ஊடகவியலாளர் நடேசன் படுகொலை செய்யப்பட்டு கடந்த 31 ஆம் திகதியோடு 8 ஆண்டுகள் கடந்துவிட்டன. கொலையாளிகள் யாரென்பது வழமை போல் கண்டறியப்படவில்லை. சாதாரண நிகழ்வாகிப்போன இப்படுகொலை வரலாறு முடிவின்றித் தொடர்கிறது.
நடந்தவற்றிற்குப் பொறுப்புக்கூற வேண்டியவர்கள் அபிவிருத்தி ஊடாக எல்லாவற்றையும் தீர்த்து விடலாமென சர்வதேசத்தை சமாளிக்க முற்படுகின்றார்கள்.
மாநாட்டு அரங்குகளில், தீவிர கொள்கைவாதிகள் போல் காட்டிக் கொள்பவர்கள், பொறுப்புக்கூற வேண்டியவர்களைத் தண்டிக்க சர்வதேசம் தயாராகி வருவதாக ஆறுதல் வார்த்தைகளை அள்ளி வீசுகின்றார்கள்.
எமது அபிலாஷை எதுவாக இருந்தாலும், தமது நலன்களை பாதிக்கும் எந்தவொரு அரசியல் தீர்வினையும் இலங்கை விவகாரத்தில் தலையிடும் வல்லரசாளர்கள் விரும்பமாட்டார்கள் என்கிற யதார்த்தத்தை, தமிழ் மக்கள் புரிந்து கொள்ள வேண்டுமென அண்மையில் நடைபெற்ற தமிழரசுக் கட்சியின் மாநாட்டில் சம்பந்தன் கூறியிருந்தார்.
இந்த மாநாடு இரண்டு விதமான செய்திகளைப் புலப்படுத்தியது.
ஏற்கனவே ஓரங்கட்டப்பட்ட கஜேந்திரகுமார் அணியினர் போன்று, அடிப்படைக்கோட்பாட்டில் ஓரளவு உறுதியாகவிருக்கும் எஞ்சியுள்ள சக்திகளை கூட்டமைப்பிலிருந்து அந்நியப்படுத்தாமல், மேற்குலகின் நிகழ்ச்சி நிரலை நியாயப்படுத்த முடியாது என்பதால், தமிழரசுக்கட்சியை முதன்மைப்படுத்தல் என்பது இம்மாநாட்டின் நோக்கமாக அமைந்தது ..
இருப்பினும் ஒடுக்கு முறைக்கு உள்ளாக்கப்படும் ஒரு தேசிய இனம், பலமான ஒருங்கிணைந்த கூட்டுச் சக்தியின் அவசியத்தை உணர்ந்தாலும், தமிழரசுக் கட்சியினர் அம்மக்களின் எதிர்ப்பார்ப்பிற்கு எதிரான திசையில் பயணிக்க முயல்வது மேலும் மிக மோசமான அழிவுகளையே உருவாக்கும்.
அமெரிக்க- இந்திய நிகழ்ச்சி நிரலைப் புரிந்து கொண்டவர்கள் போல் காட்டிக் கொண்டாலும், ஆசியப் பிராந்தியத்தில் உருவாகும் புதிய மாற்றங்களையும் இலங்கை குறித்தான இவ்விரு நாடுகளின் வேறுபட்ட பார்வையையும் தமிழரசுக் கட்சியின் தலைமை உணர்ந்து கொண்டதாகத் தெரியவில்லை.
இவை தவிர, 80 களில் தமிழீழ விடுதலைப் போராட்டத்தில் குதித்த இயக்கங்களுக்கு பயிற்சியும் ஆயுதமும் வழங்கிய இந்தியா, தமிழீழக் கோட்பாட்டை ஆதரிக்கவில்லை என்பதை தமிழரசுக்கட்சி சொல்லித்தான் தெரிய வேண்டிய அவசியமில்லை.
இலங்கை அரசுடன் இந்தியா கைச்சாத்திட்ட ஒப்பந்தமும், தற்காலிகமாக இணைக்கப்பட்ட வட கிழக்கும், அதனூடாக ஏற்படுத்தப்பட்ட 13ஆவது திருத்தச்சட்டமுமே, போராட்ட இயக்கங்களுக்கு இந்தியா வழங்கிய உதவியின் பின்புலத்தை உணர்த்தியது.
