ஈழத் தமிழர்களுக்கும், உலகத் தமிழர்களுக்கும் பெரும் சவால்கள் நிறைந்த ஆண்டாகவே இப்புத்தாண்டு இருக்கப் போகின்றது. தமிழீழ விடுதலை ஒன்றே உலகத் தமிழர்களுக்கான மீள் கௌரவத்திற்கான திறவுகோல் என்பதை யாரும் மறந்துவிடக் கூடாது என புத்தாண்டு வாழ்த்துச் செய்தியினை பிரான்ஸின் தமிழீழ மக்கள் பேரவை தெரிவித்துள்ளது
மேலும், தமிழீழ மக்கள் பேரவையின் புத்தாண்டு வாழ்த்துச் செய்தியில் பின்வருமாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.
பிறக்கும் புது வருடம் தமிழர்களுக்கு சவால் மிகுந்த வருடமாகவே இருக்கப் போகின்றது. தமிழீழம் மட்டுமல்ல, தமிழகமும் நீதி கோரும் போராட்டத்தினுள் தள்ளப்பட்டுள்ளது. ஈழத் தமிழர்களுக்கான நீதிக்கான குரல்கள் ஓங்கி ஒலிக்கும் காலத்தில் தமிழக மக்களது உணர்வுகள் பல திசைகளிலும் திட்டமிட்ட வகையில் சிதறடிக்கப்பட்டு வருகின்றது.
ஈழத் தமிழினத்தின் விடுதலைக்கான ஆதார சக்தியாகத் திரண்டெழுந்த தமிழகத்தின் மீது மத்திய நடுவண் அரசு வலிந்து பல தாக்குதல்களைத் தொடுத்துள்ளது. ராஜீவ் கொலைக் குற்றவாளிகளாக அறிவிக்கப்பட்ட முருகன், சாந்தன், பேரறிவாளன் ஆகிய மூவருக்கும் 20 வருட சிறை வாழ்க்கையின் பின்னர் தூக்குத் தண்டனையை அறிவித்தது.
கூடாங்குளம் அணு உலை குறித்த பிரச்சினைகளை தீர்க்கப்படாத போர்க் களமாக மாற்றியது. தற்போது, காங்கிரஸ் ஆட்சி நடைபெறும் கேரளா ஊடாக முல்லைப் nரியாறு அணை விவகாரத்தைக் கிளப்பி இன்னொரு போர்க் களத்தை உருவாக்கியுள்ளது.
ஈழத் தமிழர்களது அவலங்களுக்கான தீர்வுக்காக அணி திரளவேண்டிய தமிழக மக்களை தங்களுக்கான போராட்டத்திற்குள் சிறைப்பிடிப்பதன் ஊடாக சிங்கள தேசத்தின் நிகழ்ச்சி நிரலுக்குச் சிதைவில்லாமல் பாதுகாக்கும் கைங்கரியத்தைத் தமிழர் விரோத காங்கிரஸ் ஆட்சியாளர்கள் மிகவும் கச்சிதமாக அரங்கேற்றி வருகின்றார்கள். இது ஈழத் தமிழர்கள் மீதான சிங்கள தேசத்தின் இன அழிப்பு நடவடிக்கைக்கான களத்தை விசாலப்படுத்தியுள்ளது.
இந்த நிலையிலும், சிங்கள தேசத்தின் இன அழிப்பு யுத்தத்தாலும் அடக்குமுறைகளாலும், தொடர் வன்முறைகளாலும், திட்டமிட்ட கலாசாரச் சீரழிவுகளாலும் சிதைக்கப்பட்ட தமிழினம் தட்டுத் தடுமாறி எழுந்து நிற்க முயற்சி செய்கின்றது.
சிங்கள தேசத்தின் அடக்குமுறைக்கும் நீதியை வழங்க மறுக்கும் சிங்கள ஆட்சியாளர்களின் கொடூரங்களுக்கும் எதிரான உணர்வுகள் தமிழீழ மண்ணில் மீண்டும் வெடித்துக் கிளம்ப ஆரம்பித்துவிட்டன. சிங்கள பெரும் தேசியவாதத்தின் கொடூர சிந்தனைகள் அச்சப்படுத்தல்களிலிருந்து ஈழத் தமிழர்களை திமிறி எழ வைத்துள்ளது.
எந்த வகையான திட்டமோ, இலட்சியமோ, நிபந்தனைகளோ அல்லாத கண்கட்டுப் பேச்சுவார்த்தைகளினால் எந்தப் பலனும் கிடைக்காது என்பதனால், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின்மீது சிவில் சமூதாயம் முன்வைத்த குற்றச்சாட்டு, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பை உலுக்கி எடுத்துள்ளது.
முதுகெலும்பை நிமிர்த்தி ஈழத் தமிழர்களுக்கான வாழ்வுரிமை குறித்து உண்மையாகவே பேசக் கூடிய கட்டாயத்தை அவர்களுக்குக் கொடுத்துள்ளது. தமிழ்த் தேசியம் குறித்துப் பேசாவிட்டாலும் தமிழ் மக்களுக்கான ஆகக் குறைந்த பட்ச அதிகாரப் பரவல் பற்றியாவது தமிழத் தேசியக் கூட்டமைப்பு பேசியே ஆகவேண்டும். இது ஈழப் போராட்டத்தின் இன்னொரு அத்தியாயம்.
