வடகொரியாவின் புதிய அதிபராக அண்மையில் ஆட்சிப்பொறுப்பை ஏற்ற கிம் ஜாங் அன்,
அவரது தந்தையாரும் வடகொரிய முன்னாள் அதிபருமான காலம் சென்ற கிம் ஜாங் இல் இடமிருந்து மேலும் பல புதிய பதவிகளை பொறுப்பேற்றுள்ளார். ஆளும் கட்சியின் மத்திய இராணுவ அமைச்சகத்தின் நிர்வாக தலைவராகவும், பொலைட்பூரோ (Politeburo) எனும் அமைப்பின் முன்னணி உறுப்பினராகவும் தற்போது கிம் ஜாங் அன் தெரிவு செய்யப்பட்டுள்ளார்.
மேலும் ஆளும் தொழிலாளர் கட்சியின் முதன்மை மற்றும் பொது செயலாளர், கொரியாவின் மக்கள் இராணுவத்தின் கட்டளை தளபதி எனும் பொறுப்புக்களை அவர் பெற்றுள்ளார். வடகொரியாவில் அரிதாக நடைபெறும் கட்சி கூட்டமொன்றில் கிம் ஜாங் அன்னுக்கு இப்புதிய பொறுப்புக்கள் வழங்கப்பட்டுள்ளன.
எதிர்வரும் நாட்களில் வடகொரியா நடத்தவுள்ள ஏவுகணை பரிசோதனைக்கு அமெரிக்கா, ஜப்பான், தென்கொரிய நாடுகள் கடும் கண்டனம் விடுத்துள்ள நிலையில் இக்கட்சி கூட்டம் நடைபெற்றுள்ளது.
வடகொரியாவின் முன்னாள் அதிபர்களில் ஒருவரான Kim-II-Sung இன் 100 வது பிறந்த தினத்தை முன்னிட்டும், விண்வெளி ஆராய்ச்சிக்கெனவும் இப்புதிய ஏவுகணை பரிசோதனையை செய்வதாக வடகொரியா தெரிவித்துள்ள போதும், இம்முயற்சி ஆசிய பசுபிக் வலய நாடுகளிடையே பதற்றத்தை ஏற்படுத்தும் என அமெரிக்கா குற்றம் சுமத்தியுள்ளது. மேலும் ஐ.நாவின் தீர்மானமொன்றின் படி, நீண்டதூரம் சென்று இலக்குகளை தாக்கும் ஏவுகணை பரிசோதனையை நடத்துவதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.
தமது நாடுகளுக்கு இந்த ஏவுகணை ஆபத்தை விளைவிக்க கூடும் என உணரப்பட்டால், உடனடியாக சுட்டுவீழ்த்தப்படும் என தென்கொரியா மற்றும் ஜப்பான் அறிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.
வடகொரிய தலைவர் கிம் ஜாங் அன்னுக்கு மேலும் பல புதிய பொறுப்புக்கள் ஒப்படைப்பு
பதிந்தவர்:
ஈழப்பிரியா
12 April 2012
0 Responses to வடகொரிய தலைவர் கிம் ஜாங் அன்னுக்கு மேலும் பல புதிய பொறுப்புக்கள் ஒப்படைப்பு