தமிழீழத் தேச மக்களுக்கும் தமிழ்நாடு மற்றும் உலகத் தமிழ் உறவுகளுக்கும் வணக்கம் கூறிக்கொண்டு புதிய 2012 ஆம் ஆண்டினை உலகம் வரவேற்றுக் கொண்டாடும் இத் தருணத்தில் நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் சார்பில் எனது வாழ்த்துக்களையும் தெரிவித்துக் கொள்கிறேன்.
2012 ஆம் ஆண்டு ஈழத் தமிழர் தேசத்தினைப் பொறுத்தவரை முக்கியமான ஒரு ஆண்டு.
சிங்கள பௌத்த இனவாதத்தின் பிடியில் இருந்து தமிழீழ மக்கள் தம்மை விடுவித்துக் கொள்ளும் போராட்டத்தில் முன்னோக்கிய திக்கில் முக்கியமான சில காலடிகள் எடுத்து வைக்கப்பட வேண்டியதொரு ஆண்டு.
இந்தக் காலடிகள் தொடர்பாகவும் நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் செயற்திட்டங்கள் தொடர்பாகவும் எனது கருத்துக்களை இன்றைய நாளில் சுருக்கமாகப் பகிர்ந்து கொள்வது பொருத்தமானது எனக் கருதுகிறேன்.
2012 ஆம் ஆண்டை நாடுகடந்த தமிழீழ அரசாங்கம் அனைத்துலக விசாரணைகளுக்குரிய ஆண்டாகப் பிரகடனப்படுத்தியிருக்கிறது.
ஈழத்தமிழர் தேசத்துக்கெதிராகச் சிங்களம் புரிந்து வருவது இனப்படுகொலையே என்பதனையும் இறுதிக்காலகட்டப் போரில் சிங்களத்தால் மேற்கொள்ளப்பட்ட போர் மற்றும் மானிடத்துக்கு எதிரான குற்றங்கள் இவ் இன அழிப்பின் மூர்க்கமான ஒரு வடிவம்தான் என்பதனையும் நாம் அனைத்துலக அரங்கில் நிலை நிறுத்துவதில் புதிய ஆண்டில் முன்னேற்றம் காண வேண்டும்.
அனைத்துலக சமூகத்தின் மத்தியில் தற்போது ஈழத் தமிழர் தேசத்துக்கு எதிராகச் சிங்களம் மேற்கொள்வது இனப்படுகொலையே எனும் கருத்து இன்னும் வலுவடையவில்லை.
இவற்றை இறுதிக்காலகட்டப் போரில் நடைபெற்ற போர்க்குற்றங்களாகத்தான் அனைத்துலக சமூகம் நோக்குகிறது. நோக்க விரும்புகிறது.
அரசுகளாக இருந்தாலும் சரி - ஏனைய அனைத்துலக மனிதஉரிமை அமைப்புகளாக இருந்தாலும் சரி போர்க்குற்ற நிலைப்பாட்டின் அடிப்படையிலேயே இப் பிரச்சனையை அணுகுகின்றன.
அரசுகளின் நலன்களுக்கு முன்னுரிமை கொடுக்கப்படும் இன்றைய உலக ஒழுங்கில் சிறிலங்கா அரசின் இனஅழிப்பை இலகுவில் இனஅழிப்பாக ஏற்றுக்கொள்ளும் நிலையில் அனைத்துலக அரசுகள் இல்லை.
இச் சூழலில் ஈழத்தமிழர் தேசத்துக்கெதிராகச் சிங்களம் மேற்கொள்ளும் இனஅழிப்பை அனைத்துலக சமூகம் ஏற்றுக் கொள்ள வைப்பதென்பது நம்முன் இன்றுள்ள ஒரு பெரும் சவாலாகும்.
இச் சவாலை எதிர்கொள்வதற்கு நமது தொடர்ச்சியான செயற்பாடுகள் மிகவும் முக்கியமானவை. நீதியின் அடிப்படையில் இயங்கும் உலக மக்களின் ஆதரவைத் திரட்டுதலும் இவ் ஆதரவுத்தளத்துடன் அரசுகளின் நிலைப்பாடுகளில் மாற்றங்களை ஏற்படுத்தித் தொடர்ச்சியாகச் செயற்படுதலும் மிகவும் முக்கியமானவையாகும்.
