எத்தனை ஆண்டுகள் போனாலும் போர்க்குற்றம், மானிடப் பெரும் படுகொலைகள் போன்ற குற்றச் செயல்களை செய்த நாடுகள் அதிலிருந்து தப்பிவிட முடியாது என்பதற்கான இன்னொரு அழுத்தமான சம்பவம் நேற்று பிரான்சிய செனட்சபையில் நடைபெற்றுள்ளது.
1956 ம் ஆண்டில் இருந்து 2009 ம் ஆண்டுவரை இலங்கையில் கொல்லப்பட்ட தமிழ் மக்கள் படுகொலைக்கான குற்றத்தை சிங்கள அரசு என்றாவது ஒரு நாள் ஏற்றேயாக வேண்டும் என்ற புதிய நம்பிக்கையை இந்த விவகாரம் தந்துள்ளது. கடந்த 1915 – 1916ம் ஆண்டு காலப்பகுதியில் ஒரு மில்லியன் ஆர்மீனிய மக்களை துருக்கி கொன்றொழித்தது.
இது உகாண்டா, சிறீலங்காவில் நடைபெற்றது போன்ற மானிடப் படுகொலைகளை ஒத்ததாக இருக்கிறது. ஆண், பெண், குழந்தைகள், முதியோர் என்ற பேதம் பார்க்காமல் மக்களை கொன்றால் அத மானிடத்திற்கு எதிரான படுகொலைப் போராக அமையும். அப்படிச் செய்தால் அது சர்வதேச போர்க்குற்றம், மானிடப் படுகொலை அத்தகைய தவறை இழைத்த எந்த நாடும் தப்பிக்க முடியாது. அவர்கள் சர்வதேச போர்க்குற்ற நீதிமன்றில் தம்மை பதிந்தாலும், பதியாவிட்டாலும் குற்றவாளிகளே.
அந்தவகையில் ஒரு மானிடக் கொலைக் குற்றத்தில் இருந்து பழைய ஒஸ்மானியா என்ற பெயர் கொண்ட இன்றைய துருக்கி தப்பிவிட முடியாது. துருக்கிக்கு எதிராக கொண்டுவரப்பட்ட மானிடப்படுகொலை பிரேரணைக்கு ஆதரவாக 127 வாக்குகளும், எதிராக 86 வாக்குகளும் விழுந்துள்ளன. தாம் கொலை செய்தது உண்மைதான் ஆனால் அது மானிடப்படுகொலைக்குள் வராது என்று துருக்கி கூறுகிறது.
சுமார் ஒரு நூற்றாண்டு காலம் கடந்த பின்னரும் பிரான்ஸ்சிய செனட் நிறைவேற்றியுள்ள தீர்மானம் இரு நாட்டு இராஜதந்திர உறவுகளையும் பாதிக்கும் என்று துருக்கிய தலைமை அமைச்சர் ஏர்டோகன் கூறினார். துருக்கிக்கு எதிராக வந்துள்ள பிரேரணை சாதாரணமான விடயமல்ல, புதிய உலக ஒழுங்கில் பொதி சுமக்கப்போகும் நா(மா)டுகளின் வரிசையில் அந்த நாடும் இடம்பெறப் போகிறது என்பதையே உணர்த்துகிறது.
துருக்கி மீது கொண்டுவரப்பட்ட தீர்மானத்தை உதாரணமாக முன் வைத்து சிங்கள பாராளுமன்றில் பேசும் வல்லமை அப்துல் கலாமை தெய்வமாகப் போற்றும் கூட்டமைப்பு செல்வம் அடைக்கலநாதன் போன்றவர்களிடம் இருக்குமா என்பது சிறீமான் பொதுஜனத்தின் இன்னொரு கேள்வியாகும்.



0 Responses to துருக்கி மீது போர்க்குற்றம் - சிறீலங்காவுக்கு எச்சரிக்கை