இன்று அதிகாலை சிரியாவில் யுத்த நிறுத்தம் வந்தாக வேண்டும். ஆனால் சிரியா இதை சரிவரக் கடைப்பிடிக்க மாட்டாது என்று நேற்று வெள்ளை மாளிகை தெரிவித்தது. அமெரிக்க அதிபரும், ஜேர்மனிய சான்சிலர் அஞ்சலா மேர்க்கலும் நேற்று புதன் மாலை தொலைபேசி வழியாக இந்த விவகாரத்தை பேசிக் கொண்டார்கள். சிரிய சர்வாதிகாரி ஆஸாட் யாதொரு வரன் முறைகளையும் கடைப்பிடிப்பார் என்று தாம் நம்பவில்லை என்று தெரிவித்த பராக் ஒபாமா ரஸ்யாவிடம் இது குறித்து கதைக்கும்படி அஞ்சலா மேர்க்கலிடம் கேட்டுக் கொண்டார். அதைத் தொடர்ந்து இன்று கருத்து வெளியிட்ட ஜேர்மனிய வெளிநாட்டு அமைச்சர் நிலமைகளின் பாரதூர தன்மையை உணர்ந்து ரஸ்யா சிரியாவிற்கான தன்னுடைய ஆதரவை விலத்த வேண்டும் என்று கேட்டுள்ளார்.
இன்று அதிகாலை சிரியாவின் அனைத்து இடங்களிலும் வெடிச்சத்தம் இல்லாமல் அமைதி நிலவியது. ஆனால் கொபி அனானிடம் ஒப்புக்கொண்டது போல படைகள் எதுவும் பின் நகர்த்தப்படவோ முகாம் கொண்டு செல்லப்படவோ இல்லை என்று அங்குள்ள மனித உரிமை ஆர்வலர் தெரிவித்தனர். ஆனால் தலைநகருக்கு அருகில் உள்ள ஸபடானி நகரில் குண்டு வெடிப்பு சத்தங்கள் கேட்டுள்ளன. நேற்று புதன் மாலை றஸ்ரின் நகருக்குள் நுழைந்து சிரியப் படைகள் சகட்டு மேனிக்கு சுட்டுத்தள்ளியது தெரிந்ததே. இதில் மொத்தம் 25 பேர் கொல்லப்பட்டுள்ளார்கள்.
பிந்திய செய்திகளின்படி ஒரு பொது மகன் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளார் என்றும் மற்றப்படி பாரிய அனர்த்தங்கள் நடைபெறவில்லை என்றும் கண்காணிப்பு அதிகாரிகள் தெரிவிக்கிறார்கள்.
இதற்கிடையில் நேட்டோ செயலர் ஆனஸ்போ ராஸ்முசன் தற்போது ஆப்கானிஸ்தான் போய் சேர்ந்துள்ளார். எதிர்வரும் 2014 ல் நேட்டோ படைகளை ஆப்கானில் இருந்து விலத்திவிடும் திட்டத்தை எடுத்துரைத்துள்ளார். அவரிடம் கருத்துரைத்த ஆப்கான் அதிபர் கர்மீட் கார்சாய் எதிர்வரும் 2014 ம் ஆண்டு அதிபர் தேர்தல் வருகிறது. அதிபர் தேர்தலில் வெற்றி பெறும் ஒருவர் உடனடியாக நாட்டின் இராணுவப் பொறுப்பை ஏற்று நடாத்த முடியாது என்று கூறினார். ஆகவே நேட்டோ படைகள் விலகிச் செல்லும் காலத்தை மாற்றம் செய்ய வேண்டும் என்றும் கோரியுள்ளார்.
