விடுதலைப்புலிகளுக்கு எதிராக நடத்தப்பட்ட போர் முடிவுக்கு வந்து மூன்று ஆண்டுகளை எட்டப் போகிறது. போரில் இடம்பெற்ற மனித உரிமை மீறல்கள் பற்றிய குற்றச்சாட்டுகள் இப்போதும் அவ்வப்போது வந்து அரசாங்கத்தை கலக்கிக் கொண்டு தான் இருக்கின்றன.
போர் ஒன்றின் போது மனித உரிமைகள் மீறப்படுவது ஒன்றும் ஆச்சரியமான விடயம் அல்ல. (இது போரின் போதான மனித உரிமை மீறல்களை நியாயப்படுத்தும் கருத்தல்ல.)
போரின் போது, பொதுமக்கள் கொல்லப்படுவது, இலக்கு வைக்கப்படுவது, கைதுசெய்யப்படுவது, கைதிகள் சித்திரவதைக்கு உட்படுத்தப்படுவது, சட்டத்துக்குப் புறம்பாகக் கொல்லப்படுவது என்று பல்வேறு விதமான போர் தொடர்பான குற்றங்கள் இடம்பெறும்.
எந்தவொரு போருமே, போர் தொடர்பாக வரையறுக்கப்பட்ட ஐ.நா. விதிமுறைகளின் அடிப்படையில் நடத்தப்படுவதில்லை.
ஒரு மனிதனை இன்னொரு மனிதன் கொல்வது, மனித உரிமை மீறலாகக் கருதப்படுகிறது.
இந்தநிலையில், இன்னொரு மனித உயிரைக் குடிப்பதை அடிப்படை நோக்கமாகக் கொண்டு நடத்தப்படும் போரை எந்த வகையிலும் நியாயப்படுத்த முடியாது.
அந்தவகையில், விடுதலைப் புலிகளுக்கு எதிராக நடத்தப்பட்ட போரும் எந்த விதிவிலக்குமற்றதே.
இதனை மனிதாபிமான நடவடிக்கை என்று நியாயப்படுத்துகிறது அரசாங்கம்.
அரசாங்கம் சொல்வது போன்று இது மனிதாபிமானப் போராக இருந்தாலும் கூட, மனித உயிர்களைக் குறிவைத்தே இது நடத்தப்பட்டது.
இந்தப் போரிலும் மனித உரிமைகள் மீறப்பட்டன. அதில் எந்த மாற்றுக் கருத்துக்கும் இடமிருக்க முடியாது.
முன்னர் இதனை மறுத்தாலும், இப்போது அரசாங்கமே மனித உரிமை மீறல்கள் சில நடந்திருக்க வாய்ப்புகள் உள்ளன என்று கூறும் நிலைக்கு வந்திருக்கிறது.
ஆனாலும் இந்தப் போரின் போது படையினரால் பொதுமக்கள் திட்டமிட்டுக் கொல்லப்படவில்லை, இலக்கு வைக்கப்படவில்லை என்று நல்லிணக்க ஆணைக்குழு தெளிவாகச் சுட்டிக்காட்டியுள்ளது.
போரின் இறுதிக்கட்டத்தில் மட்டுமன்றி, நான்காவது கட்ட ஈழப்போரின் போது, பல்வேறு தாக்குதல்களில் வடக்கிலும் கிழக்கிலும் கொல்லப்பட்ட தமிழர்கள் பற்றிய கணக்குகள் எதையும் நல்லிணக்க ஆணைக்குழு கவனத்தில் கொள்ளவில்லை.
குறிப்பாக போர் முற்றாக வெடிக்காத காலப்பகுதியில், இருதரப்பும் ஒரு நிழல் யுத்தத்தில் ஈடுபட்டன.
தமிழ் தீவிர யுத்தம் என்று அழைக்கப்பட்ட இந்த மறைமுகப் போர் ஏட்டிக்குப் போட்டியாக உயிர்களைப் பலிவாங்கியது.