இதன் பின்னர், இலட்சியத்தை யாருடைய நலனிற்காகவும் விட்டுக் கொடுக்க முடியாதென்ற விடுதலை புலிகளுக்கும் இந்தியாவிற்குமிடையே மோதல் மூண்டது பழைய வரலாறு.
அத்தகைய முரண் நிலைப் போக்கினைத் தாமும் கடைப்பிடிக்காமல், அவர்களுடைய பிராந்திய நலன்களுக்கு ஏற்ற வகையில் தீர்வினைப் பெற்றுக் கொள்வதே சரியானது என்கிற வாதத்தோடு முன் வருகிறது தமிழரசுக்கட்சி.
அதே வேளை அமெரிக்காவைப் பொறுத்தவரை தேசிய இனப்பிரச்சினைக்கான தீர்வாக வட மாகாணசபை தேர்தலையும், 13ஆவது திருத்தச்சட்ட அமுலாக்கத்தையும் எதிர்பார்க்கின்றது.
ஆனாலும் இவற்றிற்கு அப்பால், தனது பிராந்திய பாதுகாப்பு வியூகத்திற்குள் மேற்குலக எதிர்ப்பு அணியின் ஆட்சியதிகாரம் இருப்பது ஆபத்தாக அமையுமென்பதால், ஆட்சி மாற்றமொன்றினை எதிர்பார்த்து, அதற்கேற்ற வகையில் மனித உரிமை மீறல் காய்களை நேர்த்தியாக நகர்த்துகின்றது மேற்குலகம்.
ஆகவே இவ்வல்லரசுகளின் நகர்வுகள் ஊடாக சாதகமான சூழ்நிலை உருவாகி வருகிறது என்பது போலான தோற்றப்பாட்டினை ஏற்படுத்த முனையும் தமிழரசுக்கட்சியானது, 'பிரிந்த வடக்கு கிழக்கையும், 18 ஆவது திருத்தச் சட்டத்தின் வெப்பத்தால் உருகி உருக்குலைந்த 13 ஆவது திருத்தச் சட்டத்தையும் வல்லரசாளர்களின் நலன்களிற்காக ஏற்றுக்கொள்வதைத் தவிர வேறு வழியில்லை' என்று கூறப்போகிறது.
இதனை வெளிப்படையாகக் சொல்லாமல், தாம் உலக அரசியலின் இராஜதந்திர சூட்சுமங்களைப் புரிந்தவர்கள் என்பது போன்று பூடகமான வார்த்தையாடல்கள் ஊடாக போலியான எதிர்பார்ப்பொன்றை மக்களிடம் திணிக்க தமிழரசுக் கட்சியின் மாநாட்டு மேடை பயன்படுத்தப்பட்டுள்ளது போல் தெரிகிறது.
சமஷ்டி, தனி நாடாக உயர்ந்து, மாவட்ட அபிவிருத்தி சபையாக தேய்வடைந்த வரலாற்றையும் நாம் கண்டுள்ளோம்.
பின்னர் மாவட்ட சபை இயக்கங்களின் இணைவோடு திம்புவில் சுய நிர்ணய உரிமைக் கோட்பாடாகி, அதன் மீள் உறுதிப்படுத்தல் 2001 ஆம் ஆண்டு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தேர்தல் விஞ்ஞாபனத்திலும் இடம் பிடித்தது.
அதாவது இலங்கையில் வாழும் தமிழர்கள் தனித்துவமான தேசிய இனம் என்பதை அங்கீகரித்தல், தாயக் கோட்பாட்டை ஏற்றுக் கொள்ளல் ,இதன் அடிப்படையில் தமிழ்த் தேசத்தின் பிறப்புரிமையான சுய நிர்ணய உரிமையை அங்கீகரித்தல், இலங்கையில் வாழும் அனைத்து தமிழ் மக்களின் பூரண பிரஜாவுரிமையையும் அடிப்படை ஜனநாயக உரிமைகளையும் ஏற்றுக்கொள்ளல் என்பதை அடிப்படையாகக் கொண்ட வகையில், தேசிய இனப்பிரச்சினைக்கான பொருத்தமான தீர்வொன்றை எட்டுதல் என்றவாறு கூட்டமைப்பின் முதல் தேர்தல் விஞ்ஞாபனம் வலியுறுத்துகிறது.
