தமிழக மீனவர்கள் மீதான இலங்கைக் கடற்படைத் தாக்குதலைக் கண்டித்து, நடவடிக்கை எடுக்குமாறு பிரதமருக்கு முதல்வர் ஜெயலலிதா கடிதம் எழுதியுள்ளார்.
இந்தக் கடிதத்தில் அவர் கூறியுள்ளதாவது:
"கடந்த ஜூன் 26ம் நாள் இலங்கைக் கடற்படை தமிழக மீனவர்கள் மீது தாக்குதல் நடத்தி அத்துமீறி நடந்துள்ளது. இது மீண்டும் மீண்டும் தொடர்வது குறித்து தங்கள் கவனத்துக்குக் கொண்டு வர விரும்புகிறேன்.
கடந்த ஜூன் 25ம் நாள் இராமேஸ்வரத்தில் இருந்து 704 இயந்திரப் படகுகளில் மீனவர்கள் மீன் பிடிக்க கடலுக்குச் சென்றுள்ளனர்.
அதில் 45 படகுகளில் சென்றவர்கள் கச்சத்தீவு அருகே மீன்பிடித்துக் கொண்டிருந்தபோது, ஜூன் 26ம் நாள் இலங்கைக் கடற்படையினர் அவர்கள் மீது தாக்குதல் நடத்தி, வலைகளை அறுத்தெறிந்து, 10 படகுகளை முழுமையாக சேதப்படுத்தியுள்ளனர்.
தமிழகத்தில் இருந்து செல்லும் இந்திய மீனவர்கள் மீது இலங்கைக் கடற்படை இவ்வாறு தாக்குதல் நடத்தி அட்டூழியம் செய்வதை உங்கள் கவனத்துக்குக் கொண்டுவர விரும்புகிறேன்.
கடந்த 12 மாதங்களில் இது போன்று பல முறை நடந்துள்ளதால், இதில் தாங்கள் தலையிட வேண்டும் என்று எதிர்பார்க்கிறேன்.
தற்போது நடந்துள்ள இந்தக் காட்டுமிராண்டித் தனமான தாக்குதல் தமிழக மக்களை மிகவும் அதிர்ச்சிக்கு உள்ளாக்கியுள்ளது.
மீனவர்கள் மத்தியில் மனதளவில் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.
கடந்த காலங்களில் கச்சத்தீவு பகுதியில் பரம்பரை பரம்பரையாக தமிழக மீனவர்கள் மீன்பிடித்து வந்துள்ளனர்.
அவ்வகையில் அரசியல் எல்லை பூகோள எல்லையைக் கடந்து எந்தவித தடைகளும் இல்லாமல் தமிழக மீனவர்கள் கச்சதீவு பகுதியில் மீன்பிடிக்கும் அதே பழைய நிலை ஏற்பட வேண்டும் என்று நான் விரும்புகிறேன்.
இந்தப் பிரச்னையை இலங்கை அரசாங்கத்தின் கவனத்துக்கு எடுத்துச் சென்று, தங்கள் பரம்பரை மீன்பிடி உரிமையான வாழ்வாதாரத்தை எதிர்நோக்கிச் செல்லும் ஒன்றும் அறியாத அப்பாவி மீனவர்களை இலங்கைக் கடற்படை துன்புறுத்துவதைத் தடுக்க இலங்கை அரசு நடவடிக்கை எடுக்க அதனை வற்புறுத்த வேண்டும் என்று தங்களை கேட்டுக்கொள்கிறேன்.
இவ்வாறு முதல்வர் அந்தக் கடிதத்தில் கேட்டுக்கொண்டுள்ளார்.
மீனவர்கள் மீது இலங்கை கடற்படை தாக்குதல்! கண்டித்து பிரதமருக்கு முதல்வர் கடிதம்
பதிந்தவர்:
தம்பியன்
28 June 2012
0 Responses to மீனவர்கள் மீது இலங்கை கடற்படை தாக்குதல்! கண்டித்து பிரதமருக்கு முதல்வர் கடிதம்