Content feed Comments Feed
    “சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”

வன்னிப்பகுதியில் மீண்டும் மழை கொட்டித் தீர்த்து வருவதால் அங்குள்ள மக்கள் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளனர். வன்னிப் பகுதி முழுவதும் வெள்ளக்காடு சூழ்ந்துள்ளதால் ஏராளமான மக்கள் தம் இருப்பிடங்களை விட்டுப் பாதுகாப்பான இடங்களுக்கு நகர்ந்து சென்றுள்ளனர்.

ஏறக்குறைய 2,800 குடும்பங்களைச் சேர்ந்த 12 ஆயிரம் பேர் நேற்றிரவு வரை மழை வெள்ளம் காரணமாக இடம்பெயர்ந்துள்ளதாக பேரிடர் முகாமைத்துவப் பிரிவு தெரிவித்துள்ளது.

கிளிநொச்சி, முல்லைத்தீவு, மன்னார் போன்ற பகுதிகளில் கடந்த சனிக்கிழமை முதல் பெருமழை பெய்து வருகின்றது. இதனால் வன்னியில் தாழ்வான பகுதிகள் வெள்ளத்தில் மூழ்கியுள்ளன. அங்குள்ள நீர்த் தேக்கங்களும் நிறைந்துள்ளதால் அவற்றின் வான்கதவுகளும் திறக்கப்பட்டுள்ளன.

கிளிநொச்சி இரணைமடுக் குளத்தில் நீர் மட்டம் அதிகரித்துள்ளதால், அதன் 10 வான்கதவுகளும் திறக்கப்பட்டுள்ளன. இவ்வாறு நீர்த்தேக்கங்களின் வான்கதவுகள் திறக்கப்பட்டுள்ளதால் இன்னும் பல பகுதிகள் வெள்ளத்தில் மூழ்கும் அபாய நிலை ஏற்பட்டுள்ளது.

முல்லைத்தீவு மாவட்டத்திலுள்ள மிகப்பெரிய குளமான முத்துஐயன்கட்டுக் குளத்தின் கதவுகள் திறக்கப்பட்டு நீர் வெளியேற்றப்படுவதால் பேராற்றங்கரையில் வாழும் குடும்பங்கள் வெளியேறும் நிலை ஏற்பட்டுள்ளது.

குளத்திலிருந்து வெளியேற்றப்படும் மேலதிக நீர் பேராற்றில் கலக்கும்போது வெள்ள அபாயம் ஏற்படக்கூடிய வாய்ப்புக்கள் உள்ளமையால் பேராற்றங் கரையில் வசிக்கும் சுமார் 200 குடும்பங்களை அங்கிருந்து பாதுகாப்பான இடங்களுக்குச் செல்லுமாறு நீர்ப்பாசனத் திணைக்களம் ஒலிபெருக்கி மூலம் அறிவித்தல் விடுத்துள்ளது.

மேலும் வன்னியில் பல பகுதிகளில் வீதிகளை ஊடறுத்து, காட்டாறுபோல் வெள்ளம் பாய்ந்தோடிச் செல்வதால் அந்தப் பகுதிகளுக்கான போக்குவரத்துகளும் துண்டிக்கப்பட்டுள்ளன.

பல வீடுகளுக்குள் வெள்ளம் புகுந்ததால் மக்கள் பாதுகாப்பான பகுதிகளுக்கு இடம்பெயர்ந்து சென்றுள்ளனர். 2,800 குடும்பங்களைச் சேர்ந்த 12 ஆயிரம் பேர் நேற்றிரவு வரை இடம்பெயர்ந்துள்ளனர்.

இடம்பெயர்ந்தவர்களில் அனேகர் பேரிடர் முகாமைத்துவப் பிரிவால் அமைக்கப்பட்டுள்ள எட்டு இடைத்தங்கல் முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். ஏனையோர் பொதுமண்டபங்களிலும், ஆலயங்களிலும், உறவினர், நண்பர்கள் வீடுகளிலும் அடைக்கலம் புகுந்துள்ளனர்.

இடைத்தங்கல் முகாமில் தங்க வைக்கப்பட்டுள்ளவர்களுக்கு சமைத்த உணவு மற்றும் பாய், லாம்பு என்பவற்றை வழங்க கிளிநொச்சி மாவட்ட பேரிடர் முகாமைத்துவப் பிரிவு நடவடிக்கை எடுத்துள்ளது. தொடர்ந்தும் கடும் மழை பெய்து வருவதால் வெள்ளத்தால் இன்னும் மோசமான பாதிப்புகள் ஏற்படலாம் எனவும் தெரிவிக்கப்படுகிறது.

0 Responses to வன்னியில் கடும் மழை! வெள்ளம்! 2,800 குடும்பங்கள் இடம்பெயர்வு

Post a Comment

Followers

தொடர்புக்கு: vannionline@gmail.com