அரச சார்பற்ற நிறுவன செயற்பாட்டாளர்களான பாக்கியசோதி சரவணமுத்து, நிமால்கா பெர்னாண்டோ மற்றும் சுனிலா அபேசேகர ஆகியோர் புலிகளுக்காக சேவையாற்றி வருவதாக அரசாங்கம் குற்றம் சுமத்தியுள்ளது.
டொலர்களுக்காக சில அரச சார்பற்ற நிறுவனங்களும் அதன் செயற்பாட்டாளர்களும் நாட்டுக்கு எதிராக போலியான குற்றச்சாட்டுக்களை சுமத்தி வருவதாக தெரிவிக்கப்படுகிறது.
பாக்கியசோதி சரவணமுத்து, நிமால்கா பெர்னாண்டோ மற்றும் சுனிலா அபேசேகர ஆகியோர் இலங்கைக்கு எதிராக கடுமையான குற்றச்சாட்டுக்களை ஐக்கிய நாடுகள் மனித உரிமை பேரவை அமர்வுகளில் முன்வைத்துள்ளதாக அரசாங்கம் தெரிவித்துள்ளது.
இலங்கை இராணுவத்தினர் யாழ்ப்பாணத்தில் 13 வயது சிறுமி ஒருவரை பாலியல் ரீதியாக துன்புறுத்தியதாக சுனிலா அபேசேகர குற்றம் சுமத்தியுள்ளார். தமிழர் விடுதலைக் கூட்டணியின் தலைவர் ஆனந்த சங்கரியின் மகன் கெரி ஆனந்தசங்கரியுடன் இணைந்து இந்தக் குற்றச்சாட்டை முன்வைத்துள்ளார்.
மேலும், இலங்கையில் மட்டுமன்றி வெளிநாடுகளில் அமைதி காக்கும் பணியில் ஈடுபட்ட இராணுவத்தினரும் பாலியல் ரீதியான வன்முறைகளில் ஈடுபட்டுள்ளனர். கடத்தல்கள் மற்றும் காணாமல் போதல் சம்பவங்களுடனும் அரசாங்கத்திற்கு தொடர்பு இருப்பதாகவும் சுனிலா அபேசேகர தெரிவித்துள்ளார்.
இதேவேளை, பிரித்தானியா புகலிடக் கோரிக்கையாளர்களை திருப்பி அனுப்பி வருவதாகவும் இது ஏற்றுக்கொள்ளக் கூடியதல்ல எனவும் நிமால்கா பெர்னாண்டோ தெரிவித்துள்ளார்.
இலங்கை அரசாங்கம் இராணுவத்தினரை சகல விடயங்களிலும் ஈடுபடுத்தி வருவதாக மற்றுமொரு அரச சார்பற்ற நிறுவன செயற்பாட்டாளர் பாக்கியசோதி சரவணமுத்து குற்றம் சுமத்தியுள்ளார்.
அரசாங்கத்திற்கு எதிரான கருத்துக்களை வெளியிடுவோரை அடக்குவதற்கு இராணுவத்தினர் பயன்படுத்தப்படுவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.



0 Responses to புலிகளுக்காக சேவையாற்றும் பாக்கியசோதி, நிமால்கா, சுனிலா