Content feed Comments Feed
    “சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”

விடுதலை செய் இல்லையேல் போராட்டம்

பதிந்தவர்: தம்பியன் 29 June 2012

நம் சொந்தங்களின் நியாயமான கோரிக்கைகள் ஏற்கப்பட்டு அவர்கள் விடுதலை செய்யப்பட வேண்டும் இல்லையேல் சிறப்பு முகாம்களின் முன்னால் நாம் தமிழர் கட்சி மறியலில் ஈடுபடும் என நாம் தமிழர் கட்சி தலைவர் சீமான் தனது அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

அவ்வறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, அகதிகள் முகாம்களில் உள்ள தங்கள் குடும்பத்தினருடன் வாழ்வதற்காக தங்களை விடுதலை செய்யுமாறு கோரி, செங்கல்பட்டில் உள்ள சிறப்பு முகாம்களில் நீண்ட காலமாக தடுத்து வைக்கப்பட்டுள்ள 14 பேர் இன்றுடன் 15 நாட்களாக உண்ணாவிரதப் போராட்டம் நடத்தி வருகின்றனர்.

இவர்களில் 9 பேரின் உடல் நிலை கடுமையாக பாதிக்கப்பட்டு செங்கல்பட்டு அரசினர் மருத்துவமனையின் தீவிர சிகிச்சை பிரிவில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

ஆனால் அவர்களின் நியாயமான கோரிக்கை பற்றிப் பேச காவல் துறை உயர் அதிகாரிகளோ தமிழக அரசின் மறுவாழ்வுத் துறையினரோ மாவட்ட நிர்வாகமோ இதுவரை முன் வரவில்லை.

செங்கல்பட்டு, பூந்தமல்லி சிறப்பு முகாம்களில் தடுத்து வைக்கப்பட்டுள்ளவர்கள் மீது க்யூ பிரிவு தொடர்ந்த வழக்குகளில் இருந்தெல்லாம் அவர்கள் பிணையில் விடுதலை பெற்றுள்ளார்கள்.

அவ்வாறு இருந்தும் அவர்களை காலவரையின்றி நீதிமன்றத்தில் நிறுத்தாமலேயே தடுத்து வைத்துள்ளனர்.

சட்ட ரீதியாக தங்கள் மீதான வழக்குகளை நீதிமன்ற விசாரணைக்கு உட்படுத்தாமல் இப்படி நீண்ட காலமாக தடுத்து வைத்திருப்பதை எதிர்த்தும், தங்களை இதர முகாம்களில் வாழ்ந்து வரும் குடும்பத்தினருடன் வாழ அனு மதிக்குமாறு கோரியும் இவர்கள் பலமுறை உண்ணாவிரதப் போராட்டம் நடத்தியுள்ளனர்.

அரசுடன் பேசி விடுவிப்போம் என்று ஒவ்வொரு முறையும் உறுதிமொழி அளித்து அவர்களின் போராட்டத்தை மாவட்ட நிர்வாகம் முடித்து விட்டு, பிறகு ஒப்புக் கொண்டதை நிறைவேற்றாமல் தட்டிக்கழித்து வருகிறது. இந்த நிலையில்தான் அவர்கள் மீண்டும் உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

எனவே இந்த உண்மைகளை எல்லாம் சீர்தூக்கிப் பார்த்து, சிறப்பு முகாம்களில் உள்ளோர் அனைவரையும் விடுவித்து, மற்ற முகாம்களில் அவர்கள் வாழ அனுமதிக்க வேண்டும் என்று தமிழக முதல்வரை நாம் தமிழர் கட்சி கேட்டுக் கொள்கிறது.

நம் சொந்தங்களின் நியாயமான கோரிக்கை ஏற்கப்பட்டு அவர்கள் விடுவிக்கப்படாவிட்டால் சிறப்பு முகாம்களின் முன்னால் நாம் தமிழர் கட்சி மறியலில் ஈடுபடும் எனவும் அவரது அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

0 Responses to விடுதலை செய் இல்லையேல் போராட்டம்

Post a Comment

Followers

தொடர்புக்கு: vannionline@gmail.com