Content feed Comments Feed
    “சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”

கடந்த இரு நாட்களாக மத்திய சிரியாவின் அல்-குஸ்ஸாயிர் நகரில் கிளர்ச்சிப் படைக்கும் சிரிய அரசுக்கும் இடையே நடைபெற்ற கடும் சண்டையில் 23 ஹெஸ்புல்லா உறுப்பினர்கள் உட்பட 95 பேர் கொல்லப் பட்டிருப்பதாகப் பிரிட்டனை மையமாகக் கொண்டு சிரியாவில் இயங்கி வரும் மனித உரிமைகள் அமைப்பு திங்கள் தெரிவித்துள்ளது.

கொல்லப் பட்டவர்களில் 4 பொது மக்கள், 56 கிளர்ச்சிப் படையினர், 12 அரச படையினர் மற்றும் 23 லெபனானைச் சேர்ந்த ஹெஸ்புல்லா போராளிகள் அடங்குவதாகத் தெரிவிக்கப் பட்டுள்ளது. இச்சண்டையில் கிளர்ச்சிப் படையினரிடம் இருந்து நகரை மீட்டெடுக்கும் நோக்கத்தில் அரச படைகள் மும்முரமான தாக்குதலில் ஈடுபட்டதாகக் கூறப்படுகின்றது. இதில் ஹெஸ்புல்லா போராளிகள் அரச படையினருடன் இணைந்து போரிட்டுள்ளனர்.

இதேவேளை சிரிய யுத்தத்தின் இன்னொரு அபாயகரமான கட்டமாக லெபானானில் உள்ள ஹெஸ்புல்லா தளங்கள் மீது சிரிய கிளர்ச்சிப் படையினரின் ராக்கெட் தாக்குதலும் தொடங்கியுள்ளது. அரசியல் ரீதியில் முக்கியமான சிரியாவின் மேற்கே உள்ள குசாயிர் எனும் நகரைக் கைப்பற்ற முன்னேறிய கிளர்ச்சிப் படையினர் இச்சண்டையின் போது லெபனான் எல்லையைத் தாண்டி ஹெஸ்புல்லா தளங்கள் மீது ராக்கெட் தாக்குதலும் நிகழ்த்தியுள்ளனர்.

ஹெஸ்பொல்லா எனப்படுவது ஈரானுக்கு ஆதரவான ஷைட்டி போராளிக் குழு என்பதுடன் அமெரிக்காவாலும் சுன்னி முஸ்லிம்கள் வாழும் நாடுகளாலும் மிக ஆபத்தான தீவிரவாத இயக்கம் என சுட்டிக் காட்டப் படுகின்றது. சிரிய கிளர்ச்சிப் படையின் இத்தாக்குதலைத் தொடர்ந்து லெபனானின் அதிபர் மிக்கெல் ஸ்லெயிமானிடம் அமெரிக்க அதிபர் ஒபாமா தொலைபேசியில் தொடர்பு கொண்டு பேசினார். இதன் போது அவர் ஹெஸ்பொல்லா சர்வதேசத்தின் எதிர்ப்புக்கு மத்தியில் சிரிய அரசுடன் இணைந்து போரிடுவது தவறு எனவும் இது லெபனான் அரசின் கொள்கைகளுக்கு விரோதமானது என்றும் கூறியுள்ளார்.

ஐ.நா இன் தகவல் படி சிரிய யுத்தத்தில் இதுவரை 80 000 பொதுமக்கள் கொல்லப் பட்டும் மில்லியன் கணக்கானோர் இடம்பெயர்ந்தும் உள்ளனர் எனத் தெரிவிக்கப் பட்டுள்ளது.

0 Responses to மத்திய சிரியாவில் கடும் சண்டை:லெபனானின் ஹெஸ்புல்லா தளங்கள் மீதும் கிளர்ச்சிப் படை ராக்கெட் தாக்கு

Post a Comment

Followers

தொடர்புக்கு: vannionline@gmail.com