Content feed Comments Feed
    “சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”

யுத்தம் முடிவுற்று இரண்டரை ஆண்டுகளுக்கு மேலானாலும், தமிழர் தாயகப் பிரதேசம் இராணுவ ஆக்கிரமிப்பின் கீழ்த்தான் தற்போதும் உள்ளது. பொதுமக்களின் அன்றாட வாழ்வை தீர்மானிக்கும் சக்தியாகவே சிறிலங்காவின் இராணுவம் தமிழர் பிரதேசத்தில் இருக்கிறது.

முகாம்களை மூடுவதற்கு பதில், புதிய முகாம்களை அமைப்பதிலேயேதான் மகிந்த அரசு முனைப்பைக் காட்டுகிறது. முன் எப்போதும் இல்லாதவாறான குற்றச்செயல்கள் தமிழர் பிரதேசங்களில் இடம்பெற்று வருகிறது.

பள்ளிக்குச் செல்லும் மாணவர்கள் மதுப் பழக்கத்திற்கு ஆளாகி தெருக்களில் திரியும் அவல நிலை. இப்படியாக பல தமிழின அழிப்புச் செயற்பாடுகள் இராணுவக் கட்டுப்பாட்டிற்குள் இருக்கும் தமிழர் தேசத்தில் இடம்பெறுகிறது.

மகிந்தாவின் அரசு பாதுகாப்புச் செலவீனங்களுக்காக கூடுதல் நிதியை ஒதுக்கியுள்ளது. போர்க் காலத்தில் ஒதுக்கப்பட்ட நிதியிலும் விட அதிகளவிலான பணத்தை பாதுகாப்புச் செலவுகளுக்காக இம்முறை ஒதுக்கியுள்ளது மிகவும் அருவருக்கத்தக்க நிகழ்வே.

நாட்டின் பெரும்பான்மையான மக்கள் அன்றாட வாழ்விற்கே போராடுகிறார்கள். விலைவாசிகள் அதிகரித்தே செல்கிறது. நாட்டில் வேலை வாய்ப்புக்கள் இல்லாமல் பலர் திண்டாடுகிறார்கள். இப்படியிருக்க, மக்களின் பணத்தை வரியாக அறவிட்டு பாதுகாப்புப் போன்ற செலவுகளுக்காக ஒதுக்குவது வெட்கக்கேடான செயலே.

பாதுகாப்பு என்பது இறமையுள்ள எந்தவொரு நாட்டிற்கும் தேவையானதொன்றே. இருப்பினும், பாதுகாப்புச் செலவீனங்களிலும் விட கல்வி, சமூக, பொருளாதார அபிவிருத்திகளுக்காகச் செலவு செய்தால் நாடு முன்னேற்றப் பாதைக்குச் செல்லும்.

சிறிலங்கா என்பது ஒரு சிறிய நாடு. இதற்கு வெளியிலிருந்து எந்த வகையிலும் பாதுகாப்பு அச்சுறுத்தல் இருக்கப் போவதில்லை. நாட்டிற்குள் இருந்து வரும் பிரச்சினைகளைத் தீர்க்கவேண்டுமாயின் அடிப்படைக் காரணிகளைக் கண்டுபிடித்து தீர்ப்பதுவே சாலச் சிறந்தது.

வன்முறைச் சம்பவங்கள் தமிழர் பிரதேசங்களில் மட்டுமில்லாமல் சிங்களப் பிரதேசங்களில்கூட அதிகரித்துள்ளது. பிரித்தானியாவின் பிரஜை ஒருவர் அரசாங்கத்தின் அடிவருடிகளினால் கொலை செய்யப்பட்டுள்ளது மட்டுமின்றி, கொலை செய்யப்பட்டவருடன் இருந்த இளம் வயதுப் பெண்ணை பாலியல் வல்லுறவுக்கு உட்படுத்தி நாசம் செய்துள்ளார்கள் வன்முறையாளர்கள்.

சதிகாரர்களுக்குத் தண்டனையைப் பெற்றுத் தருவதை விடுத்து அவர்களை விடுவிப்பதிலேயே குறியாக இருக்கிறார் மகிந்தா என்பது நாட்டிற்கே அபகீர்த்தியை உருவாக்கும் செயல்.

இராணுவ முகாம்களை மூட முடியாதாம்

விடுதலைப்புலிகள் இல்லாத இக்காலப் பகுதியில்தான் அதிகளவிலான இராணுவத்தினர் தமிழர் பிரதேசங்களில் இருக்க வேண்டும் என்று கூறுகிறார் மகிந்த ராஜபக்ச.

