Content feed Comments Feed
    “சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”


ஏ.சி அறை தான் ஆனால் வெட்டவெளி காற்றில் பறந்த சுகம்.
ஆறாயிரம் சதுரடி அரங்கம் தான் ஆனால் எங்கும் இதம் தரும் பசுமை படர்ந்திருந்தது. 

ஆம் சேலம் சோனா கல்லூரியின் உயர் ரக பி.ஜி அரங்கம் ஏப்ரல் 24 ம் தேதி மட்டும் 'தளிரால்' ஒரு வயகாடாய் மாறி மனம் வீசியது.

ந(ர)கரத்தின் பிடியில் சிக்கிய மனித மனங்களை மாற்று சிந்தனையின் மூலம் உழுது 'இயற்கை ஆர்வத்தை' துளிர் விட செய்யும் தளிரே 'தளிர்' எனும் மாணவர்களின் அமைப்பு.

இன்றைய மனிதர்கள் உணவை உண்கின்றனரா? அல்லது உணவு இன்றைய மனிதர்களை உண்கிறதா? என்ற கேள்வியோடு, இயற்கையோடு இணைந்த இயற்கை வேளாண் விஞ்ஞானி அய்யா கோ.நம்மாழ்வார் தலைமையில் ஒரு கருத்தரங்கம் நடத்தியது தளிர்.

'இன்றைய நுகர்வு பண்பாட்டு தாக்கத்தால் சிதைவுற்ற அடையாளங்களில் நம் அடிநாதமான உழவும் ஒன்றாக மாறி வருகிறது. இது வருத்தமான ஒன்று. ஆனால் இதை நம்மால் மாற்ற முடியும். அதற்கு நாம் முயற்சிக்க வேண்டும். நம்மின் முயற்சியின் தொடக்கம் தான் 'உழவுக்கும் உயிர் உண்டு' என்ற கருத்தரங்கம். 

மாணவர்கள் எதிர்கால சமூகத்தின் முதுகெலும்புகள். ஆசிரியர்கள் முதுகெலும்பை நிமிர்த்தும் சிந்திக்கும் மூளை. இவை அனைத்தையும் உயிர்ப்புடன் இயக்கும் இதயம் உழவு போற்றும் உழவர்கள். எனவே தான் இயற்கையோடு இணைந்த ஆரோக்கியமான வாழ்வை பெற ' இயற்கை வேளாண் போற்றும்' இந்த கருத்தரங்கில் மாணவ, மாணவிகள், ஆசிரியர்கள், விவசாயிகள் என அனைவரையும் இணைத்தோம் வாருங்கள் நீங்களும் இணையுங்கள் இதயம் நிரப்புங்கள்' என்றனர் தளிரின் ரியாஸ் அகமது, விக்னேஷ். 

இயற்கை வேளாண்மை பற்றி வெகு இயற்கையாக பேச தொடங்கினார் நம்மாழ்வார்.

'நம் வேளாண் உணவு சங்கிலி கொண்டது. மேல் மட்டத்தின் கழிவு கீழ் மட்டத்தின் உணவாகிறது அதாவது மனிதர்கள் வேண்டாம் எனும் புண்ணாக்கு தட்டு எனும் கழிவு ஆடு மாடுகளுக்கு உணவாகிறது.

இதை உண்டு மாடு போடும் சாணத்தில் வண்டு உண்கிறது. அதிலிருந்து புழு வர அதை கோழி உண்கிறது அது போடும் முட்டையின் எச்சம் பேக்டீரியா உருவாகிறது. இதை மண் புழு உண்கிறது இதன்வழி நீர் பதம் ஏற்பட்டு செடி தண்ணீரை உண்கிறது. இந்த செடியில் வருவதை பறவை மற்றும் மனித உயிர்கள் உண்கிறோம். ஆக இப்படிதான் உணவு சங்கிலியில் இயங்குகிறது உலகம். இதுதான் இயற்கை வேளாண். ஆனால் இன்று பன்னாட்டு மரபினி விதைகளில் அந்நிறுவனங்கள் வைக்கும் விஷம் இந்த மண்ணை மலடாக்கி மனிதனையும் மலடாக்க தொடங்குகிறது. இந்த உணவு சங்கிலியை பாதிக்கிறது. அது பாதித்தால் இந்த உலகமே பாதிக்கும். 

