சாந்தன், முருகன், பேரறிவாளன் ஆகியோரின் தூக்குதண்டனையை ரத்து செய்யக்கோரி தமிழ்நாடு முழுவதும் 28.08.2011 அன்று மனித சங்கிலி போராட்டம் நடத்துவது என்று பழ.நெடுமாறன் தலைமையில் நடந்த கூட்டத்தில் முடிவுசெய்யப்பட்டுள்ளது.
அனைத்துத் தமிழ்த் தேசிய அமைப்புகள், மனித உரிமை அமைப்புகள் ஆகியவற்றின் கூட்டம் சென்னையில் 19.08.2011 அன்று நடைபெற்றது. கூட்டத்திற்கு பழ.நெடுமாறன் தலைமை தாங்கினார். கூட்டத்தில் ம.தி.மு.க. பொதுச் செயலாளர் வைகோ, மக்கள் சிவில் உரிமைக் கழக தேசியச் செயலாளர் வி.சுரேஷ், இந்திய கம்யூனிஸ்டுக் கட்சியின் மாநில நிர்வாகக் குழு உறுப்பினர் லெனின், பெரியார் திராவிடர் கழகத் தலைவர் தா.செ.மணி, தமிழ்த் தேசப் பொதுவுடைமைக் கட்சிச் செயலாளர் பெ.மணியரசன், தமிழ்த் தேசிய விடுதலை இயக்கத் பொதுச் செயலாளர் தியாகு உள்பட 40க்கும் மேற்பட்ட அமைப்புகளைச் சேர்ந்தவர்கள் கலந்து கொண்டனர்.
கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் வருமாறு:
* ராஜீவ் கொலை வழக்கில் உச்சநீதிமன்றத்தினால் தூக்குத் தண்டனை உறுதி செய்யப்பட்ட சாந்தன், முருகன், பேரறிவாளன் ஆகிய மூவருக்கும் 11 ஆண்டுகளுக்குப் பிறகு அவர்களின் கருணை மனுக்களை குடியரசுத் தலைவர் தள்ளுபடி செய்திருப்பதைக் கண்டு இக்கூட்டம் வருந்துகிறது. இவர்களின் உயிர்களை எப்படியும் காப்பாற்ற வேண்டும் என முதல் அமைச்சர் ஜெயலலிதாவை இக்குழுவின் சார்பில் சந்தித்து வேண்டிக் கொள்வது என முடிவு செய்யப்பட்டது.
* மூன்று தமிழர்களின் மரண தண்டனையை தள்ளுபடி செய்ய வேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்தும் வகையில் சென்னையில் 22ந் தேதி பொதுக்கூட்டம் நடத்துவது எனவும், இக்கூட்டத்தில் பங்கேற்கும்படி அனைத்துக் கட்சித் தலைவர்களையும் அழைப்பது எனவும் முடிவு செய்யப்பட்டது.
* மூன்று தமிழர்களின் மரண தண்டனையை தள்ளுபடி செய்ய வேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்தும் வகையில் மாவட்டத் தலைநகரங்கள் அனைத்திலும் 26ந் தேதி மாலை 5 மணி முதல் 6 மணி வரை மனிதச் சங்கிலி இயக்கம் நடைபெறும். மூன்று தமிழர் உயிர்காப்பு இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளராக பழ.நெடுமாறன் தேர்வு செய்யப்பட்டார். மேற்கண்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
தூக்கு தண்டனையை ரத்து செய்யக்கோரி தமிழ்நாடு முழுவதும் மனித சங்கிலி போராட்டம்
பதிந்தவர்:
ஈழப்பிரியா
20 August 2011
0 Responses to தூக்கு தண்டனையை ரத்து செய்யக்கோரி தமிழ்நாடு முழுவதும் மனித சங்கிலி போராட்டம்