சிங்கள தேசியவாதக் கனவுகளுக்குத் தொடர் அச்சுறுத்தலாக உள்ள புலம்பெயர் தமிழர்கள் மீதான சிங்கள தேசம் தொடர்ந்தும் உளவியல் போரை நிகழ்த்தி வருகின்றது.
எனினும், முள்ளிவாய்க்காலின் பின்னரான தமிழீழ விடுதலைப் போராட்டத்தைக் கையேற்றிருக்கும் புலம்பெயர் தமிழர்கள் சிங்கள தேசத்தின் அத்தனை சதிகளையும் தகர்த்தெறிந்து, தமிழீழ விடுதலை எனற இலட்சிய நெருப்போடு நகர்ந்து வருகின்றார்கள்.
ஈழத் தமிழர்களுக்கு நீதியான தீர்வு எதையும் சிங்கள தேசம் வழங்காது என்ற நிலையில், புலம்பெயர் தமிழர்களது கடமையும், பொறுப்பும் முன்னரை விட அதிகரித்துள்ளது. சிங்கள தேசியவாதத்தின் கொடூர முகம் தமிழீழ விடுதலைக்கான சாத்தியங்களை அதிகரித்து வருகின்றது. ஈழத் தமிழர்களுக்கான ஆதரவுத் தளம் உலகெங்கும் பெருகி வருகின்றது. அதனைத் தமிழீழ விடுதலைக்கான ஆதரவு சக்தியாக மாற்றுவது புலம்பெயர் தமிழர்களது கைகளிலேயே உள்ளது.
புலம்பெயர் தமிழர்கள் பல அணிகளாகப் பிரிந்து நிற்பதை விட்டு ஒரே அணியில் நின்று எங்களது மக்களதும் மண்ணினதும் விடுதலைக்காக ஓங்கிக் குரல் எழுப்ப வேண்டும். தமிழீழ விடுதலை ஒன்றே இலட்சியமானால், நாம் அனைவருமே அதற்கான போர்க் களத்தில் ஒன்றாக இணைந்தே போராட வேண்டும். அதனைத் தவிர்த்துத் தனிப்பாதை அமைக்க யாராவது முயற்சித்தால், அவர்கள் சிங்களத்தின் நிகழ்ச்சி நிரலுடன் பயணிப்பதாகவே அர்த்தம் கொள்ள முடியும்.
உலகெங்கும் வாழும் தமிழர்களுக்கான பாதுகாப்பிற்கும் தமிழீழமே வகை செய்யும். சிங்களக் கடற்படையால் தமிழக மீனவர்கள் சுட்டுக் கொல்லப்படுவதும், கேரளத்தில் தமிழர்கள் கொடுமைப்படுத்தப்படுவதும் இதையேதான் உலகத் தமிழர்களுக்கு உணர வைக்கின்றன.
ஈழத் தமிழர்களுக்கான நியாயம் சிங்கள ஆட்சியாளர்களால் தொடர்ந்தும் மறுக்கப்படுமானால், தமிழீழ விடுதலைப் போர் மீண்டும் வெடித்துக் கிளம்புவதை யாராலும் தடுத்து நிறுத்த முடியாது. அதை அனைத்துலக சமுதாயமும் புரிந்து கொள்ள வேண்டும்.
நீதி மறுக்கப்பட்ட காரணத்தினாலேயே ஈழத் தமிழர்கள் ஆயுதம் ஏந்திப் போராட நிர்ப்பந்திக்கப்பட்டார்கள். அதை விடவும் மோசமாக, தற்போது சிங்கள ஆட்சியாளர்களால் தமிழினம் பலமுனைச் சிதைவுகளை எதிர்கொண்டுள்ளது.
இதனைத் தடுத்து நிறுத்தி, ஈழத் தமிழர்களுக்கான நீதியைப் பெற்றுக் கொடுக்கும் பெரும் கடமை அனைத்துலக சமுதாயத்திற்கு உண்டு. அதனை இடித்துரைக்கும் பாரிய பொறுப்பு புலம்பெயர் தமிழர்களுக்கு உள்ளது.
ஈழத் தமிழினத்திற்கான நீதி வழங்கப்படாவிட்டால், இறுதித் தமிழன் உள்ளவரை ஈழப் போராட்டம் தொடரும் என்பதை அனைவரும் உணர்ந்து கொள்ள வேண்டும் என பிரான்ஸ் தமிழீழ மக்கள் பேரவை தனது வாழ்த்துச் செய்தியில் குறிப்பிட்டுள்ளது.
இறுதித் தமிழன் உள்ளவரை ஈழப் போர் தொடரும்!: தமிழீழ மக்கள் பேரவை பிரான்ஸ்
பதிந்தவர்:
தம்பியன்
01 January 2012
0 Responses to இறுதித் தமிழன் உள்ளவரை ஈழப் போர் தொடரும்!: தமிழீழ மக்கள் பேரவை பிரான்ஸ்