ஜெனிவாவில் நடைபெற்று வரும் ஐ.நா. மனிதஉரிமைகள் பேரவையின் கூட்டத்தொடரில் இலங்கைக்கு எதிராகக் கொண்டு வரப்படவுள்ள தீர்மானம் தொடர்பாக, முடிவு எடுக்கும் விடயத்தில் இந்திய மத்திய அரசு நெருக்கடிக்கு உள்ளாகியுள்ளதாகப் புதுடில்லித் தகவல்கள் கூறுகின்றன.தமிழகத் தலைவர்களின் அழுத்தம் இவ்வாறு கடுமையாக அதிகரித்துள்ளதால் என்ன செய்வது என்று தெரியாத திரிசங்கு நிலையில் இந்தியப் பிரதமர் மன்மோகன்சிங் உள்ளதாகவும் அந்தத் தகவல்கள் மேலும் தெரிவித்தன.
இலங்கைக்கு எதிரான தீர்மானத்தை ஆதரிக்க வேண்டும் என்று கோரி இந்தியப் பிரதமருக்கு, தமிழ்நாட்டில் இருந்து தொடர்ச்சியான வேண்டுகோள்கள் விடுக்கப்பட்டு வருகின்றன.
இது தொடர்பாகத் தமிழ்நாடு முதல்வர் ஜெயலலிதா இரண்டு கடிதங்களை மன்மோகன்சிங்கிற்கு அனுப்பியுள்ளார்.
தி.மு.க தலைவர் கருணாநிதி, உள்ளிட்ட தமிழ்நாட்டின் முக்கிய கட்சிகளின் தலைவர்கள் அனைவரும், இது தொடர்பாக மத்திய அரசுக்கு கடிதங்களை அனுப்பியுள்ளதுடன், பல்வேறு போராட்டங்களையும் நடத்தி வருகின்றனர். இதனால், தமிழ்நாட்டில் மீண்டும் ஈழத்தமிழர் விவகாரம் சூடுபிடிக்கத் தொடங்கியுள்ளது.
இந்தநிலையில், இலங்கைக்கு ஆதரவு அளிக்கக் கூடாது என்ற ஒருமித்த கருத்து தமிழ்நாட்டில் உள்ள காங்கிரஸ் தலைவர்கள் மத்தியிலும் ஏற்பட்டுள்ளது. மத்திய அமைச்சர்கள் ஜி.கே.வாசன், நாராயணசாமி ஆகியோரும், குமரி அனந்தன் போன்ற காங்கிரஸ் தலைவர்களும் இந்தத் தீர்மானத்துக்கு இந்தியா ஆதரவு தர வேண்டும் என்று கருத்து வெளியிட்டுள்ளனர்.
இது மத்தியில் உள்ள காங்கிரஸ் அரசுக்கு கடும் அழுத்தங்களை கொடுத்துள்ளது. நாடுகளின் மீதான தனிப்பட்ட தீர்மானங்கள் ஆக்கபூர்வமான கலந்துரையாடலுக்கான வாய்ப்பை அருகச் செய்வதாக ஐ.நா மனித உரிமைகள் பேரவையில், இந்தியா கருத்து வெளியிட்டது இலங்கைக்குச் சாதகமானது என்று கருதப்பட்ட போதும், இலங்கைக்குச் சாதகமான முடிவை மத்திய அரசு எடுப்பது சிக்கலானது என்றே புதுடில்லி அரசியல் வட்டாரங்கள் கருதுகின்றன.காங்கிஸ் உள்ளிட்ட தமிழ்நாட்டு அரசியல்கட்சிகள் இந்த விடயத்தில் ஒன்றுபட்டு நிற்கின்றன.இதனால் தமிழ்நாட்டின் கருத்தை முற்றிலுமாகப் புறக்கணிக்க முடியாத நிலை மத்திய அரசுக்கு ஏற்பட்டுள்ளது.
நடந்துமுடிந்த 5 மாநில சட்டமன்றத் தேர்தலில் காங்கிரஸ் கட்சி பலத்த அடி வாங்கியுள்ள நிலையில், தமிழ்நாட்டின் கருத்தைப் புறக்கணிப்பதன் விளைவுகள் குறித்து மன்மோகன்சிங் அரசு தீவிரமாக ஆலோசித்தே முடிவுகளை எடுக்கும் என்று கருதப்படுகிறது.
இதனால் ஜெனிவாத் தீர்மானம் விடயத்தில் இந்தியா எடுக்கும் முடிவு இலங்கைக்கு அதிர்ச்சியானதொன்றாக அமைவதற்கு வாய்ப்புகள் உள்ளதாகவும் புதுடில்லி தகவல் ஒன்று கூறுகிறது.



0 Responses to தமிழகத் தலைவர்கள் அழுத்தம் தலையிடியில் மன்மோகன்