இத் தொடர்ச்சியான செயற்பாடுகளுக்கான தளமாக நாடுகடந்த தமிழீழ அரசாங்கம் இனஅழிப்பு குறித்துச் செயற்படுவதற்கான நிபுணர்குழுவை உருவாக்கியுள்ளது.
நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் மூன்றாவது அமர்வுக்காலத்தில் இந் நிபுணர்குழு சிறிலங்கா அரசின் ஈழத் தமிழர் தேசம் மீதான இனப்படுகொலையினை அனைத்துலக அரங்கில் நிலைநிறுத்தும் செயற்பாடுகளுக்கான மூலோபாயங்கள் தந்திரோபாயங்கள் குறித்து ஆராய்ந்திருந்தது.
இதன் அடிப்படையில் தொடர்ச்சியான செயற்பாடுகளை இந் நிபுணர்குழு 2012 ஆண்டிலிலிருந்து முன்னெடுக்கிறது.
தமிழீழ விடுதலைப்போராட்டத்தின் அடுத்தகட்ட நகர்வில் சிங்களத்தின் இனப்படுகொலைக்கு எதிராக அனைத்துலக ஆதரவினைத் திரட்டிக்கொள்வதும் முக்கியமான இடத்தைப் பெற வேண்டியது.
2012 ல் சிறிலங்கா அரசுக்கெதிரான போர்க்குற்றங்கள் என்ற நிலைப்பாட்டினை இனப்படுகொலையாக மாற்றியமைப்பதில் ஈழத் தமிழர் தேசம் முன்னுரிமை கொடுத்துச் செயலாற்ற வேண்டும்.
ஈழத் தமிழர் தாயகத்திலும் சிங்களத்தின் இனஅழிப்பின்பாற்பட்ட நடவடிக்கைகளுக்கெதிரான நேரடியான போராட்டங்களை ஈழத் தமிழர் தேசம் மேற்கொள்வதில் 2012 ஆம் ஆண்டு காத்திரமான பதிவுகளை மேற்கொள்ள வேண்டும்.
இதற்கு மக்களை அணிதிரட்டுவதிலும் நேரடியான போராட்ட நடவடிக்கைகளுக்குத் தலைமை வகிப்பதிலும் தாயகத் தலைவர்களின் பங்கு மிகவும் முக்கியமானது.
தாயகத்தில் இருந்து அண்மையில் வெளியாகியிருந்த சிவில் சமூகத்தின் அறிக்கையும் இத்தகைய நேரடிப் போராட்டங்களுக்கு மக்கள் மத்தியில் இருக்கக்கூடிய ஆதரவுக்குக் கட்டியம் கூறுவதாக அமைந்துள்ளது.
தாயகத்தில் நடைபெறும் போராட்டங்களைப் புலத்திலும் தமிழகத்திலும் விரிவுபடுத்துவதில் நாடு கடந்த தமிழீழ அரசாங்கம் தனது பங்களிப்பினை வழங்குவதற்குத் தயாராகவுள்ளது.
சிறிலங்கா அரசுடன் தாயகத் தமிழ்த் தலைவர்கள் நடாத்தி வரும் பேச்சுவார்த்தைகள் 2012 ல் நெருக்கடிநிலையினைச் சந்தித்து இப்போது முறிவடையும் நிலை தோற்றம் பெறக்கூடிய சூழல் உள்ளது.
அனைத்துலக சமூகத்தின் துணையுடன் சிங்களத்தைப் பேச்சுவார்த்தைகளில் அடிபணிய வைக்க முயலும் தாயகத் தமிழ்த் தலைவர்களின் முயற்சியினை சிங்களம் முறியடிக்கவே செய்யும்.
இத்தகைய சூழலில் ஈழத் தமிழர் தேசம் தனது உரிமைக்குரலை தாயகத்தில் உரத்து எழுப்ப நேரடியான போராட்டங்கள் மிகவும் அவசியமானவை.
இத்தகைய மக்கள் போராட்டங்களை வரலாறு 2012 ஆம் ஆண்டில் பதிவு செய்யும் என்று நாம் நம்புகிறோம்.
தாயகத்தில் பேச்சுவார்த்கைளில் ஏற்படும் தோல்விகள் தமிழீழத் தனியரசு என்ற நிலைப்பாட்டை வலுப்படுத்தத் துணைபுரியும்.