பெரும்பாலான கொலைகள் இடம்பெற்றது யாழ்ப்பாணம் மற்றும் மட்டக்களப்பில் தான்.
புலிகளின் ஆதரவாளர்கள், அனுதாபிகள் என்று சந்தேகிக்கப்பட்டோரும், அரசபடை உளவாளிகள் என்று கருதப்பட்டோரும் கண்டபடி சுட்டுத் தள்ளப்பட்டனர்.
யார் இதைச் செய்தனர் என்று விசாரணைகள் நடத்தப்படவும் இல்லை.
இது பற்றிய பொலிஸ் விசாரணைகளில் எந்த முன்னேற்றம் ஏற்படவும் இல்லை.
இனந்தெரியாதோரால் சுட்டுக்கொலை என்று கூறப்பட்டு கதை முடிக்கப்பட்டது.
அவ்வாறு கொல்லப்பட்ட நூற்றுக்கணக்கானோர் பற்றிய எந்தக் குறிப்புகளையும் நல்லிணக்க ஆணைக்குழு கவனத்தில் எடுக்கவில்லை.
புலிகளால் கொல்லப்பட்ட சிங்களப் பொதுமக்களின் கணக்குகளை விலாவாரியாக சேர்த்துள்ள ஆணைக்குழு, தமிழர்கள் எவருமே படுகொலை செய்யப்படவில்லை என்பது போன்று கணக்குக் காட்டியுள்ளது.
நல்லிணக்க ஆணைக்குழு மட்டுமன்றி, போர் தொடர்பாக அரசாங்கம் வெளியிட்ட பல அறிக்கைகளில் கூட தமிழ் பொதுமக்கள் கொல்லப்பட்டது பற்றிய எந்தவொரு விபரத்தையும் காணமுடியவில்லை.
வன்னியில் ஆட்டிலறித் தாக்குதல்களின் போதும் விமானத் தாக்குதல்களின் போதும் பொதுமக்கள் பெருமளவில் கொல்லப்பட்டனர்.
அத்தகைய ஒரு சம்பவத்தைக் கூட அரசாங்கம் வெளியிட்ட எந்தவொரு அறிக்கையும் கணக்கில் சேர்க்கவில்லை. போரின் போது துல்லியமான தகவல்களைத் திரட்டி தாக்குதல்களை நடத்தியதால், பொதுமக்களுக்கு சேதங்கள் ஏற்படவில்லை என்பது போன்று நல்லிணக்க ஆணைக்குழு அறிக்கை கூறுகிறது.
ஆளில்லா வேவு விமானங்களும், செய்மதிப் படங்களும், ஆழ ஊடுருவும் அணிகளும் இலக்குகளை துல்லியப்படுத்திக் கொடுத்ததாக இந்த அறிக்கை கூறுகிறது.
ஆனால், இன்றைய நவீன உலகில் உள்ள ஆகப் பிந்திய தொழில் நுட்பங்களைக் கொண்ட எந்தவொரு போராயுதம் 100 வீதம் துல்லியமாக செயற்பட்டதாக வரலாறு இல்லை.
உலகின் அதிநவீன தொழில் நுட்பத்தைக் கொண்டுள்ள அமெரிக்கா கூட, தவறான இலக்குகளை பலமுறை தாக்கியுள்ளது. இதற்கு ஆகப் பிந்திய உதாரணம், பாகிஸ்தான் படையினர் மீது அண்மையில் நேட்டோப் படைகள் நடத்திய வான் தாக்குதல்.
இந்த நிலையில் 100 வீதம் துல்லியமாகத் தாக்குதல் நடத்தியதாக அரசதரப்புக் கூறும் நியாயத்தை எந்தவொரு இராணுவ விற்பன்னராலும் ஏற்றுக் கொள்ளப்படாது.
அதுபோலத் தான் போரின்போது எந்தக் குற்றங்களும் நிகழவில்லை என்ற சாட்சியங்களும், கூற்றுகளும் அடிப்படையில் பொய்யானவை.