ஆனால் நேட்டோ செயலரோ தமது முடிவில் யாதொரு மாற்றமும் இல்லை ஆப்கான் படைகள் 2014ல் பொறுப்பை ஏற்க வேண்டுமென வலியுறுத்தினார். கர்மீட் கார்சாய் ஏற்கெனவே இரண்டு தடவைகள் அதிபராக இருந்துவிட்டதால் அடுத்த தேர்தலில் அவர் போட்டியிடவில்லை. எனவேதான் புதிதாக வரும் அதிபர் நாட்டையும், பாதுகாப்பையும் ஒரே நேரத்தில் சுமப்பது கடினம் என்றும் தெரிவித்துள்ளார்.
ஆனால் மேலை நாடுகளில் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடியானது ஆப்கான் போருக்காக செலவிடும் பணத்தில் பாரிய வெட்டுக்களை செய்துள்ளது. ஆப்கான் போரில் ஆர்வம் காட்டியவர்கள் இப்போது மேலை நாடுகளின் ஆட்சிக்கட்டில்களிலும் இல்லை. எனவேதான் ஆப்கானிஸ்தான் படைகளே முற்று முழுதாக பொறுப்பை ஏற்க வேண்டும் என்று நேட்டோ செயலர் தெரிவித்துள்ளார். அதேவேளை நேட்டோ படைகள் வெளியேறினாலும் அமெரிக்க படைகளில் கணிசமான அளவு அங்கேயே நிலை கொள்ளும். கர்மீட் கார்சாயின் இந்த வேண்டுதல் சமீபகாலமாக தலபான்களின் கடும் தாக்குதலால் ஏற்பட்ட நடுக்கத்தில் ஏற்பட்ட உதறலா என்பதும் தெரியவில்லை. ஆனால் ஆப்கான் படைகள் தலபான்களுடன் போரிடும் வல்லமை உடையவை என்பதை இதுவரை நிரூபிக்கவில்லை. இவர்கள் தலபான்களைவிட பெரும் மொள்ளமாறிகள் என்று இரகசியமாக பல இடங்களில் பேசப்படுகிறது.
மறுபுறம் தலபான்கள் ஆப்கான் படையினரின் உடையில் தோன்றி நேற்று இரண்டு பிரிட்டன் படையினரை சுட்டுக் கொன்றுள்ளார்கள். தெற்கு ஆப்கான் கெல்மன்ட் பகுதியில் இது நடந்துள்ளது. ஆகவே பாவாடை அணிந்த வேட்டைத் துப்பாக்கிகளுடன் வருவதே தலபான்கள் என்ற கருத்து தற்போது மாறியுள்ளது. பாகிஸ்தானின் மறைமுகமான செயற்பாடுகளும் இதில் இருப்பதால் ஆப்கானின் நிலமை மேலும் மோசமடைய வாய்ப்புள்ளது.
இதற்கிடையில் கடாபியின் ஆயுதக் களஞ்சியத்தில் இருந்து மறைந்துவிட்ட பெருந்தொகை ஆயுதங்கள் சோமாலிய கடற் கொள்ளையருக்கு வேகமாக விற்கப்பட்டு வருவதாக வட ஆபிரிக்க தகவல்கள் கூறுகின்றன. ஏவுகணைகள், நவீன ஆயுதங்கள் என்று கடாபியால் கடற்கொள்ளையர் நவீனமடைந்து வருகிறார்கள்.
மேலும் அமெரிக்காவில் 17 வயது கறுப்பின இளைஞரை சுட்டுக் கொன்றுவிட்டு பின் தப்பி ஓடிய வெள்ளையின நபர் ஜோர்ஜ் சிம்மர் மான் இன்று மடக்கிப் பிடிக்கப்பட்டார். இவர் மீது கொலை வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. தப்பி ஓடியதாக வந்த செய்தி ஏற்பட்ட அரசியல் முறுகல் நிலையில் ஒரு மாற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.
அலைகள்
0 Responses to சிரியாவில் ஒருவர் கொலை கடாபி ஆயுதங்கள் சோமாலிய கொள்ளையரிடம்...