Content feed Comments Feed
    “சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”

அரசுக்கு குணரட்ணம் சவால்

பதிந்தவர்: தம்பியன் 23 April 2012

என்னை நாடு கடத்தியதன் மூலம் மக்களிடமிருந்து என்னை விலக்குவதற்கு முதலாளித்துவ ஆட்சியாளர்கள் முயற்சித்தாலும் மக்களுக்கு நான் அரசியல் ரீதியாக சேவையாற்றுவதைத் தடுக்க முடியாது

இவ்வாறு ஆஸ்திரேலியாவுக்கு நாடு கடத்தப்பட்ட முன்னிலை சோசலிஸக் கட்சியின் தலைவர் பிறேமகுமார் குணரட்ணம் கூறியுள்ளார். இதுகுறித்து அவர் கொழும்பு ஆங்கில ஊடகம் ஒன்றுக்கு வழங்கிய நேர்காணல் வருமாறு:

கேள்வி உங்கள் கட்சியின் அரசியல் செயற்பாடுகளை முன்னெடுப்பதற்காக இலங்கைக்கு திரும்பிவர முயற்சிக்கிறீர்களா? பதில் நாங்கள் மார்க்ஸிஸம், லெனினிஸம் போன்ற கொள்கைகளைப் பின்பற்றுபவர்கள். ஒடுக்கப்பட்ட மக்களுக்காக நாம் பணியாற்றுகிறோம். உலகில் எந்த பாகத்திலிருந்தாலும் நாம் மக்களுக்காகப் பணியாற்றலாம். மொழி, நாடு, இன அடையாளங்கள் எம்மை பாதிக்காது. ஆனாலும் இலங்கையிலுள்ள ஒடுக்கப்பட்ட மக்களுக்காக பணியாற்றுவதில் நான் அதிக ஆர்வம் கொண்டுள்ளேன்.

என்னை நாடுகடத்திய தன் மூலம் மக்களிடமிருந்து என்னை விலக்குவதற்கு முதலாளித்துவ ஆட்சியாளர்கள் முயற்சித்தாலும் அந்த மக்களுக்கு அரசியல் ரீதியாக நான் சேவையாற்றுவதைத் தடுக்க அவர்களால் முடியாது. தற்போதைய ஜனநாயக விரோதப் போக்கில் மாற்றமொன்றை ஏற்படுத்திய பின்னர் நிச்சயமாக நான் இலங்கை மக்களுக்காக சேவையாற்ற வருவேன்.

கேள்வி: நீங்களும் திமுது ஆட்டிகலவும் கடத்தப்பட்டமை தொடர்பாக வதந்திகள் உள்ளன. பொது மக்களின் கவனத்தை ஈர்ப்பதற்காகவும் அரசியல் லாபங்களுக்காவும் நீங்கள் இருவரும் கடத்தப்பட்டதாக நாடக மாடியதாகச் சிலர் கூறுகிறார்கள். அது பற்றி…?

பதில்: இந்த நடவடிக்கை அரசின் ஜனநாயக விரோதப் பாதையையே காட்டுகிறது. நாம் ஆயுத குழுவொன்றின் மூலம் கடத்தப்பட்டோம். எனினும் பொலிஸாருக்கூடாக விடு விக்கப்பட்டோம். இந்த நாடகத்தை யார் நடத்துகிறார்கள் என்பது வெளிப்படை.

நாம் இழிவான விடயங்களை செய்வதில்லை. எமக்கு முன்னாலுள்ள சவால் குறித்து எமக்கு ஆழமான அரசியல் அறிவு உள்ளது. அந்த சவாலை நாம் ஏற்றுக் கொண்டுள்ளோம். அவற்றை வெற்றி கரமாக முறியடிக்கும் மனோ வலிமை எங்களுக்கு உண்டு.

கேள்வி: நீங்கள் பாலியல் ரீதியாக சித்திரவதை செய்யப்பட்டதாக குற்றம் சுமத்தியுள்ளீர்கள். இதற்காக நீதி தேடி சர்வதேச அமைப்பொன்றிடம் செல்லும் யோசனை உங்களிடம் உள்ளதா?

