Content feed Comments Feed
    “சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”


மாமல்லபுரம் மரக்காணம்  தலித்துக்களுக்கு எதிராக இடம்பெற்ற தாக்குதல் சம்பவங்கள் தொடர்பில் இதுவரையில் காவல்துறையினர் எவரையும் கைது செய்யாதது ஏன் என சிபிஎம் கேள்வி எழுப்பியுள்ளது.

மாமல்லபுரத்தில் நடைபெற்ற வன்னியர் சங்க விழாவிற்கு வாகனங்களில் வருகை தந்த பாமக தொண்டர்களே  பாண்டிச்சேரியை அடுத்து வழி நெடுகிலும் வன்முறைச் சம்பவங்களில் ஈடுபட்டுள்ளதாகவும்,  வழியில் சென்றவர்கள் மீது மது பாட்டில்கள் வீசித் தாக்குதல் நடத்தியதுடன்,  மரக்காணத்தை அடுத்த கடையன் தெரு என்ற தலித் மக்கள் குடியிருப்புகள் மீது தாக்குதல் தொடுத்துள்ளதாகவும் சி.பி.எம் குற்றம் சுமத்தியுள்ளது.

தங்கள் வாழ்வாதாரத்தை பாதுகாக்க, நலனை காக்க சாதி வித்தியாசமில்லாமல் உழைக்கும் மக்கள் ஒன்றுபட்டு போராட வேண்டிய நேரத்தில், உழைப்பாளி மக்களாக உள்ள பிற்படுத்தப்பட்ட, தலித் மக்களிடையே மோதலை உருவாக்கி, அரசியல் ஆதாயம் தேடும் சக்திகள் மீது தமிழக அரசு உறுதியான நடவடிக்கைகளை எடுக்க வேண்டுமெனவும், இத்தககுதல்களுக்கு பின்னணியில் இருப்பவர்களை உடனடியாக கைது செய்ய வேண்டும் எனவும் கோரியுள்ளது.  மேலும், தமிழக மக்களும் இத்தகைய சக்திகளின் நடவடிக்கைகளுக்கு இரையாகாமல் எச்சரிக்கையாக இருக்க வேண்டுமெனவும், அமைதி காக்க வேண்டுமெனவும் கூறியுள்ளது.

 மரக்காணம் பகுதியில் தலித்துக்கள் அடங்கிய ஒரு குழுவினருக்கும், பாமக தொண்டர் குழுவுக்கும் இடையில் இடம்பெற்ற மோதலில் 11 க்கும் அதிகமான வீடுகள் தீவைத்து எரிக்கப்பட்டதாகவும், தமிழக அரசின் 4 பேருந்துக்கள், புதுச்சேரி அரசின் ஒரு பேருந்து, தனியார் ஒருவரின் கார் என்பன எரிக்கப்பட்டு விட்டதாகவும், கலவரத்தை கட்டுப்படுத்த சென்றிருந்த காவல்துறை சூப்பிரண்டு ஒருவர் மீதும் தாக்குதல் நடத்தப்பட்டதாகவும் குற்றம் சுமத்தப்படுகிறது.

இக்கலரவத்தில் காயமடைந்து புதுச்சேரி அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டிருந்த இருவர் உயிரிழந்துள்ளனர். அதே போன்று விழுப்புரம் ஆஸ்பத்திரிக்கு கொண்டு செல்லப்பட்ட ஒருவரும் உயிரிழந்துள்ளார். மேலும் பலர் படுகாயங்களுடன் தொடர்ந்து சிகிச்சை பெற்று வருகின்றனர்.

குறித்த சமப்வம் தொடர்பில் 1012 பேர் மீது காவல்துறையினர் வழக்கு பதிவு செய்துள்ளதுடன், இது தொடர்பில் விசாரணை நடத்த 7 தனிக்குழுக்களும் அமைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

இச்சம்பவத்துடன் தொடர்புடையதாக சாதி வெறியைத் தூண்டிவரும் பா.ம.க. நிறுவனர் ராமதாஸ் உள்ளிட்ட அனைவரையும் கைது செய்ய வலியுறுத்தி அனைத்து மாவட்டத் தலைநகரங்களிலும் வருகிற 2-ந் தேதி அன்று விடுதலைச் சிறுத்தைகளின் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறும் என அக்கட்சியின் தலைவர் தொல்.திருமாவளவன் தெரிவித்துள்ளார்.

எனினும் இக்கலவரத்தில் இரு வன்னிய இளைஞர்களை படுகொலை செய்தது விடுதலை சிறுத்தைகள் கும்பல் தான் என குற்றம் சுமத்தியுள்ள ராமதாஸ்,  மரக்காணம் கலவரத்தில் அப்பாவிகள் இருவரை படுகொலை செய்ததுடன் நூற்றுக்கணக்கானோரை காயப்படுத்தியும், பொதுச் சொத்துக்களுக்கு சேதம் ஏற்படுத்தியும் வன்முறை வெறியாட்டம் நடத்திய கும்பல் மீதும், அதற்கு சதித் திட்டம் வகுத்துத் தந்த விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவர்கள் மீதும் வழக்கு பதிவு செய்து, அவர்களைக் கைது செய்ய வேண்டும்; இக்கலவரத்தின் பின்னணி மற்றும் இதற்கு ஆதரவாக இருந்தவர்களை அடையாளம் காண்பதற்காக நீதி விசாரணை நடத்த வேண்டும் என்று வலியுறுத்தி வரும் 30-ஆம் தேதி காலை 10 மணிக்கு விழுப்புரத்தில் எனது தலைமையில் மிகப்பெரிய அளவில் தொடர்முழக்கப் போராட்டம் நடைபெறுகிறது என தெரிவித்துள்ளார். 

0 Responses to தமிழகத்தில் மீண்டும் வீரியம் பெறும் சாதிக்கலவரம்? : மரக்காணத்தில் இருவர் பலி

Post a Comment

Followers

தொடர்புக்கு: vannionline@gmail.com