அவருடைய கருத்தின்படி விடுதலைப்புலிகள் மீண்டும் உயிர்த்தெழுந்து விடுதலைப் பயணத்தை தொடங்கிவிடுவார்கள் என்பதனால் இராணுவத்தினரின் பணி முன்னைய காலத்திலும் விட இப்போது அதிகமாக தேவைப்படுகிறதாம்.

அவருடைய கூற்றில் உண்மை இருக்குமேயானால் தமிழரின் அரசியல் அபிலாசைகளை நிவர்த்தி செய்து, அவர்களுடைய அடிப்படைப் பிரச்சினையைத் தீர்த்துவிட்டால் விடுதலைப்புலிகள் மீண்டும் போராட்டத்தை ஆரம்பிப்பதை தமிழ் மக்கள் விரும்பாதது மட்டுமின்றி அவர்களுக்கு ஒரு போதும் ஆதரவை அளிக்கமாட்டார்கள்.

தமிழரின் பிரச்சினைகளைத் தீர்த்துவிட்டால் தமிழ் மக்கள் போராளிகளுக்கு எதற்காக ஆதரவளிக்கப் போகிறார்கள் என்று வினாவுகிறார்கள் அரசியல் விமர்சகர்கள். சில மாதங்களில் சாத்தியப்படக்கூடிய காரியங்களைச் செய்வதைவிடுத்து, காலத்தை வீணாக்கி மக்களின் வரிப்பணத்தை ஏப்பமிட்டு வாழும் வாழ்வு தேவைதானா என்று கேட்கிறார்கள் விமர்சகர்கள்.

கிழக்கு மாகாணத்தின் ஆளுநராக பதவிவகித்த இராணுவத் தளபதி மீண்டும் இரண்டாவது முறையாக ஆளுநராக நியமிக்கப்பட்டுள்ளது தமிழ் மக்களுக்கு மிகுந்த ஏமாற்றத்தை அளித்துள்ளது.

டிசம்பர் 21-ஆம் தேதியன்று நாடாளுமன்றத்தில் வரவுசெலவுத் திட்ட குழுநிலை விவாதத்தில் நிதியமைச்சர் என்கிற முறையில் பதிலளித்துப் பேசிய மகிந்த ராஜபக்ச தற்போதுள்ள எந்தவொரு இராணுவ முகாமையும் அகற்ற முடியாதென திட்டவட்டமாகத் தெரிவித்துவிட்டார்.

மேலும் அவர் தெரிவிக்கையில், நாட்டின் பாதுகாப்பை உறுதிப்படுத்தும் அரசாங்கத்தின் முயற்சிகளை எந்த தரப்பினராலும் அவதூறு ஏற்படுத்த அனுமதிக்க முடியாதெனவும் அவர் தனதுரையில் தெரிவித்தார்.

வட மாகாணத்தில் மேலும் பல முன்னணி இராணுவ முகாம்களையும், காவலரண்களையும் அமைக்கும் பணியினை ஆரம்பித்துள்ளது சிங்கள அரசு.

சீன நிறுவனங்கள் இதற்கான கட்டுமானச் செயற்பாடுகளில் ஈடுபடுகிறார்கள். யாழ்ப்பாண வளைகுடாப் பிரதேசம் 1996-ஆம் ஆண்டுக் காலப்பகுதிகளிலிருந்தே சிங்கள அரச படையினரின் கட்டுப்பாட்டின் கீழ்த்தான் உள்ளது.

இராணுவத்தினரின் பணியென்பது கலகத்தை அடக்குவதற்கே ஒழிய சட்டம் ஒழுங்கை நிலைநாட்டுவதற்கு அல்ல.

சட்டம் ஒழுங்கை காப்பாற்ற காவல்துறையினருக்கே அதிகாரம் வழங்கப்பட வேண்டும். இராணுவம் செய்யும் அனைத்து வேலைகளையும் காவல்துறையினரினால் செய்ய முடியும். காவல்துறை அதிகாரங்களை மாகாணங்களுக்கு அளித்தால் குறித்த மாகாணங்கள் தமது பகுதிகளில் சட்டம் ஒழுங்கை காப்பாற்ற முடியும்.

இதைவிடுத்து பொதுமக்கள் வாழும் பிரதேசங்களில் இராணுவத்தைத் தங்க வைத்திருப்பதனால் மக்கள் இராணுவ அடக்குமுறைக்கே ஆளாக்கப்படுவார்கள்.