இவை போர்க்குற்றங்களையும் மீறல்களையும் மறைக்கும் நோக்கம் கொண்டவை.
அரசாங்கம் போர்க்குற்றங்களையும் அது தொடர்பாக முன்வைக்கப்படும் ஆதாரங்களையும் பொய் அல்லது போலி என்கிறது. இவற்றில் முக்கியமானது போரின் இறுதிக்கட்டத்தில் சரணடைய முன்வந்த புலிகளின் முக்கிய தலைவர்கள் கொல்லப்பட்டது தொடர்பான விடயமாகும்.
சர்வதேச அனுசரணை ஒன்றின் பேரில் சரணடைய முன்வந்த புலிகளின் தளபதிகள் சடலமாக மீட்கப்பட்டனர்.
அவர்கள் சரணடையச் சென்றதைக் கண்ட பலரும் ஏற்கெனவே சாட்சியம் அளித்துள்ளனர். இது பொய் என்கிறது அரசாங்கம். அவர்கள் போரில் கொல்லப்பட்டதாகவும் அது கூறுகிறது.
ஆனால், இப்படியொரு சம்பவம் இடம்பெற்றதாகக் கூட, நல்லிணக்க ஆணைக்குழு தமது அறிக்கையில் பதிவு செய்யவில்லை. ஆனால், போரில் சரணடைய முன்வந்த புலிகள் கொல்லப்பட்டதாகவும், அதற்கான உத்தரவைப் பாதுகாப்புச் செயலர் கோத்தபாய ராஜபக்சவே களமுனையில் இருந்த படைத்தளபதி ஒருவருக்கு விடுத்ததாகவும் இராணுவ உயர் அதிகாரி ஒருவரே வெளிநாட்டு ஊடகங்களிடம் சாட்சியம் அளித்துள்ளார்.
அமெரிக்காவில் தஞ்சமடைந்துள்ள இந்த அதிகாரி போர் முடிவுக்கு வந்த பின்னர் மேஜர் ஜெனரலாக பதவி உயர்த்தப்பட்டவர்.
அரசியல் ஆர்வம் கொண்டிருந்த அந்த மேஜர் ஜெனரல் மீது ஒழுக்காற்று நடவடிக்கை எடுக்கப்பட்ட போது தப்பிச்சென்று அமெரிக்காவில் தஞ்சமடைந்தவர் என்கிறது படைத்தரப்பு.
அமெரிக்காவில் அரசியல் தஞ்சம் பெறுவதற்காக அவர் அற்பத்தனமாக பொய் கூறியுள்ளார் என்கிறது அரசாங்கம்.
ஆனால், இந்த நியாயத்தை சர்வதேச சமூகம் ஏற்கும் என்று கூறமுடியாது.
போர் முடிவுக்கு வந்த பின்னர் அரசாங்கம் தனக்கு சார்பாகச் செயற்படாத படை அதிகாரிகளைப் பந்தாடியது ஒன்றும் இரகசியமான விடயம் அல்ல.
குறிப்பாக சரத் பொன்சேகாவின் விசுவாசிகள் என்று அடையாளம் காணப்பட்டவர்கள் அதிரடியாக வெளியேற்றப்பட்டனர். அப்படி வெளியேற்றப்பட்டவர்கள் பலர், போர்க்குற்றங்கள் பற்றி சாட்சியமளிக்க முன்வரலாம்.
அப்படியான சாட்சியங்களை பொய்யானது என்றோ, வேறு காரணங்களைக் கூறியோ நிராகக்க முடியாது. போர்க்குற்றங்கள் பற்றிய எந்தவொரு சாட்சியத்தையும் சர்வதேச சமூகம் புறமொதுக்கவும் மாட்டாது.
அதற்கு வேறு சாயம் பூசப்படுவதையும் ஏற்றுக் கொள்ளவும் மாட்டாது.
அத்தகைய முயற்சிகளை அரசாங்கம் மேற்கொள்ளும் போது, அதன் மீதான சந்தேகங்கள் தான் மேலும் வலுப்பெறும்.