பதில்: ஆட்சியாளர்கள் எனது வாழ்க்கையை அழிக்க விரும்பினார்கள். எமது அரசியல் நெறிமுறையை அழிக்கவும் அவர்கள் முயற்சித்தார்கள். எனக்கு இழைக்கப்பட்ட அநீதி குறித்த விடயத்தை உலகெங்கும் உள்ள முற்போக்கு சக்திகளிடம் கொண்டு செல்வேன். ஆனால் முதலாளித்துவ முறைமையின் கீழ் இயங்கும் எந்த நீதிமன்ற அமைப்பிற்கும் நான் செல்லப் போவதில்லை.

கேள்வி: குடிவரவு, குடியகல்வு சட்டத்தை நீங்கள் மீறியதாக குற்றம் சுமத்தப்படுகிறது. இது தொடர்பாக இலங்கை அல்லது நீங்கள் தங்கியிருக்கும் ஆஸ்திரேலியாவில் ஏதாவது விசாரணைக்கு உட்படுத்தப்படுகிறீர்களா?

பதில்: முதலாளித்துவ சட்டத்தின் கீழ்கூட உயிர் வாழ்வதற்கான உரிமையானது ஏனைய எல்லாவற்றையும் விட மேலானதாக உத்தரவாதப்படுத்தப்பட்டுள்ளது. இன்றைய ஜனநாயக விரோத ஆட்சியில் அந்த உரிமை ஆபத்துக்குள்ளாகி உள்ளது.

இலங்கையில் ஊடகத்துறைக்கு என்ன நடக்கிறது என்பது உங்களுக்குத் தெரியும். உயிருக்குப் பயந்த ஊடகவியலாளர்கள் சிலர் தலைமறைவாகியுள்ளனர். வேறு சிலர் தமது அடையாளங்களை மறைக்க நிர்ப்பந்திக்கப்பட்டுள்ளனர். இந்த நிலைமை ஊடகத்துறைக்கும் அரசியலுக்கும் பொதுவானது.

இலங்கையிலோ வெளிநாட்டிலோ எந்த நீதிமன்றத்திலும் முன்னிலையாவதற்கு நான் தயார். அத்துடன் மக்களிடம் சென்று எனது பாதுகாப்புக்காக மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கைகள் குறித்து விளக்கவும் நான் தயார். எனினும் சில வருடங்களுக்கு முன்னர் கருணா அம்மானுக்காக குடிவரவு குடியகல்வு சட்டத்தை மீறி அரசு போலி கடவுச் சீட்டொன்றை பயன் படுத்தியது.

அவரை நீதி மன்றம் முன் நிறுத்துமாறு அரசு கோரப்பட வேண்டும். அரசுக்கு ஒரு சட்டம், எதிர்க்கட்சிக்கு வேறு ஒரு சட்டம் இருக்க முடியாது. பிரதியமைச்சர் கருணாவை நீதிமன்றத்தில் நிறுத்த அரசு முன்வருமானால் நானும் நீதிமன்றத்தில் பிரசன்னமாகத் தயார்.

கேள்வி: நீங்கள் கடத்தப்பட்டு, பின்னர் பொரளையிலுள்ள கொழும்பு குற்றப் பணியகத்திற்கு அனுப்பப்பட்டவுடன் அங்கு உங்கள் கடவுச்சீட்டை கொண்டுவர ஆஸ்திரேலிய தூதுவரால் எப்படி முடிந்தது?

பதில்: இவை அபத்தமான குற்றச்சாட்டுகள். எனது கடத்தலின் பின்னர் காணாமல் போன ஆஸ்திரேலிய பிரஜையின் கடவுச்சீட்டு விவரங்களை ஆஸ்திரேலிய தூதுவர் பாதுகாப்புச் செயலாளர் கோரியதாக ஊடகங்களில் செய்திகள் வெளியாகின. இந்த செய்திகளை பார்த்த எமது கட்சியின் சக செயற்பாட்டாளர்கள், ஆஸ்திரேலிய தூதரகத்திடம் எனது கடவுச் சீட்டை ஒப்படைத்தனர். அனைத்து ஆவணங்களையும் எனது கட்சி அங்கத்தவர்களிடம் கொடுத்திருந்தேன். அதில் மறைப்பதற்கு எதுவுமில்லை. என்று அந்த நேர்காணலில் பிறேம குமார் குணரட்ணம் தெரிவித்துள்ளார்.

0 Responses to அரசுக்கு குணரட்ணம் சவால்

Post a Comment

Followers

தொடர்புக்கு: vannionline@gmail.com