மான்சாண்டோ போன்ற அமெரிக்க கம்பனிகள் அபரித மகசூல், லாபம் என்ற முகமூடியை போட்டுகொண்டு விவசாயிகளை பலியாக்குகிறது அவர்கள் வழி இந்த மனித இனத்தையும் தான்.... விதையில் இவர்கள் ஏற்றும் விஷம் அதை உண்ணும் நமக்கும் செல்கிறது. இதனால் புற்று நோய் வருகிறது என ஆராய்ச்சியாளர்கள் கூறுகிறார்கள்... இந்திய குடிமக்கள் எதை சாப்பிட வேண்டும் என பன்னாட்டு கம்பனிகள் தான் முடிவு செய்கிறது என்ற நிலை ஆபத்தானது.

கடந்த 15 ஆண்டுகளில் 2.50 லட்சம் விவசாயிகள் தற்கொலை செய்து கொண்டதாக நாடாளுமன்றத்தில் கணக்கு காட்டப்பட்டது. அப்போது, கருத்து தெரிவித்த திட்டக் கமிஷன் துணைத் தலைவர் மாண்டேக்சிங் அலுவாலியா, பன்னாட்டு நிறுவனங்கள் நமது நாட்டில் விவசாயம் செய்ய வேண்டிய தருணம் வந்துவிட்டது என்கிறார். உணவுத்துறை மந்திரியோ, குறு நிலங்களை வைத்திருக்கும் விவசாயிகளே தற்கொலை செய்து கொண்டதாக தெரிவிக்கிறார். ஆனால், தற்கொலை செய்து கொண்ட விவசாயிகளில் பலர் 5 ஏக்கருக்கு மேல் நிலம் வைத்திருந்தார்கள் என்பது கூட அவருக்கு தெரியவில்லை. பன்னாட்டு நிறுவனங்களின் கையில் விவசாயத்தை ஒப்படைக்கும் நோக்கில் செயல்படுகின்றனர்.

பன்னாட்டு நிறுவனங்களின் கையில் விவசாயம் சென்று விட்டால் உணவு பஞ்சம் ஏற்படுவது உறுதி. 

நமது நாடு வறுமையில் இருப்பதற்கு காரணம், அயல்நாட்டார் சொல்லி்க கொடுக்கும் விவசாயத்தை அப்படியே கேள்வி ஏதுமின்றி ஏற்றுக் கொண்டதே காரணம். கோவில்பட்டியில் உள்ள விவசாய நிலத்தில் என்ன செய்வது என்பதை கோவை, புதுடில்லி, அமெரிக்கா ஆகிய இடங்களில் முடிவு செய்யப்படுகிறது.

பலவற்றை தவறாக புரிந்து கொண்டு செயல்படுகிறோம். இயற்கை விவசாயம் வளர வேண்டும் அதற்கு வேளாண் உற்பத்தி விதைகள் விவசாயிகளின் கையில் இருக்க வேண்டும். பன்னாட்டு நிறுவனங்களின் கையில் இருக்கக் கூடாது. விவசாயிகள் அந்த விதைகளை பயன்படுத்தக் கூடாது. இயற்கை வேளாண்மையால் ஆரோக்கியமும் வளரும் லாபமும் கிடைக்கும்... இது எளிதும் கூட. உதாரணமாக மீன் கழிவுகள் வாங்கி அதில் வெல்லம் கலந்து 20 நாட்கள் வைத்து 10 லிட்டர் தண்ணீரில் இதை 100 கிராம் கலந்து ஸ்ப்ரே செய்தால் அறுவடை வரை பச்சை பசேலென பசுமை மாறாது இருக்கும் எனவே இயற்கை வேளாண் பயன்படுத்துவோம் இதற்கு மாணவ சமுதாயத்தின் தளிர் இணைந்துருப்பது நம்பிக்கை தருகிறது' என்றார் உணர்வோடு.