போரின்போது நடந்த உண்மைகளை வெளியிடுவதாகக் கூறி ஏற்கனவே பாதுகாப்பு அமைச்சு அறிக்கை ஒன்றை வெளியிட்டது. இப்போது முப்படைகளும் சேர்ந்து மற்றொரு அறிக்கையைத் தயாரித்து முடித்துள்ளன.
இவையெல்லாம் போர்க்குற்றங்கள் ஒன்றும் நடக்கவேயில்லை என்பதை நிரூபிப்பதற்கான முயற்சிகளே.
என்னதான் இருந்தாலும் போரின் உண்மைப் பரிமாணங்களைப் பற்றி வெளிப்படையாகப் பேசுகின்ற ?? அதுபற்றி விசாரிக்கின்ற அணுகுமுறைக்கு இன்னமும் அரசாங்கம் இறங்கி வரவில்லை.
அவ்வாறு வெளிப்படைத் தன்மையைக் கடைப்பிடிக்க அரசாங்கம் முன்வந்திருந்தால், நல்லிணக்க ஆணைக்குழுவின் அறிக்கையில் நடேசன், ரமேஸ், புலித்தேவன் போன்றோர் சரணடைய வந்த போது கொல்லப்பட்ட விவகாரம் பற்றிக் குறிப்பிடப்பட்டிருக்கும்.
நல்லிணக்க ஆணைக்குழுவின் அறிக்கையில் போரின் பின்னால் இருந்த மறுபக்கம் முற்றாகவே கழுவி வெள்ளையடிக்கப்பட்டு விட்டது.
இதனால் தான் இந்த அறிக்கை பக்கச்சார்பானதாகவும், ஐ.நாவிடம் இருந்து அரசாங்கத்தைப் பாதுகாக்கும் நோக்கத்தைக் கொண்டதென்றும் விமர்சிக்கப்பட்டுள்ளது.
போர்க்குற்றங்கள் மீதான நடவடிக்கைகள் ஒரு சில நாட்களிலோ, மாதங்களிலோ மேற்கொள்ளப்படுவதில்லை.
கம்போடியாவில் பல தசாப்தங்களுக்கு முன்னர் நடந்த படுகொலைகளுக்காக கெமர்ரூஜ் தலைவர்கள் மீது இப்போது தான் போர்க்குற்றத் தண்டனைகள் விதிக்கப்பட்டன.
ருவாண்டாவிலும், பொஸ்னியாவிலும் இனப்படுகொலைகளை செய்தவர்களுக்கும் அண்மைக்காலத்தில் தான் தண்டனைகள் அறிவிக்கப்பட்டன.
எனவே, வன்னியில் நடந்து முடிந்த போரின் போது இடம்பெற்ற மீறல்களை மறைத்து விடலாம் என்று எவரும் கருதினால் அது முட்டாள்தனமானது.
ஏனென்றால் சர்வதேச சமூகத்திடம் போரின்போது இடம்பெற்ற சம்பவங்கள் பற்றிய ஏராளமான ஆதாரங்கள் உள்ளன. நேரடி சாட்சிகள் மட்டு மின்றி, செய்மதிப் படங்களும் சான்றுகளும் கூட உள்ளன.
இவையெல்லாம் முழுமையாகப் பயன்படுத்தப்பட்டு அரசின் மீது நெருக்கடி கொடுக்கப்படவில்லை.
இருதரப்புமே போர்க் குற்றங்களை இழைத்துள்ளதாகக் கூறப்படுகின்ற நிலையில், அதை ஏற்றுக் கொண்டு விசாரணைகளை நடத்தும் அளவுக்குப் பெருந்தன்மையை வெளிப்படுத்த அரசாங்கம் முன்வராது போனால், ஆபத்தான அணுகுமுறைகளுக்கு முகம் கொடுக்க வழிசமைத்து விடக் கூடும்.
சுபத்ரா
0 Responses to போர்க்குற்ற விசாரணைகளுக்கு இணங்காமல் தப்ப முடியுமா? - சுபத்ரா