கிட்டுப் போனால் அடுத்த வாரம்தான் அவனுக்குக் கொடுப்பார்கள். அதற்கான ரசீதை வாங்கிச் செல்லுமாறு சிறைத்துறை அதிகாரிகள் காக்க வைப்பார்கள். இருட்டிய பிறகுதான் கொடுப்பார்கள். அங்கிருந்து நான் வேலூர் ஜோலார்பேட்டைக்குச் செல்வேன்.
முதன்முதலில் என் மகனைப் பார்த்தபோது வெள்ளை சட்டை, அரைக்கால் டவுசர் போட்டிருந்தான். இது தண்டனைக் கைதிகளுக்கான உடை. அவன் மீது விசாரணை நடந்து கொண்டிருக்கும் போது, அவனைக் குற்றவாளி என முடிவு செய்து இந்த உடை கொடுத்ததை என்னால் தாங்கவே முடியவில்லை. சட்டரீதியாக பெரிய போராட்டம் நடத்தித்தான் இயல்பான ஆடை அணிய உத்தரவு வாங்கினேன்.
சிறையில் அவனைப் பார்க்கப் போனால் தூரத்தில் நிற்க வைத்து விடுவார்கள். தலையைத் தூக்கித்தான் பேச வேண்டியிருக்கும். ஒருநாள் அவனைப் பார்த்தபோது, நெற்றிப் பகுதியில் தழும்பு இருந்தது. கேட்டபோது, ‘கம்பியில் நெற்றியை சாய்த்துக் கொண்டே பேசுவதால் தழும்பு ஆகிவிட்டது’ என்றான். எனக்கு அழுகையே வந்துவிட்டது. அதைப்போல், கண்ணாடிக் கூண்டில் அவனை நிற்க வைத்து விடுவார்கள். இருவரும் சைகையில் தான் பேசிக் கொள்வோம். வழக்கறிஞர்களிடமும் அப்படித்தான் பேச அனுமதிப்பார்கள்’’ பெருமூச்சோடு நிறுத்தினார்.
மீண்டும் தொடர்ந்தார். ‘‘சிறையில் அடைக்கப்பட்ட ஒரு வருஷத்துக்குப் பிறகுதான் அவன் கை கட்டை விரலைப் பிடித்துக் கொண்டு பேசும் வாய்ப்பையே கொடுத்தார்கள். பிறகு அங்கிருந்து பூந்தமல்லிக்கு மாற்றினார்கள். அடுத்த எட்டு வருடங்கள் அவன் அங்கேயேதான் இருந்தான். உள்ளேயே கோர்ட் வேறு இருந்ததால் அவன் வெளி உலகத்தையே பார்க்க முடியவில்லை. நான் வாரந்தோறும் மனுபோட்டுக் காத்திருந்து அவனைப் பார்ப்பேன். பலநாட்கள் காத்திருக்க வைத்து விட்டு, அவனைப் பார்க்க விடாமல் திருப்பி அனுப்பி விடுவார்கள்.
அவனை சிறையில் பார்க்கும் போதெல்லாம் சிரித்தபடியேதான் பேசுவான். ஆனால் அவனை கட்டி வைத்து அடித்தது, நகத்தில் ஊசி ஏற்றியது, ஷூ காலால் மிதித்தது என சித்திரவதை செய்ததை அவன் எழுதிய புத்தகத்தில் படித்தபோது தாங்கவே முடியவில்லை’’ மீண்டும் கலங்குகிறார்.
‘‘99-வது வருஷம் என் குழந்தைக்குத் தூக்கு தண்டனையை உச்ச நீதிமன்றம் உறுதி செய்தது. ‘அறிவு நிரபராதி. உண்மைக் குற்றவாளிகளை எனக்குத் தெரியும்’ என்று பெங்களூரு ரங்கநாத் கூறியபோது சி.பி.ஐ. அதிகாரிகள் ஏற்றுக்கொள்ளவில்லை. ரங்கநாத்தை சோனியாவிடம் சொல்ல வைத்தது காங்கிரஸ் கட்சித் தலைவர் தங்கபாலுதான். இவர்களுக்கு உண்மை தெரிந்தும் என் மகனையும், முருகன், சாந்தனையும் பழி வாங்குகிறார்கள்.
என் மகன் குற்றமற்றவன் என்பதற்கு ஆதாரங்கள் இருக்கின்றன. முறையான விசாரணை நடத்தினால் அவன் வெளியே வந்து விடுவான். இதற்காக இந்த இருபது ஆண்டுகளில் எத்தனையோ பேரை சந்தித்து விட்டேன். சட்ட ரீதியாகவும், மனித உரிமைகள் படியும் எவ்வளவோ போராடி விட்டேன். இருபது ஆண்டு சிறையால் யாருக்கும் தடுமாற்றம் வரும். ஆனால், என் மகன் இன்னமும் சிரித்துக் கொண்டுதான் இருக்கிறான். சிறைக்குள் போகும்போது டிப்ளமோ முடித்திருந்தான். இப்போது பி.சி.ஏ., எம்.சி.ஏ., டூ வீலர் மெக்கானிசம், கம்ப்யூட்டர் மெக்கானிசம்னு என்னென்னமோ படிச்சிட்டான். என் மகனிடம் கல்வி கற்ற நாற்பது கைதிகள் பத்தாவது தேர்ச்சி பெற்று விட்டார்கள். பி.எச்டி படிக்க இக்னோ பல்கலைக்கழகத்தில் என் குழந்தையும், முருகனும் விண்ணப்பித்தார்கள். ஆனால், பிளஸ் 2 முடித்தால் மட்டுமே சேர்த்துக் கொள்வோம் என்று கூறியதால், தேர்வுத் துறையில் அனுமதி கேட்டான்.
