Content feed Comments Feed
    “சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”

ஜெனிவா மாநாட்டில் தமக்கு எதிரான பிரேரணையைத் தோற்கடிப்பதற்கு இலங்கை அரசு என்றுமில்லாதவாறு இராஜதந்திர மட்டத்திலான காய்நகர்த்தல்களை முழுவீச்சுடன் முன்னெடுத்து வரும் தற்போதைய சூழ்நிலையில், கொழும்புக்கு எதிரான பிரேரணையை ஆதரிப்பதற்கு 22 நாடுகள் அமெரிக்காவிடம் கூட்டாக இணக்கம் தெரிவித்துள்ளன என அறியமுடிகின்றது.

ஜெனிவாவில் அமெரிக்கா முதல்கட்டமாக முன்னெடுத்த இராஜதந்திர நகர்வுகளில் இதுவரை 22 உறுப்பு நாடுகள் பச்சைக்கொடி காட்டியிருப்பதாகத் தெரிவிக்கப்படுகிறது. இன்று ஜெனிவாவில் இரண்டாம் கட்டமாக நடைபெறவிருக்கும் இராஜதந்திர சந்திப்புகளில் மேலும் பல நாடுகள் பிரேரணைக்கு ஆதரவு தெரிவிக்கும் நிலைப்பாட்டை எடுக்கும் என நம்பப்படுகின்றது.

இதனால், இலங்கைக்கு எதிரான பிரேரணை நிறைவேற்றப்படுவதற்கான சாத்தியப்பாடுகளே அங்கு மேலோங்கிக் காணப்படுவதாக அங்கிருந்துவரும் தகவல்கள் தெரிவிக்கின்றன. முன்னதாக ஐ.நா.மனித உரிமைகள் பேரவையில் அங்கம் வகிக்கும் உறுப்புநாடுகளிடம் இலங்கைக்கு எதிரான பிரேரணையின் சாராம்சத்தைக் கையளித்து தெளிவுபடுத்தல் நடவடிக்கையொன்றை அமெரிக்கா ஜெனிவாவில் ஆரம்பித்தது.

ஐ.நா. மனித உரிமைகள் பேரவையில் அங்கம் வகிக்கும் 47 நாடுகளுள் 24 நாடுகளின் ஆதரவு இருக்கும் பட்சத்தில் தீர்மானமொன்றை நிறைவேற்றமுடியுமென நம்பப்படுகிறது. அந்த அடிப்படையில், ஜெனிவாவில் அமெரிக்காவுக்கு ஆதரவு வலுத்துவருவதால் இலங்கைக்கு எதிரான பிரேரணை அறுதிப்பெரும்பான்மையோடு நிறேவேற்றப்படும் என்று மேற்குலக இராஜதந்திரிகள் எதிர்வுகூறியுள்ளனர்.

அதேவேளை, ஐ.நா.மனித உரிமைகள் பேரவையில் 10ஆம் அத்தியாயத்தின் பிரகாரம் உறுப்புநாடொன்று பிரேரணையொன்றை சபை அமர்வில் சமர்ப்பிக்கவேண்டுமாயின் மாநாடு நிறைவடைவதற்கு 72 மணித்தியாலயங்களுக்கு முன்னரே அறிவித்தல் விடுக்கவேண்டும்.

அந்த அடிப்படையில் பார்த்தால் இலங்கைக்கு எதிரான பிரேரணை எதிர்வரும் 19 ஆம் திகதிக்கு முன்னர் சபை அமர்வில் சமர்ப்பிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

அத்துடன், இலங்கைக்கு எதிரான பிரேரணையை கெமரூன்,பொட்ஸ்வானா மற்றும் லத்தீன் அமெரிக்க நாடுகளில் ஒன்று ஆகியன கூட்டாக இணைந்து சமர்ப்பிக்கவுள்ளனவென்றும் மிகவும் நம்பகரமாகத் தெரியவருகின்றது.

0 Responses to முதல் கட்டமாக 22 நாடுகள் ஆதரவு; ஜெனிவாவில் கோலோச்சுகிறது அமெரிக்கா

Post a Comment

Followers

தொடர்புக்கு: vannionline@gmail.com