இந்த அடிப்படைகளிலிருந்து விலகிச் சென்று வல்லரசாளர்களின் விருப்பிற்கேற்ப தீர்வினை ஏற்றுக்கொள்ள வேண்டுமாயின் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு தமிழரசுக்கட்சியாக பழைய அவதாரம் எடுக்க வேண்டும்.
ஆயினும் மேற்குறிப்பிடப்பட்ட நான்கு அடிப்படைக் கோட்பாடுகளை ஏற்றுக் கொண்டு பயணித்த ஜோசப் பரராஜசிங்கம், நடராஜா ரவிராஜ், கிட்டிணன் சிவநேசன், அரியநாயகம் சந்திர நேரு போன்ற கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் அதற்காகவே தமது இன்னுயிரை ஈகம் செய்தார்கள்.
2001 ஒக்டோபரில் உருவாக்கப்பட்ட தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு அந்த ஆண்டு நடைபெற்ற தேர்தலில் தேசியப் பட்டியலோடு சேர்த்து 15 ஆசனங்களைக் கைப்பற்றியது.
2004 இல் நாடாளுமன்ற ஆசனங்கள் 22 ஆக உயர்ந்தது. முள்ளிவாய்க்கால் பேரவலத்தின் பின்னர் 2010 இல் நடந்த பொதுத் தேர்தலில் பெற்ற ஆசனங்கள் 14ஆகக் குறைவடைந்தது.
இதில் குறிப்பிடத்தக்க விடயம் என்ன வென்றால் 2004 இல் கூட்டமைப்பிற்கு கிடைத்த மொத்த வாக்குகள் 633, 654. 2010 இல் அது 233, 195 ஆக வீழ்ச்சியடைந்தது.
2004 இல் யாழ்ப்பாணத்தில் கூட்டமைப்பிற்கு வாக்களித்தோர் எண்ணிக்கை 257,320 ஆக இருந்தாலும்
2010 இல் மிகக் குறைவான எண்ணிக்கையாக 65,119 வாக்குளை மட்டுமே அது பெற்றது.
மட்டக்களப்பிலும் இதே போன்று 2004 இல் 161,011 ஆகவும், 2010 இல் 66,235 ஆகவும், வீழ்ச்சியடைந்துள்ள நிலையை அவதானிக்கலாம்.
இருப்பினும் 4ஆம் கட்டப்போரில் நேரடியாகப் பாதிப்புறாத குடாநாட்டின் வாக்கு எண்ணிக்கையில் ஏற்பட்ட சரிவு, நாடாளுமன்ற அரசியலில் இருந்து மக்கள் அந்நியமாகி விலகிச் செல்லும் போக்கினை மேற்கூறிப்பிடப்பட்ட புள்ளி விபரங்கள் சுட்டிக் காட்டுவதை நோக்க வேண்டும்.
இந்நிலையில் சிங்கக்கொடி விவகாரத்திலும், 'வட கிழக்கு எமது தாயகம் என்று யார் சொன்னது' என்கிற அடி பணிவு அரசியல் கதைகளாலும் விசனமடைந்துள்ள மக்களின் எதிர்ப்பலைகளும், தமிழரசுக்கட்சியை முதன்மைப்படுத்தும் போக்கும், தமிழ்த்தேசிய அரசியலின் இருப்பிற்கு பெரும் ஆபத்தினை உருவாக்கப் போகிறதென பல அரசறிவியலாளர்கள் எச்சரிக்கின்றார்கள்.
மக்கள் போராட்டமற்ற உயர்குழாம் (Elite) அரசியலை முன்னெடுப்பவர்களுக்கு இவையெல்லாம் ஒரு பொருட்டல்ல.