அவர்களும் கொடுத்தார்கள். ஆனால், வேலூர் சிறைக் கண்காணிப்பாளர் தேர்வு எழுத மறுத்துவிட்டார். கேட்டதற்கு பாதுகாப்பு காரணம் என்று தன்னிச்சையாகக் கூறினார். இதைப் பற்றி அவர் சிறைத்துறை உயர் அதிகாரிகளிடம் சொல்லவில்லை. என் மகன் கேட்டதற்கு, ‘அடுத்த வருஷம் தேர்வை எழுது’ என்று கூறியிருக்கிறார். ஒரு வரு டம் என்பது சிறை வாழ்க்கையில் எவ்வளவு பெரிய விஷயம். அதைக்கூட அந்த அதிகாரி எவ்வளவு அலட்சியமாகச் சொல்கிறார் என்றபோது வயிறு பற்றி எரிந்தது.
‘நளினி, முருகன், சாந்தன், பேரறிவாளனைத் தூக்கில் போட எமக்கோ, எம் குடும்பத்தாருக்கோ சிறிதும் விருப்பமில்லை. இதுபற்றிய கருணை மனு வந்தால் ஜனாதிபதி பரிசீலிக்க வேண்டும்’ என சோனியா காந்தியே கே.ஆர்.நாராயணனுக்கு கடிதம் எழுதினார். ஆனால், வழக்கில் முதல் குற்றவாளியான நளினியின் தூக்கை மட்டும் குறை த்தவர்கள், 18-வது குற்றவாளியான என் மகனை கைவிட்டு விட்டார்கள்’’ என்றவர் அமைதியானார்.
இடைவெளி விட்டு தொடர்ந்தவர் குரலில் கோபம் இருந்தது. “இதற்குக் காரணம் கருணாநிதி செய்த அரசியல்தான். முதல்வர் என்ற முறையில் கருணாநிதியைச் சந்திக்க பலமுறை அனுமதி கேட்டோம். அவர் எங்களைச் சந்திக்கவே விருப்பப்படவில்லை. மத்திய அரசில் பதவிச் சுகத்தை அனுபவிப்பதற்காகவே இருந்து விட்டார். அவர் நினைத்திருந்தால் இந்த தண்டனையை நிறுத்தியிருக்க முடியும். அவரைக் காப்பாற்றிக் கொள்ள எங்களைப் பலிகடாவாக்கி விட்டார்’’ என்று ஆவேசப்பட்டார் அற்புதம்மாள்.
“தமிழ்நாட்டில் கலியபெருமாள், தியாகு, நளினி ஆகியோரின் தூக்கு தண்டனைகள் தமிழக அரசால் ரத்து செய்யப்பட்டிருக்கிறது. என் மகனின் விடுதலையும் முதல்வர் ஜெயலலிதா அவர்களின் கைகளில் இருக்கிறது. 21 ஆண்டுகளாக என் மகன் இளமைப் பருவத்தை இழந்து சிறையில் வாடுகிறான். அவனால் எங்கள் குடும்பத்தின் நிம்மதி போனது. தமிழக முதல்வர் ஜெயலலிதா மனது வைத்தால் எங்கள் குடும்பத்தில் இத்தனை ஆண்டுகளாக இல்லாத மலர்ச்சியை ஒரே உத்தரவில் கொண்டு வந்து விட முடியும்.
எங்கள் வீட்டில் மீண்டும் பேரறிவாளனின் சிரிப்பு கேட்கும் என்று நம்புகிறோம். இந்த ஏழைத்தாயை முதல்வர் ஏமாற்ற மாட்டார் என்று நம்புகிறேன்’’ என்று பேசி முடித் தபோது தாரை தாரையாக அற்புதம்மாளின் கண்களில் நீர் வடிந்தது.
‘‘இருபது ஆண்டுகளாக மரணத்தை எதிர்பார்த்துக் காத்திருப்பது மரணத்தை விட கொடுமையானது. அந்த மனவேதனைக்கு யாரும் நிவாரணம் கொடுத்து விட முடியாது. அதற்குப் பிறகும் மரண தண்டனை என்பது எந்த விதத்தில் நியாயம்?’’ என்கிறார்கள் மனித உரிமை ஆர்வலர்கள்.
‘‘எனக்கு மரண தண்டனை கொடுத்து விட்டீர்கள். என் மரணத்திற்குப் பிறகு நான் நிரபராதி என்று தெரிந்து விட்டால், போன என் உயிருக்கும், எனக்காகப் போராடிய என் தாய்க்கும் என்ன பதில் சொல்வீர்கள்’’ என்ற பேரறிவாளனின் கேள்விக்கு யார் பதில் சொல்வது?
0 Responses to பதவி சுகத்துக்காக எங்களை கைவிட்டார் கருணாநிதி!: அற்புதம்மாள்