Content feed Comments Feed
    “சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”

ஐ.நா. மனித உரிமை ஆணைய மாநாட்டில் இலங்கைக்கு எதிராக அமெரிக்கா கொண்டு வந்துள்ள தீர்மானத்தை இந்திய அரசு ஆதரிக்காவிட்டால் ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசிலிருந்து விலகுவது தொடர்பாக செயற்குழுவைக் கூட்டி முடிவெடுப்போம் என்று திமுக தலைவர் கருணாநிதி தெரிவித்துள்ளார்.

இலங்கைக்கு எதிரான தீர்மானத்தை மத்திய அரசு ஆதரிக்காவிட்டால் அது தமிழ் இனத்திற்கு செய்யும் துரோகமாகவே அமையும் என்றும் கருணாநிதி எச்சரித்துள்ளார்.

ஈழத்தில் போர் உச்சத்தில் இருந்தபோது, தான் ஆற்ற வேண்டிய கடமையிலிருந்து முழுமையாக தவறி விட்டது திமுக என்ற குற்றச்சாட்டு இந்த நிமிடம் வரை வலுவாகவே உள்ளது. இந்த நிலையில் தற்போது அமெரிக்காவால் கொண்டு வரப்பட்டுள்ள தீர்மானத்தை இந்தியா ஆதரிக்க வேண்டும் என்று திமுக உரத்த குரல் எழுப்பி வருகிறது.

நாடாளுமன்றத்தில் திமுக உள்ளிட்ட தமிழக எம்.பிக்கள் தொடர்ந்து போர்க்கொடி உயர்த்தி வருகின்றனர். ஆனால் இலங்கைக்கு எதிராக செயல்பட மாட்டோம், நட்பு உள்ளது, வரலாற்று ரீதியான உறவு உள்ளது. அது பாதிக்கப்படக் கூடாது என்று மத்திய அரசு நேற்று எஸ்.எம்.கிருஷ்ணா மூலம் திட்டவட்டமாக தெரிவித்து விட்டது.

இந்த நிலையில் திமுக தலைவர் கருணாநிதியிடம், இந்த விவகாரம் குறித்து செய்தியாளர்கள் கேட்டனர்.

அப்போது கருணாநிதி கூறுகையில்,

நாங்கள் மத்திய அரசுக்கு வழங்கி வரும் ஆதரவை வாபஸ் பெறுவது குறித்தோ அல்லது அமைச்சர் பதவிகளை இராஜினாமா செய்வது குறித்தோ நானாக மட்டும் முடிவு செய்ய முடியாது. எங்களது செயற்குழு கூடித்தான் முடிவெடுக்கும்.

இலங்கைக்கு எதிரான தீர்மானத்தை மத்திய அரசு ஆதரிக்காவிட்டால் அது தமிழ் இனத்திற்கு இந்தியா செய்த துரோகமாகவே திமுக கருதும். எங்களது கோரிக்கை நிறைவேற்றப்படாவிட்டால் முடிவெடுப்போம் என்றார் கருணாநிதி.

கருணாநிதியின் இந்த பேச்சால் புதிய பரபரப்பு ஏற்பட்டுள்ளது. இந்த முறையாவது கருணாநிதியும், திமுகவும் திடமாக செயல்படுவார்களா அல்லது வழக்கம் போல சொதப்புவார்களா என்பதைப் பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.

0 Responses to இலங்கைக்கு எதிரான தீர்மானத்தை இந்தியா ஆதரிக்காவிட்டால் மத்திய அரசிலிருந்து விலகுவோம்!- கருணாநிதி

Post a Comment

Followers

தொடர்புக்கு: vannionline@gmail.com