இலங்கைத்தீவின் தமிழர் தாயகத்தில் முன்னெடுக்கப்படும் சாத்வீகவழிப் போராட்டங்களுக்கு சமாந்திரமாக, புலம்பெயர் நாடுகளிலும் போராட்டங்கள் முன்னெடுக்கப்படுமென நாடுகடந்த தமிழீழ அரசாங்கம் அறிவித்துள்ளது.
இராணுவமயமாக்கல், சிங்களமயமாக்கல், பௌத்தமயமாக்கல் எனும் சிறிலங்கா அரசாங்கத்தின் திட்டமிட்ட நிகழ்ச்சி நிரலுக்கு எதிராக, உண்ணாவிரதப் போராட்டங்களை தொடங்கவிருப்பதாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு அறிவித்திருந்த நிலையில், நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் இந்த அறிவிப்பு வெளிவந்துள்ளது.
இது தொடர்பில் நா.த.அரசாங்கத்தின் தகவற்துறை அமைச்சகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், தமிழீழத் தாயக மக்களினால் முன்னெடுக்கப்படும் அனைத்துவகையிலான போராட்டங்களுக்கு சமாந்திரமாக, புலம்பெயர் தமிழர்களின் விடுதலைச் செயற்பாடுகள் அமைவது முக்கியமானதாகவுள்ளது.
தாயகப் போராட்டங்களுக்கு வலுவூட்டவும் மற்றும் அப்போராட்டத்தின் நியாயப்பாடுகளை வெளியுலகிற்கு கொண்டு செல்லவும், புலம்பெயர் தமிழர்களின் போராட்டங்கள் வழிகோலுமென அச்செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இனநல்லிணக்கம் என்ற சொல்லாடல் ஊடாக தமிழர்களின் உரிமைப் பேராட்டத்தினை சிறிலங்கா அரசாங்கம் நிராகரித்து வரும் நிலையில், த.தே.கூட்டமைப்பு மற்றும் நா.த.அரசாங்கத்தினது இந்த அறிவிப்புகள் வெளிவந்துள்ளன.
இராணுவமயப்படுத்தப்பட்ட நெருக்கடியான சூழலுக்குள், இலங்கையில் தமிழர்கள் வாழ நேர்ந்துள்ள நிலையில், அந்த மக்களின் உணர்வுகளை சுதந்திரமாக வெளிப்டுத்துகின்றவர்களாக புலம்பெயர் தமிழர்களே உள்ளனர் என இலங்கைத்தீவுக்கு வெளியே வாழும் தமிழர்கள் கூறுகின்றனர்.
மன்னார் மறைமாவட்ட ஆயர் வணக்கத்துக்குரிய இராஜப்பு ஜோசப்பு ஆண்டகை மீது சிறிலங்கா அரசாங்கத்தினதும், இனவாதிகளினதும் அச்சுறுத்தல்களுக்கு எதிராகவும், சிறிலங்காவின் சிறைகளில் உள்ள தமிழர் அரசியல் கைதிகளது விடுதலையினை வலியுறுத்தியும் சமீபத்தில் இருவேறு சாத்வீகவழிப் போராட்டங்கள் முன்னெடுக்கப்பட்டிருந்தன.
இந்நிலையில் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் மக்கள் பிரதிநிதி பா.சிறிதரன் அவர்கள், இலங்கையில் தமிழ் தேசிய அரசியலை கட்டியெழுப்புவதற்கான தேவை ஏற்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளார்.
தமிழர்களின் அரசியல் இருப்பினை முன்னிறுத்தி, தாயகத்திலும், புலத்திலும் உள்ள ஈழத்தமிழர்கள் சமாந்திரமாக போராட்டங்களை முன்னெடுப்பதானது, இலங்கைத்தவீனை நோக்கிய சர்வதேசத்தின் அவதானிப்பை கூர்மைப்படுத்த முடியுமென நா.த. அரசாங்கத்தின் தகவற்துறை அமைச்சக செய்திக்குறிப்பில் நம்பிக்கை தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதேவேளை, ஈழத்தமிழ் மக்களுடைய உரிமைப் போராட்டமானது, ஈழத்தமிழ் மக்களால் மட்டுமல்ல , தமிழகம் , மலேசியா என உலகத் தமிழர்களாலும் முன்னெடுக்கப்படுகின்ற போராட்டமாக மாறிவிட்ட நிலையில், தமிழீழத் தாயக மக்களின் சாத்வீகவழிப் போராட்டங்களுக்கு வலுவூட்ட, உலகத் தமிழர்களையும் ஒருங்கிணைத்தே, போராட்டங்கள் முன்னெடுக்கப்படுமெனவும் நாடுகடந்த தமிழீழ அரசாங்கம் தெரிவித்துள்ளது.
தமிழீழத் தாயகத்தின் சாத்வீகவழிப் போராட்டங்களுக்கு வலுவூட்ட புலத்திலும் போராட்டங்கள்!: தமிழீழ அரசாங்கம்
பதிந்தவர்:
ஈழப்பிரியா
09 June 2012



0 Responses to தமிழீழத் தாயகத்தின் சாத்வீகவழிப் போராட்டங்களுக்கு வலுவூட்ட புலத்திலும் போராட்டங்கள்!: தமிழீழ அரசாங்கம்