ஆர்வமாக பங்கேற்ற அனைவருக்கும் இயற்கை உணவான நரிபயிர் உருண்டையும் எலுமிச்சை பழரசமும் கொடுக்கப்பட்டது.

'உழுறவன் கணக்கு பார்த்தா ஒலக்கை கூட மிஞ்சாது'ன்னு கிராமங்களில் ஒரு சொலவடை உண்டு இந்த வறுமை நிலைக்கு பன்னாட்டு விதைகள் முக்கிய காரணம் என இந்த கருத்தரங்கில் புரிந்துகொண்டேன்' என்றார் ஆசிரியர் முத்துகுமார்.

'நான் பெங்களூருவில் படித்தவள்.. மெட்ரோ சிட்டி என்பதால் அங்க எல்லாமே பாஸ்ட் தான்... பீசா பர்கர் னு பேண்டசி உணவு தான்... 'நாகரீகம்னு லேட்டஸ்டா வர்றது எல்லாம் திங்குறது விட அருவருப்பானது எதுவுமில்லை' என அய்யா சொன்னபின் தான் உண்மை உறைத்தது. பிறந்த குழந்தைக்கு தாய் பால் கொடுக்கிறோம் எனக்கு ஒரு வயசுல பெண் குழந்தை இருக்கு தாய் பாலை விட ஆரோக்கியமான உணவு வேறில்லை காரணம் அது இயற்கை உணவு... பிறந்த குழந்தைக்கே இயற்கை உணவு தரும் போது வளர வளர ஏன் நாம் செயற்கை உணவு தர வேண்டும்? இயற்கை உணவு உண்டால் இயற்கை மரணமே தள்ளி போகும் ஆரோக்கியம் உண்டு என உணர்ந்தோம் நாங்கள் ஆசிரியர்களாய்  மாணவ கண்மணிகளுக்கு சொல்லி தருவோம் இன்று நாங்கள் மாணவிகள் ஆகி நிறைய கற்றுகொண்டோம் இனி பாஸ்ட் புட்ஸ்க்கு குட் பை இயற்கை உணவுக்கு சலுயூட்' என்றார் மேலாண்மை துறை ஆசிரியர் நித்யா.

'எங்கள் கல்லூரி விடுதி மாணவ மாணவிகளுக்கு இயற்கை வேளாண்மையில் விழைந்தவைகளில் இருந்து உணவு தர எங்கள் தலைமையிடம் பேச உள்ளேன் சம்மதம் கிடைத்துவிடும் இது அமைந்தால் ஆயிரக்கணக்கான மாணவ செல்வங்களை இயற்கையோடு இணைந்த பயனை பெறுவார்கள்' என்றார் துறை தலைமை பேராசிரியர் லதா கிருஷ்ணன்...

மாணவர்களின் முயற்சியும் விவசாயிகளின் பக்கபலமும் வேளாண் விஞ்ஞானியின் ஆலோசனைகளும் பாமரர்களை பற்றிகொண்டால் பன்னாட்டு விதைகள்  இல்லா இயற்கை வேளாண்மையாக நம் மண் வாசனை வீசும்.. திரும்பிய அனைவருக்கும் மரக்கன்று கொடுக்கப்பட

இயற்கை போக்கில் இணைந்து பயணித்தால் மரணத்தையே வெல்லும் மானிடம் என்பதை பறைசாற்றுகிறது மாணவர்களின் தளிர்.....


செய்தி, படங்கள்: இளங்கோவன்

0 Responses to மரணத்தை வெல்ல வேண்டுமா? வழி காட்டுகிறார்கள் மாணவர்கள்!

Post a Comment

Followers

தொடர்புக்கு: vannionline@gmail.com