Content feed Comments Feed
    “சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”

இலங்கைக்கு எதிரான நடவடிக்கைகள் குறித்து விவாதிக்கவும், சர்வதேச போர்க்குற்ற விசாரணை நடத்த வேண்டும் என்ற கோரிக்கையையும் வலியுறுத்தவும் பசுமைத் தாயகம் குழுவினர் ஜெனீவா பயணமாகவுள்ளதாக பாமக நிறுவுனர் ராமதாஸ் தெரிவித்துள்ளார்.

இது குறித்து அவர் வெளியிட்ட அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,

இலங்கையில் ஒன்றரை லட்சத்திற்கும் அதிகமான தமிழ் மக்களை கொடூரமான முறையில் படுகொலை செய்த இலங்கை அதிபர் ராஜபக்ச மற்றும் அவனது கூட்டாளிகள் மீது போர்குற்ற விசாரணை நடத்த ஐ.நா.ஆணையிட வேண்டும் என்று உலகம் முழுவதும் உள்ள தமிழர்கள் வலியுறுத்தி வருகின்றனர்.
இலங்கையில் நடந்த போர்க்குற்றங்கள் பற்றி ஜெனீவாவில் உள்ள ஐ.நா. மனித உரிமை ஆணையக் கூட்டத்தில் தற்போது விவாதிக்கப்பட்டு வருகிறது. என்னால் நிறுவப்பட்ட பசுமைத்தாயகம் அமைப்பு ஐக்கிய நாடுகள் அவையால் சிறப்பு ஆலோசனை அமைப்பாக அங்கீகரிக்கப்பட்டிருக்கிறது.

அந்த அடிப்படையில் தற்போது ஜெனிவாவில் நடைபெற்று வரும் மனித உரிமை ஆணையத்தின் 22வது கூட்டத்தில் பங்கேற்றுள்ள பசுமைத்தாயகம் அமைப்பு, இலங்கையில் நடைபெற்ற இனப்படுகொலை குறித்து சர்வதேச போர்க்குற்ற விசாரணை நடத்தப்பட வேண்டும் என்று கோரி அறிக்கை தாக்கல் செய்திருக்கிறது.

இதுதவிர ஐ.நா. மனித உரிமை ஆணையக் கூட்டத்தில் பசுமைத் தாயகத்தின் பிரதிநிதிகளாக பங்கேற்றுள்ள தமயந்தி ராஜேந்திரா, வழக்கறிஞர்கள் தாஷா மனோரஞ்சன், கார்த்திகா தவராஜா, மருத்துவர் யசோதா நற்குணம் ஆகியோர் வாய்ப்பு கிடைக்கும் போதெல்லாம் இலங்கையில் நடைபெற்ற இனப்படுகொலை குறித்தும், அந்நாட்டின் மீது சர்வதேச போர்க்குற்ற விசாரணை நடத்த வேண்டியதன் அவசியம் குறித்தும் வலியுறுத்தி வருகின்றனர். இதுவரை மொத்தம் 4 முறை அவர்கள் இந்தக் கோரிக்கையை வலியுறுத்தியுள்ளனர்.

இலங்கை நிலைமை குறித்த ஐ.நா. மனித உரிமை ஆணையரின் அறிக்கை வரும் 20ம் திகதி ஆணையக்கூட்டத்தில் தாக்கல் செய்யப்படவுள்ளது. தொடர்ந்து இலங்கைக்கு எதிரான அமெரிக்கத் தீர்மானத்தின் மீதான விவாதம் மற்றும் வாக்கெடுப்பு வரும் 21 மற்றும் 22ம் திகதிகளில் நடைபெறவிருக்கிறது.

இதில் பங்கேற்பதற்காக பசுமைத்தாயகம் அமைப்பின் செயலாளர் இர.அருள், வழக்கறிஞர் கே.பாலு, முன்னாள் மக்களவை உறுப்பினர் இரா. செந்தில் ஆகியோர் இன்றிரவு சென்னையிலிருந்து ஜெனீவா புறப்பட்டுச் செல்கின்றனர்.

ஜெனீவா கூட்டத்தில் பங்கேற்பதற்காக வந்துள்ள பல்வேறு நாடுகளின் தூதர்கள் மற்றும் மனித உரிமை அமைப்புகளின் பிரதிநிதிகளை சந்திக்கவுள்ள இவர்கள், இலங்கைக்கு எதிரான நடவடிக்கைகள் குறித்து விவாதிக்க இருப்பதுடன், அந்நாட்டின் மீது சர்வதேச போர்க்குற்ற விசாரணை நடத்த வேண்டும் என்ற கோரிக்கையையும் வலியுறுத்த உள்ளனர்.

ஐ.நா. மனித உரிமை ஆணையர் நவநீதம் பிள்ளை அவர்களையும் இவர்கள் சந்தித்து இலங்கை பிரச்சினை குறித்து பேசுவர் என்பதைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

0 Responses to இலங்கைப் பிரச்சினை!- நவனீதம்பிள்ளையை சந்திக்க ஜெனீவா செல்கிறது பசுமைத் தாயகம் குழு

Post a Comment

Followers

தொடர்புக்கு: vannionline@gmail.com