Content feed Comments Feed
    “சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”

இலங்கை தமிழரசுக் கட்சியின் மட்டக்களப்பு மாவட்ட குழுக்கூட்டம் செவ்வாய்க்கிழமை காலை மட்டக்களப்பு அமெரிக்க மிஷன் திருச்சபை மண்டபத்தில் நடைபெற்றது.

இலங்கை தமிழரசுக் கட்சியின் மட்டக்களப்பு மாவட்ட தமிழ் தேசிய கூட்டமைப்பு பாராளுமன்ற உறுப்பினர் பொன்.செல்வராசா தலைமையில் நடைபெற்றது.

இக்கூட்டத்தில் தமிழ் தேசிய கூட்டமைப்பின் பொதுச் செயலாளரும், பாராளுமன்ற உறுப்பினருமான மாவை சேனாதிராஜா மற்றும் மட்டக்களப்பு மாவட்ட தமிழ் சீ.யோகேஸ்வரன், பா.அரியநேத்திரன் உட்பட மற்றும் பல கட்சி உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.

ஜனாதிபதியின் காலடியில் சரணாகதியடைந்து முதலமைச்சராகியவர் சம்பந்தனை விமர்சிக்கிறார்: மாவை

ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவின் காலடியில் சரணாகதியடைந்து முதலமைச்சராகிக் கொண்டவர் எமது கட்சியின் தலைவர் சம்பந்தன் ஐயாவைப் பார்த்து பரிகாசம் செய்கின்றார். அவரைப்பார்த்து விமர்சனம் செய்கின்றார்.

எமது தலைவர் சம்பந்தனின் ஆற்றலையும் அவரின் அறிவையும் இவர் சரியாக விளங்கிக்கொள்ள வில்லை என தமிழ் தேசியக் கூட்டமைப்பின் செயலாளரும் நாடாளுமன்ற உறுப்பினருமான மாவை சேனாதிராஜா தெரிவித்தார்.

இலங்கை தமிழரசுக் கட்சியின் மட்டக்களப்பு மாவட்ட குழுக் கூட்டத்தில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

அவர் தொடர்ந்தும் உரையாற்றுகையில்,

ஜனநாயக போரும், இராஜதந்திர யுதத்தத்தின் விளைவுகளும்தான் இலங்கை அரசாங்கத்தை தமிழ் தேசியக் கூட்டமைப்புடன் பேசவைத்துள்ளது. இலங்கை அரசாங்கம் தமிழ் தேசியக் கூட்டமைப்புடன் பேச்சுவார்த்தை நடாத்த இருக்கவுமில்லை. பேச்சுக்கான அக்கறை காட்டவுமில்லை.

சர்வதேச அழுத்தங்களும், அமெரிக்காவின் அழுத்தமும், இந்தியாவின் நெருக்கடியும்தான் இலங்கை அரசாங்கத்தை தமிழ் தேசியக் கூட்டமைப்புடன் பேசவைத்துள்ளன.

இலங்கை ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவுக்கும் ஐக்கிய நாடுகள் சபையின் செயலாளருக்குமிடையில் யுத்தம் முடிவடைந்த போது கூட்டறிக்கையொன்று வெளியிடப்பட்டது.

அதில் ஜனநாயகத்தை பாதுகாத்தல், மனித உரிமைகளை பாதுகாத்து பேணுதல், இனப்பிரச்சினையை அரசாங்கம் தீர்த்து வைத்து அரசியல் தீர்வொன்றை வழங்குதல் போன்ற விடயங்கள் குறிப்பிடப்பட்டிருந்தன.

இதன் விளைவுகள் தான் அரசாங்கத்தை தமிழ் தேசியக் கூட்டமைப்புடன் பேசவைத்தது. இன்று வடக்கு கிழக்கு மாகாணத்தை தென்னிலங்கையிலுள்ள சிங்கள மக்களின் காட்சிப்பொருளாக அரசாங்கம் மாற்றிவருகின்றது.

நாளுக்கு நாள் சிங்கள மக்கள் வடக்கு கிழக்கு வந்து செல்கின்றனர்.

இராணுவத்தினர் வடக்கு கிழக்கு மாகாணங்களில் புதிய இராணுவ முகாம்களை அமைத்து வருகின்றனர். இந்த புதிய இராணுவ முகாம்கள் அமைப்பதை நிறுத்த வேண்டும். அவ்வாறே எமது ஆயிரக்கணக்கான ஏக்கர் நிலங்களையும் எமது மக்களின் வீடுகளையும் சொத்துக்களையும் இராணுவத்தினர் பிடித்து வைத்தள்ளனர்.

