Content feed Comments Feed
    “சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”

இலங்கையின் மோசமான மனித உரிமை நிலைமைகள் தொடர்பில் சர்வதேச விசாரணையொன்றுக்கு தேவையான பொறிமுறையொன்றை முன்வைப்பதற்கு காலம் கனிந்துள்ளதாக பிரித்தானியா மீண்டும் தெரிவித்துள்ளது.

பிரித்தானியப் பாராளுமன்றத்தில் வெளிவிவகாரச் செயலாளர் வில்லியம் ஹெக் எழுத்து மூலம் முன்வைத்த அறிக்கையொன்றிலேயே இந்த விடயத்தினை குறிப்பிட்டுள்ளார்.

மனித உரிமைகள் மீறப்பட்டுள்ளமை தொடர்பில் பொறுப்புக்கூறலை உறுதிப்படுத்துவதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ளாவிடின், ஐக்கிய நாடுகளின் மனித உரிமை பேரவையில் சர்வதேச விசாரணையொன்றை இலக்காக கொண்டு பிரித்தானியா செயற்படும் என பிரதமர் டேவிட் கமரூன் ஏற்கனவே கருத்து வெளியிட்டிருந்தார். இந்த நிலையில், இலங்கை தொடர்ந்தும் நம்பகத்தன்மை வாய்ந்த விசாரணைக்கான உள்ளக பொறிமுறையை உருவாக்கவில்லை என்று வில்லியம் ஹெக் சுட்டிக்காட்டியுள்ளார்.

எனவே, இலங்கையின் மனித உரிமைகள் நிலைமை தொடர்பில் சர்வதேச பொறிமுறையொன்றை முன்னெடுக்கும் காலம் கனிந்துள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.

இலங்கை தொடர்பாக ஐக்கிய நாடுகளின் மனித உரிமைகள் பேரவையில் நிறைவேற்றப்படும் தீர்மானம் முழுமையான அனுமானங்களுக்கு அமைவாக இடம்பெறாமையால், சர்வதேச விசாரணைக்கான வலுவான தீர்மானத்திற்கு ஒத்துழைப்பை பெற்றுக் கொள்வதற்காக மனித உரிமைகள் பேரவையின் உறுப்பினர்கள் மற்றும் பிரதமர் டேவிட் கமரூன் ஆகியோருடன் பேச்சுவார்த்தை நடத்தப்போவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

கண்ணிவெடிகளை அகற்றல், மோதல்கள் இடம்பெற்ற பகுதிகளை புனரமைத்தல் மற்றும் சிறுவர் போராளிகளை சமூகமயப்படுத்தல் போன்ற விடயங்களில் இலங்கை அடைந்துள்ள முன்னேற்றங்கள் தொடர்பில் பிரித்தானியா இதற்கு முன்னர் தனது பாராட்டுக்களைத் தெரிவித்திருந்த போதிலும், நல்லிணக்கம் மற்றும் மனித உரிமை மீறல் தொடர்பான பொறுப்புக்கூறல் ஆகியவற்றில் திருப்திகரமான முன்னேற்றங்கள் அவசியமென வில்லியம் ஹெக் வலியுறுத்தியுள்ளார்.

நல்லிணக்க செயற்பாடுகளில் பொறுப்புக்கூறல் முக்கியமானது என்பதால், அதனை புறம்தள்ளிவிட முடியாதென சுட்டிக்காட்டியுள்ள அவர், அனைத்து இனங்களினதும் நியாயமான எதிர்பார்ப்புகள் குறித்து அவதானம் செலுத்த வேண்டியது இலங்கை தொடர்பான தீர்மானத்தின் நோக்கம் என்று மேலும் தெரிவித்துள்ளார்.

0 Responses to இலங்கை மீது சர்வதேச விசாரணைப் பொறிமுறைக்கான காலம் கனிந்துள்ளது - பிரித்தானியா

Post a Comment

Followers

தொடர்புக்கு: vannionline@gmail.com