Content feed Comments Feed
    “சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”

ஐ.நா மனித உரிமைகள் பேரவையில் அமெரிக்கா நேற்று சமர்ப்பித்த தீர்மான வரைபு இம்மாத நடுப்பகுதியிலேயே சமர்ப்பிக்கப்படும் என்று இலங்கை நம்பியிருந்தது. ஆனால் ஒருவாரம் முன்னதாகவே இந்தத் தீர்மானம் பேரவையில் சமர்ப்பிக்கப்பட்டு விட்டதால் இலங்கை அரசை பெரும் குழப்பத்தில் ஆழ்த்தியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

இதனை இலங்கை அரசாங்கம் கொஞ்சமும் எதிர்பார்க்கவில்லை என்று கூறப்படுகிறது.

இதையடுத்து ஜெனிவாவில் உள்ள இலங்கைக் குழுவைப் பலப்படுத்தும் அவசர நடவடிக்கைகள் நேற்றிரவு எடுக்கப்பட்டுள்ளன.

தீர்மானத்தை எதிர்கொள்வதற்கு முக்கியமான பலரை இலங்கை அரசாங்கம் ஜெனிவா செல்லப் பணித்துள்ளது.

ஜெனிவா கூட்டத்தொடரில் பங்கேற்று விட்டு டுபாய் திரும்பிய முன்னாள் சட்டமா அதிபரும், இலங்கை அதிபரின் சட்டஆலோசகருமான மொகான் பீரிஸ் உடனடியாக ஜெனிவா செல்லுமாறு பணிக்கப்பட்டுள்ளார்.

அவர் ஜெனிவாவில் இருந்து புறப்பட்டு குறுகிய காலத்துக்குள் திரும்பவும் ஜெனிவா செல்லுமாறு கேட்கப்பட்டுள்ளார்.

இலங்கை ஜனாதிபதி சட்டவாளர் காலிங்க இந்ததிஸ்ஸ, அலி சப்ரி ஆகியோரை நேற்றிரவு ஜெனிவா செல்வதற்கு இணங்க வைக்க இலங்கை அரசாங்கம் முயற்சிகளை மேற்கொண்டிருந்தது.

ஆனால் அவர்கள் அதற்கு இணங்கினரா என்பது இன்னமும் உறுதியாகத் தெரியவில்லை.

அதேவேளை மேலும் பலர் இன்று அல்லது நாளை அவசரமாக ஜெனிவா செல்ல வாய்ப்புகள் உள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

இம்மாத நடுப்பகுதிலேயே அமெரிக்காவின் தீர்மானம் பேரவையில் சமர்ப்பிக்கப்படும் என்று எதிர்பார்த்து இலங்கை தனது பிரதிநிதிகளில் பெரும்பாலானவர்களை கொழும்புக்கு திருப்பி அழைத்து விட்டது.

குறிப்பாக இலங்கை ஜனாதிபதியின் சிறப்புத் தூதுவரும், ஜெனிவா குழுவுக்கான தலைவருமான அமைச்சர் மகிந்த சமரசிங்க கொழும்பு திரும்பி, தேயிலை மாநாடு ஒன்றில் பங்கேற்க ஜப்பான் சென்று விட்டார்.

அவர் மீண்டும் வரும் 14ம் நாளே ஜெனிவா திரும்பத் திட்டமிட்டிருந்தார்.

ஆனால் இப்போது அவர் ஜப்பானிய பயணத்தை இடையிலேயே, முடித்துக் கொண்டு கொழும்பு திரும்பி, முன்கூட்டியே ஜெனிவா செல்லவுள்ளதாகவும் கூறப்படுகிறது.

அவரே அமெரிக்காவின் தீர்மானம் தொடர்பாக ஐ.நா மனித உரிமைகள் பேரவையில் பதிலுரை நிகழ்த்தவுள்ளார்.

அதேவேளை, இலங்கை வெளிவிவகார அமைச்சர் பீரிசும் ஜெனிவா செல்வதற்கு வாய்ப்புகள் உள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

அமெரிக்காவின் தீர்மான வரைபில் திருத்தங்களை செய்யும் வாய்ப்பு உறுப்பு நாடுகளுக்கு வழங்கப்படும் என்பதால், தீர்மானத்தை தோற்கடிக்க முடியாது போனாலும், அதன் தீவிரத்தன்மையைக் குறைக்க இலங்கை முனையும் என்று இராஜதந்திர வட்டாரங்கள் தகவல் வெளியிட்டுள்ளன.

அதேவேளை, இலங்கைக்கு எதிரான தீர்மானத்துக்கு ஆதரவாக 22 நாடுகள் ஒப்பமிட்டுள்ளதாகவும் ஒரு தகவல் வெளியாகியுள்ளது.

0 Responses to அமெரிக்காவின் தீர்மானம் முன்கூட்டியே சமர்ப்பிக்கப்பட்டதால் குழப்பத்தில் இலங்கை!

Post a Comment

Followers

தொடர்புக்கு: vannionline@gmail.com