இது 2012 ஆம் ஆண்டில் ஈழத் தமிழர் தேசத்தின் அரசியல் பெருவிருப்பான தமிழீழத் தனியரசு குறித்த ஆதரவுத்தளத்தை அனைத்துலக அரங்கில் விரிவுபடுத்த உதவும்.
நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் மூலோபாயாத்தின் அடிப்படையில் அரசாங்கத்தை ஒரு வலுமையமாக உருவாக்கிக் கொள்வதில் 2012 ம் ஆண்டு நாம் ஒரு படி முன்னேறுவோம் எனத் திடமாக நம்புகிறோம்.
நாடுகடந்த தமிழீழ அரசாங்கம் உருவாக்கப்பட்டதிலிருந்து நாம் படிப்படியாக நமது செயற்பாடுகளை விரிவுபடுத்தி வருகிறோம். அனைத்துலக அரங்கில் உறவுகளை விரிவுபடுத்துவதிலும் முன்னேற்றம் கண்டு வருகிறோம்.
தென் சூடான் அரசாங்கம், வடஅயர்லாந்து அரசாங்கம், தென் ஆபிரிக்காவின் ஆபிரிக்க தேசிய காங்கிரஸ் உட்பட பல அரசியல் அமைப்புக்கள், அரசியல் தலைவர்கள், அறிஞர்கள் போன்றவர்களுடன் நாடு கடந்த தமிழீழ அரசசாங்கம் தொடர்புகளை மேற்படுத்திப் பேணி வருகிறது. இத்தகைய தொடர்புகளை 2012 ல் நாம் மேலும் விரிவுபடுத்துவோம்.
இவை நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தினை ஒரு வலுமையமாக ஆக்கிக் கொள்வதற்குத் துணை நிற்கும். நாடுகடந்த தமிழீழ அரசாங்கம் வலுமையமாகத் தன்னை ஆக்கிக் கொள்வதில் தமிழ்நாட்டில் எமது அரசாங்கம் தன்னை வலுவுள்ள அமைப்பாக ஆக்கிக் கொள்வதும் முக்கியத்துவம் வாய்ந்தது.
நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் 2012 ம் ஆண்டுக்கான செயற்பாடுகளில் தமிழகத்திலும் இந்தியாவின் ஏனைய மாநிலங்களிலும் செயற்பாடுகளை விரிவுபடுத்துவது முக்கியத்துவம் பெறும்.
தாயகத்தில் சிங்களத்தின் இனஅழிப்புக்கு எதிராhன நேரடிப் போராட்டங்களும், அனைத்துலக அரங்கில் தமிழீழத் தனியரசு குறித்த நிலைப்பாட்டுக்கு ஆதரவு திரட்டும் செயற்பாடுகளும், சிங்களத்தின் போர்க்குற்றங்களை இனஅழிப்பாக வெளிப்படுத்துவதும், சிங்களத்தை அனைத்துலக விசாரணைக்குட்படுத்தும் முயற்சிகளை வலுப்படுத்தும் செயற்பாடுகளும் - இவை அனைத்தும் இணைந்த வகையில் 2012 ல் ஈழத் தமிழர் தேசம் தனது விடுதலைப்பயணத்தில் முக்கியமான காலடிகளை எடுத்து முன்னோக்கி வைக்கும் எனத் திடமான நம்புவோம்.
இதற்குரிய நடவடிக்கைகள் அனைத்தையும் நாடு கடந்த தமிழீழ அரசாங்கம் 2012 ல் உறுதியாக மேற்கொள்ளும் என இத் தருணத்தில் வெளிப்படுத்திக் கொள்கிறேன்.
தமிழரின் தாகம் தமிழீழத் தாயகம்!
விசுவநாதன் ருத்ரகுமாரன்
பிரதமர்
நாடுகடந்த தமிழீழ அரசாங்கம்
புதிய ஆண்டினை அனைத்துலக விசாரணைகளுக்குரிய ஆண்டாகக் கொண்டு செயற்படுவோம்! மக்கள் போராட்டங்களை வலுப்படுத்துவோம்!
பதிந்தவர்:
தம்பியன்
01 January 2012
0 Responses to புதிய ஆண்டினை அனைத்துலக விசாரணைகளுக்குரிய ஆண்டாகக் கொண்டு செயற்படுவோம்! மக்கள் போராட்டங்களை வலுப்படுத்துவோம்!