கொடுங்கோல் ஆட்சியே நடைபெறுகிறது

எதிர்க்கட்சியான ஐக்கிய தேசியக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் ரங்கே பண்டார சமீபத்தில் இடம்பெற்ற பாதுகாப்பு அமைச்சிற்கான நிதி ஒதுக்கீட்டு விவாதத்தில் கலந்து கொண்டு உரையாற்றும்போது, நாட்டில் சட்டம் ஒழுங்கு சீரழிந்துவிட்டதாகக் கூறினார்.

மேலும் அவர் பேசுகையில், கடந்த 3 மாதத்தில் 342 கடத்தல்களும் துஸ்பிரயோகங்களும் இடம்பெற்றுள்ளதாகவும், இவற்றுள் 27 விடயங்கள் மட்டுமே தீர்க்கப்பட்டுள்ளதாகக் கூறினார்.

அவர் மேலும் பேசுகையில், “அமைச்சின் அதிகாரி ஒருவர், அமைச்சர் ஒருவரது வாகனத்தில் வந்தவர்களால் கடத்தப்பட்டுள்ளார். இந்தக் கடத்தலுக்கு இராணுவ கவச வாகனம் ஒன்று பாதுகாப்பு வழங்கியுள்ளது. சட்டம் ஒழுங்கை பாதுகாக்க வேண்டிய காவலர்கள் கடத்தல்காரர்களுக்கும், போதைவஸ்து கடத்தல்காரர்களுக்கும் பாதுகாவலர்களாகவே இயங்குகின்றனர்.

இன்றைய அரசியற் கலாச்சாரத்தில் மக்கள் பலமற்றவர்களாக மாற்றப்பட்டுள்ளனர். மக்கள் எல்லா விடயங்களுக்கும் அரசியல்வாதிகளின் பின்னால் செல்ல வேண்டிய நிலை. ஒரு பிள்ளையைப் பாடசாலையில் சேர்க்கக்கூட அரசியல்வாதியின் அனுசரணை தேவைப்படுகிறது. மணல் ஏற்றிச் செல்லவும், பஸ்பாதை (ரூட்) பெறவும் பத்து லட்சம் ரூபா வழங்க வேண்டும். இவ்வாறாக லஞ்ச ஊழல் நாட்டில் தலைவிரித்தாடுகிறது."

பண்டார மேலும் கூறுகையில், “வடபகுதியில் இன்னமும் சிவில் நிர்வாகம் இல்லை. இராணுவக் கெடுபிடிகள் அதிகரித்துள்ளன. அரசினால் அமைக்கப்பட்ட நல்லிணக்க ஆணைக்குழு வடபகுதியில் இடம்பெற்ற கடத்தல்கள் மற்றும் கப்பம் கோரல் சம்பவங்களில் ஈ.பி.டி.பியினரின் தொடர்பு இருப்பதாகவும், இதுகுறித்து விசாரிக்கப்பட வேண்டும் எனவும் சுட்டிக்காட்டியுள்ளது. இவற்றை விசாரித்து குற்றவாளிகளுக்குத் தண்டனையைப் பெற்றுத்தர வேண்டும்."

போரின் பின்னான காலப்பகுதியில் வடக்கு, கிழக்கு மாகாணங்களைச் சேர்ந்த தமிழ் பெண்கள் மிகவும் மோசமான பாதுகாப்புப் பிரச்சினைகளை எதிர்கொள்வதாக சர்வதேச நெருக்கடிகள் குறித்த ஆய்வுகளை மேற்கொண்டுவரும் சர்வதேச கிறைசஸ் குறூப் என்னும் அமைப்பு கூறியுள்ளது. பெண்களின் பொருளாதார மற்றும் பாதுகாப்பு விடயங்களில் மிகவும் பிந்தங்கிய நிலையில் இருப்பதாகவும், அவர்களது நடமாடுவதற்கான ஆற்றல் மிகவும் மட்டுப்படுத்தப்பட்டு இருப்பதாகவும் அந்த அமைப்பின் அறிக்கை கூறுகிறது.

