இலங்கையில் பெண்களுக்கு எதிரான வன்முறைகள் எதுவும் நடக்கவில்லை என்றும், அவ்வாறு நடப்பதாக சித்திரிப்பது சரியல்ல என்று தமிழ்நாட்டில் உரையாற்றிய கொழும்பு பல்கலைக்கழக பேராசிரியை ஒருவர் கருத்தரங்கு மண்டபத்திலிருந்து வெளியேற்றப்பட்டுள்ளார்.
தமிழ்நாடு திருநெல்வேலியில் மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகத்தில் சர்வதேச பெண்கள் தினத்தை முன்னிட்டு, நேற்று இடம்பெற்ற இக்கருத்தரங்கில் இலங்கை சார்பாக கொழும்பு பல்கலைக்கழகத்தின் பேராசிரியை ஜீவா நிரியெல்ல கலந்து கொண்டார்.
“போதை பழக்கமும், குற்றங்களால் பாதிக்கப்பட்டவர்களும்” என்ற தலைப்பில் இடம்பெற்ற மேற்படி கருத்தரங்கிலே கொழும்பு பேராசிரியை ஜீவா நிரியெல்ல இலங்கைப் பெண்களுக்கெதிராக வன்முறைகள் இடம்பெறுவதில்லை எனவும் அவ்வாறு இலங்கையில் இடம்பெறுகின்றது என குற்றம் சாட்டுவதும் சரியல்ல என உரையாற்றியதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதனையடுத்து, திருநெல்வேலியைச் சேர்ந்த தமிழ் ஆர்வலர்கள், இந்திய கம்யூனிஸ்ட் கட்சி பிரமுகர் சேவியர் தலைமையில் கருத்தரங்கு அரங்கிற்குள் புகுந்து, பதாகைகளை ஏந்தியபடி "சிறிலங்கா பேராசிரியை வெளியேறு' என்று முழக்கங்களை எழுப்பி எதிர்ப்புத் தெரிவித்தனர்.
இச்சம்பவத்தால் ஏற்பட்ட பரபரப்பினையடுத்து, பேராசிரியை ஜீவா நிரியெல்ல பொலிஸாரின் பாதுகாப்புடம் கருத்தரங்கு மண்டபத்திலிருந்து வெளியேற்றப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், இந்தக் கருத்தரங்கில், பிரித்தானியாவின் லங்காஷயர் பல்கலைக்கழகத்தின் பேராசிரியை ஹெலன்காட் உள்ளிட்ட பெண் பேராசிரியைகள் பங்கேற்றனர்.



0 Responses to சிங்களப் பேராசிரியை தமிழ் நாட்டில் இருந்து விரட்டியடிப்பு!