Content feed Comments Feed
    “சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”

தமிழரைப் பழிவாங்கும் வெறி இராணுவத்துக்கு இன்னமும் அடங்கவில்லை. கிறீஸ் பூத நடமாட்டத்துக்கும், அரச படையினருக்கும் சம்பந்தம் இல்லையெனில் இதுவரை இந்த அட்டகாசங்கள் ஏன் கட்டுப்படுத்தப்படவில்லை? என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு கேள்வி தொடுத்துள்ளது.

கிறீஸ் பூத விவகாரத்தைக் கட்டுப்படுத்த இயலாத பொலிஸும், இராணுவமும் தேவைதானாவென்றும் அது தெரிவித்துள்ளது.

கிறீஸ் பூத விவகாரம் குறித்து கூட்டமைப்பு நேற்று அறிக்கையொன்றை வெளியிட்டது.

அதில் கூறப்பட்டுள்ளதாவது:

ஒரு மாதத்துக்கு முன்பாக மலையகத்தில் ஆரம்பித்த கிறீஸ் பூதப் பயங்கரம் பின்பு அம்பாறை, மட்டக்களப்பு எனப் பரவி இப்பொழுது வட மாகாணத்தையும் வந்து சேர்ந்துள்ளது.

தமிழ் பேசும் மக்களை மையமாக வைத்தே அதிலும் குறிப்பாகப் பெண்களின் மீதே கிறீஸ் பூதம் அல்லது மர்ம மனிதன் என்ற இரத்தக் காட்டேறி அவிழ்த்துவிடப்பட்டுள்ளது.

மக்கள் ஒன்று திரண்டு சில இடங்களில் கிறீஸ் பூதங்கள் சிலவற்றைப் பிடித்திருக்கின்றனர். அவற்றைப் பொலிஸாரிடமும் இராணுவத்தினரிடமும் கையளித்தும் உள்ளனர். ஆனால், இவைகள் எல்லாம் கட்டுக்கதைகள் என்றும், வெறும் வதந்திகள் என்றும் நகைப்புக்கிடமாகக் பொலிஸாரும், இராணுவத்தினரும் மீண்டும் மீண்டும் சொல்லி வருகிறது.

பாதுகாப்புச் செயலாளர் இதில் 25 விழுக்காடு உண்மை! மீதி 75 விழுக்காடு வதந்தி என இஸ்லாமியப் பெரியார்களிடம் கூறியதாக ஊடகங்கள் தெரிவித்துள்ளன. இந்த 25 விழுக்காடு உண்மை என்ன? என்பது பற்றி இதுவரையில் மக்களுக்குத் தெளிவுபடுத்தப்படவில்லை.

வடக்கில் பொதுமக்களால் பிடித்து ஒப்படைக்கப்படும் மர்ம மனிதர்கள் எல்லோரும் பெரும்பான்மைச் சமூகத்தைச் சேர்ந்தவர்களாகவே உள்ளனர். இறுதியாக இவர்கள் மனநோயாளிகளாகச் சொல்லப்பட்டு விடுவிக்கப்படுகின்றனர்.

எங்கெங்கு கிறீஸ் மனிதனுக்கும், மக்களுக்கும் இடையில் கைகலப்புகள் ஏற்படுகிறதோ அங்கெல்லாம் ஆபத்பாந்தவன் போல் இராணுவத்தினர் உடனடியாகவே வந்து சந்தேகநபர்களைக் காப்பாற்றி விடுகின்றனர்.

ஆனால், இவர்களைப் பிடிக்க முயலும் அல்லது இவர்களைப் பிடித்து ஒப்படைக்கும் அப்பாவிப் பொதுமக்கள் பொலிஸாரினாலும், இராணுவத்தினராலும் மிருகத்தனமாகத் தாக்கப்படுகின்றனர். கிழக்கில் இருந்து வடக்கு வரை மக்களைக் கிலி கொள்ள வைக்கும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுகின்றன. இதனால் இருண்டால் எல்லோரும் அஞ்சி நடுங்கும் நிலை ஏற்பட்டுள்ளது.

கிறீஸ் பூதப் பயங்கரம் ஆங்காங்கே நிகழும் தற்செயல்களல்ல. இது நன்கு பயிற்றப்பட்டவர்களினால் திட்டமிடப்பட்ட முறையில் அரங்கேற்றப்பட்டுவரும் ஒரு நிகழ்ச்சி நிரலாகும்.

இதன் மூலம் தமிழ் மக்களின் உணர்வுகளைத் தூண்டி அவர்களை கோபம் கொள்ளச் செய்து, வீதிக்கு இழுத்து, அழித்தொழிப்பதுதான் இந்தத் திட்டத்தின் பின்னணியோ என்று ஐயங்கொள்ள வேண்டியுள்ளது.

இல்லையேல் படையினர் வீடு வீடாகச் சென்று மக்களை இழுத்துப்போட்டுத் தாக்கவேண்டிய தேவை எதுவும் இல்லை. தமிழரைப் பழிவாங்கும் வெறி இராணுவத்துக்கு இன்னமும் அடங்கவில்லை என்பது அப்பாவிகள் மீது அவர்கள் நடத்தும் மிருகத்தனமான தாக்குதல்களில் இருந்து புலனாகிறது.

அவசரகாலச் சட்டம் நீக்கப்பட்டதன் பிரதிபலிப்பு இதுதானா என்ற கேள்வியும் எழுகின்றது.

முப்படைகளுக்கும் தளபதியாக இருக்கும் ஜனாதிபதி இவற்றை உடனடியாக நிறுத்தி தமிழ் மக்களை அச்சத்தின் பிடியில் இருந்து விடுவிக்க நடவடிக்கைகளை மேற்கொள்ளவேண்டும் என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு கேட்டுக்கொள்கின்றது.

இவ்வாறு அந்த அறிக்கையில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளது.

0 Responses to எங்களது மக்களை பழிவாங்கும் வெறி இராணுவத்துக்கு இன்னமும் அடங்கவில்லை!

Post a Comment

Followers

தொடர்புக்கு: vannionline@gmail.com