பெரிதும் இராணுவ மயப்படுத்தப்பட்ட மற்றும் அதிகாரங்கள் மத்தியில் குவிக்கப்பட்ட நிலையில் வடக்கு கிழக்கில், பெரும்பான்மையாக சிங்களவர்களைக் கொண்ட இராணுவத்தின் மத்தியில் வாழும் தமிழ் பெண்கள் பாதுகாப்பு, பாதுகாப்பு உணர்வு, உதவிகளுக்கான வாய்ப்பு ஆகியவற்றைப் பொறுத்தவரை பல பிரச்சினைகளை எதிர்நோக்குகிறார்கள் என்றும், தமது வாழ்க்கை குறித்த கட்டுப்பாடு எதுவும் அவர்களது கையில் இல்லை என்றும், அதில் மாற்றத்தை ஏற்படுத்துவதற்கான ஏற்பாடுகள் எதுவும் அங்கு கிடையாது என்றும் கிறைசஸ் குறூப்; தெரிவித்துள்ளது.

மேலும் அவ் அமைப்புக் கூறுகையில், “இராணுவ முகாம்களையும், சோதனைச் சாவடிகளையும் மூடுவதன் மூலமும் இராணுவத்தால் கையகப்படுத்தப்பட்ட பொதுமக்கள் இடங்களை திரும்ப வழங்குவதன் மூலமும், இராணுவ பிரசன்னத்தை குறைப்பதன் மூலமாகவேதான் பிரச்சினைகளுக்கு ஒரு முற்றுப்புள்ளி வைக்க முடியும். அத்துடன், வடக்கு கிழக்கில் அதிகாரங்கள் மாகாண சபைகளுக்கும், உள்ளூராட்சி சபைகளுக்கு பகிரப்படுதல் மூலம் அரசியல், சமூக, பொருளாதார மற்றும் பாதுகாப்புச் சம்பந்தமான பிரச்சினைகளை களைய முடியும்."

நாடு முழுவதிலும் பாரியளவில் குற்றச்செயல்கள் இடம்பெற்று வருவதாகவும் இந்தக் குற்றச்செயல்களை தடுப்பதற்கு காவல்துறையினர் ஆக்கபூர்வமான எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லையென ஆசிய மனித உரிமை ஆணைக்குழுவின் கொள்கை வகுப்புப் பணிப்பாளர் பெசில் பெர்னாண்டோ கடந்த வாரம் தெரிவித்தார்.

படுகொலைகள், தாக்குதல்கள், கொள்ளைகள், பாலியல் வன்முறை என பல்வேறு குற்றச் செயல்கள் இடம்பெற்று வருவதாகக் குறிப்பிட்ட அவர், அண்மைக்காலமாக இடம்பெற்று வரும் சம்பவங்களின் மூலம் காவல்துறையினரின் அசமந்தப் போக்குக் காணக்கூடியதாக உள்ளதாகவும் அவர் கூறினார். இப்படியாக சிறிலங்காவில் கொடுங்கோல் ஆட்சியே இடம்பெற்று வருகிறது.

இராணுவத்தை காரணம்காட்டி நாட்டை குட்டிச்சுவராக்கவே கங்கணம் கட்டி செயற்படுகிறது தற்போதைய ஆட்சி என்றால் மிகையாகாது. மக்களின் வாழ்வாதாரத்தை உயர்த்தி நாட்டை வளம்படுத்த நடவடிக்கைகளை எடுப்பதை விடுத்து இராணுவத்தின் பெயரினால் இடம்பெறும் ஊழல்களை அதிகரிக்கவே வழிவகை செய்த்துள்ளது இப்போதைய ஆட்சி.

இராணுவத்தினரினால் ஒரு போதும் சட்டம் ஒழுங்கை நிலைநாட்ட முடியாது என்பதை சிங்கள அரசு உணர்ந்து, மக்களுக்குப் பாதுகாப்பு அரணாக இருக்க காவல்துறையினரை பணியில் ஈடுபடுத்தி குறிப்பாக மாகாணங்களுக்கு காவல்துறை சார்ந்த அதிகாரங்களை வழங்குவதன் மூலமாக சட்டம் ஒழுங்கை மிக நேர்த்தியாக நடத்த முடியும் என்பதே பரவலான கருத்து.

இதைச் செய்ய சிங்கள அரசு தவறினால் சிறிலங்கா என்கிற நாடு அழிவுப் பாதையை நோக்கிச் செல்கிறது என்பதே பொருள்.

nithiskumaaran@yahoo.com

0 Responses to இராணுவ முகாம்களை அகற்ற முடியாதென அடம் பிடிக்கும் மகிந்தா!: அனலை நிதிஸ் ச. குமாரன்

Post a Comment

Followers

தொடர்புக்கு: vannionline@gmail.com