அண்மைய குடிசன மதிப்பீட்டின் பிரகாரம் வட மாகாணத்தின் சனத்தொகை 934,392 எனக் கூறப்படுகிறது. ஏற்கனவே 2010 இல் குடா நாட்டில் கூட்டமைப்பிற்கு வாக்களித்தோர் தொகை 65,119 ஆக இருக்கையில், தற்போது கூட்டமைப்பில் ஏற்பட்டுள்ள நெருக்கடியால் மக்கள் சலிப்படைந்து ஒதுங்கிச் செல்வதன் ஊடாக, இத்தொகை வருகிற தேர்தலில் மேலும் குறைவடையும் வாய்ப்பு அதிகமுண்டு.
தமிழரசுக்கட்சியை தமது ஏக தலைமையாக தமிழ் மக்கள் எப்போதும் ஏற்றுக்கொண்டு வந்துள்ளார்களென்று மாநாட்டு மேடையில் பிரசங்கம் செய்யும் சிங்கக்கொடியோன், 2010 தேர்தலில் யாழ்ப்பாணத்தில் விழுந்த மொத்த வாக்கினையும், திருமலையில் மூன்றாவது இடத்திற்கு வந்த கூட்டமைப்பு பெற்ற 33,268 வாக்கினையும் சற்று கவனத்தில் கொள்ள வேண்டும்.
2010 இல் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பிற்கு வட கிழக்கு முழுவதும் அளிக்கப்பட்ட மொத்த வாக்குகள் 233,190. இதில் வடக்கில் மட்டும் 934,392 மக்கள் வாழ்கின்றார்கள். இந்த நிலையில் ஏக பிரதிநிதித்துவக் கதைகள் சற்று மிகைப்பட சோடிக்கப்பட்ட விடயமாகவே தென்படுகின்றது.
ஆனாலும் விடுதலைப்புலிகள் காலத்தில் (2004) நடந்து பொதுத் தேர்தலில் மொத்தமாக 633,654 மக்கள் கூட்டமைப்பிற்கு வாக்களித்திருந்தார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
ஏக பிரதிநிதித்துவம் என்கிற பரப்புரைகள் சுய பிம்பங்களை பூதாகரமாக காட்ட உதவுமென தமிழரசுக் கட்சி நினைத்தால் அது மேலும் பாரிய பின்னடைவுகளையே ஏற்படுத்தும்.
வல்லரசுகளின் மீது நம்பிக்கை கொள்ளும் அளவிற்கு மக்கள் மீது இவர்களுக்கு நம்பிக்கை இல்லை போல் தெரிகிறது.
சிறைக்கைதிகளின் உண்ணா நிலைப் போராட்டத்தை கோப்பி கொடுத்து முடித்தது கூட்டமைப்பு. ஆனால் அதே தமிழ் அரசியல் கைதிகள் அடைக்கப்பட்ட சிறை வாசலில் ஆர்ப்பாட்டம் ஒன்றினை நடத்தினர் மனோ கணேசன் தலைமையிலான பல கட்சி கூட்டணிகள். தமிழரசுக்கட்சியை அங்கு காணவில்லை.
கடந்த கால வரலாற்றை நோக்கினால் ,கூட்டமைப்பின் உருவாக்கத்தில் பங்குகொண்ட அகில இலங்கை தமிழ் காங்கிரஸ் 2010 இல் வெளியேறியது.
தற்போது தமிழரசுக்கட்சியை தலைமைச் சக்தியாக முன்னிலைப்படுத்த முனையும் சில நகர்வுகளால், கூட்டமைப்பின் ஏனைய கட்சிகள் உடைந்து செல்லும் அபாயம் ஏற்பட்டிருப்பதாக சொல்லப்படுகிறது.
நொந்து போயுள்ள மக்கள் தற்போது எதிர்ப்பார்ப்பது, ஒருங்கிணைந்த, கோட்பாட்டில் உறுதியான தலைமைத்துவத்தை மட்டும் தான் என்பதை இவர்கள் உணர்வார்களா?
ithayachandran@hotmail.co.uk
தமிழரசுக்கட்சியாக மாறுகிறதா தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு? | இதயச்சந்திரன்
பதிந்தவர்:
தம்பியன்
03 June 2012
0 Responses to தமிழரசுக்கட்சியாக மாறுகிறதா தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு? | இதயச்சந்திரன்