இராணுவத்தினர் இவைகளை மீள ஒப்படைத்து விடவேண்டும். இது தொடர்பில் அடிக்கடி நாடாளுமன்றத்தில் நான் பேசிவருகின்றேன். இதற்கெதிராக உயர் நீதி மன்றத்திலும் வழக்கு தாக்கல் செய்யப்பட்ட இடைக்கால உத்தரவும் வழங்கப்பட்டுள்ளது.

நாம் ஐரோப்பாவுக்கான விஜயம் மேற்கொண்டிருந்த போது அமெரிக்க இராஜாங்க திணைக்களத்தின் அழைப்பின் பேரில் சென்று அங்கு அதிகாரிகளுடன் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டோம்.

அப்போது எமது கட்சியின் தலைவர் சம்பந்தன் அவர்கள் முன்வைத்த கருத்துக்களையும் அவரின் ஆற்றலையும் அந்த அதிகாரிகள் பாராட்டினர்.

தமிழ் தேசியக் கூட்டமைப்புக்கும் அரசாங்கத்திற்கு மிடையில் பேச்சுவார்த்தை இடம்பெறுவதற்கு முன்னர் இரண்டு குழுக்கள் அமைக்கப்பட்டன.

அன்றாட பிரச்சினை, மற்றும் இராணுவத்தினரின் வெளியேற்றம், சிறைகளில் மிக நீண்டகாலமாக இருக்கும் தமிழ் அரசியல் கைதிகளின் விடுதலை, போரின் இறுதிக்கட்டத்தில் கைது செய்யப்பட்டவர்களின் விடுதலை மற்றும் மீள் குடியேற்றம், மீள்குடியேற்ற பிரதேசங்களின் மீள் கட்டுமானம் போன்ற விடங்களுக்கான குழு அமைக்கப்பட்டது.

இந்தக்குழுவில் மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் பொன் செல்வராசா மற்றும் வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதன் அடங்களாக பலர் இதில் அங்கம் வகிக்கின்றனர்.

அதேபோன்று அரசியல் தீர்வு பற்றி பேசுவதற்காக எமது தலைவர் சம்பந்தன் மற்றும் நான் உள்ளிட்ட சட்டவல்லுனர்கள் அடங்களாக ஒரு குழுவையும் நியமித்தோம்.

மனித உரிமைகள் ஆணையகத்தில் மஹிந்த சமரசிங்கவினால் போர்க்குற்றம் தொடர்பில் வைக்கப்பட்ட பொய்யான கருத்தினை தமிழ் தேசியக் கூட்டமைப்பின் சார்பில் சட்டவல்லுனர்களின் உதவியுடன் அதை முறியடித்தோம்.

அதேபோன்று அமைச்சர் ஜி.எல்.பீரிஸ் முன் வைத்த கருத்து பொய்யானது என்பதை எமது கட்சியின் தலைவர் சம்பந்தன் கூறி ஜி.எல்.பீரிஸை தடுமாற வைத்தார்.

நாங்கள் ஒரு தனியான இனம், எங்களுக்கு சுய நிர்ணய உரிமை உண்டு என்பதை அனைவரும் ஏற்றுள்ளனர்.

தமிழ் தேசியக் கூட்டமைப்பானது இலங்கை தமிழரசுக் கட்சியின் சின்னத்தில் வடக்கு கிழக்கில் சந்தித்த அனைத்து தேர்தல்களிலும் பாரிய வெற்றிகளைக் கண்டுள்ளது.

வடக்கில் நடைபெற்ற உள்ளூராட்சி மன்றத் தேர்தலிலும் ஜனாதிபதியும் அமைச்சர்களும் வரிந்து கட்டிக்கொண்டு நின்றும் எமது மக்களின் உரிமைக்காக தமிழ் தேசியக் கூட்டமைப்புக்கு வாக்களித்து வெற்றியடையச் செய்தனர்.

கிழக்கு மக்களின் பலத்தை நான் அடிக்கடி வடக்கு மக்களிடம் பேசுவதுண்டு. இந்நிலையில் எமது தமிழரசுக்கட்சியின் தேசிய மாநாட்டை இம்முறை மட்டக்களப்பில் நடத்துவதற்கு தீர்மானித்திருக்கின்றோம் என்றார்.

0 Responses to ஜனாதிபதியின் காலடியில் சரணாகதியடைந்து முதலமைச்சராகியவர் சம்பந்தனை விமர்சிக்கிறார்

Post a Comment

Followers

தொடர்புக்கு: vannionline@gmail.com