எகிப்தில் இராணுவத் தலைமயகத்தை கைப்பற்றும் முயற்சியில் ஈடுபட்ட இஸ்லாமிய சகோதரத்துவ கட்சியின் ஆதரவாளர்கள் மீது இராணுவம் நடத்திய தாக்குதலில் 42 பேர் கொல்லப்பட்டுள்ளனர்.
எகிப்தில் ஜனநாயக முறைப்படி தேர்ந்தெடுக்கபப்ட்ட முதலாவது பிரதமர் மோர்ஸி அண்மையில் இராணுவ ஆட்சிக்கவிழ்ப்பு மூலம் பதவி விலக்கப்பட்டதை அடுத்து, இராணுவத்திற்கு எதிராக அவரது ஆதரவாளர்கள் திசை திரும்பியுள்ளனர்.
இந்நிலையில் இன்று கெய்ரோவில் உள்ள இராணுவத் தலைமையகத்தை முற்றுகையிடும் முயற்சியில் மோர்ஸியின் ஆதரவாளர்கள் முயற்சித்துள்ளனர். இத் தாக்குதலை ஒரு தீவிரவாத தாக்குதலாக வர்ணித்துள்ள எகிப்திய இராணுவம், தமது தரப்பில் ஒரு இராணுவ வீரர் கொல்லப்பட்டதாகவும் 40 பேர் காயமடைந்ததாகவும் கூறியுள்ளது.
எனினும் தாம் அமைதியான முறையில் வழிபாட்டுடன் கூடிய ஆர்ப்பாட்ட பேரணியை முன்னெடுத்ததாகவும், அதற்குள் ஆயுத வன்முறையில் இராணுவம் களமிறங்கி விட்டதாகவும் இஸ்லாமிய சகோதரத்துவ கட்சி குற்றம் சுமத்தியுள்ளது.
இதேவேளை இத்தாக்குதலை அடுத்து, இராணுவக் கிளர்சிக்கு ஆதரவு தெரிவித்து வந்த அல்ட்ரா கன்செர்வேடிவ் இஸ்லாமிய நூர் கட்சி தனது ஆதரவை திடீரென வாபஸ் பெற்றுள்ளது. இராணுவ இடைக்கால அரசுடன் இருந்த அனைத்து தொடர்புகளையும் துண்டிப்பதாகவும் கூறியுள்ளது.
இதேவேளை அதிபர் பதவியிலிருந்து மோர்ஸியை விலக்கியது ஒரு இராணுவ முறையிலான ஆட்சிக்கவிழ்ப்பாக கொள்ள முடியாது எனவும், பல்லாயிரக்கணக்கான பொதுமக்கள் ஒன்றிணைந்து குரல் கொடுத்ததன் விளைவே அவரை பதவி விலக்க நேரிட்டது எனவும் தெரிவித்துள்ளது.
இதேவேளை மோர்ஸியின் ஆதரவாளர்களுக்கும், எதிராளிகளுக்கும் இடையில் கடந்த வெள்ளிக்கிழமை மற்றும் சனிக்கிழமை, எகிப்தின் கெய்ரோ, அலெக்ஸாண்டிரியா உள்ளிட்ட பல்வேறு நகரங்களில் இடம்பெற்ற மோதல்களில் 35 பேர் கொல்லப்பட்டனர்.
ஏற்கனவே மக்கள் புரட்சி, தொடர்ந்து நீடித்த யுத்த நிலைமைகளினால் எகிப்தின் பொருளாதாரம் கடும் வீழ்ச்சி அடைந்து வந்தது. இந்நிலையில் தற்போது புதிய சண்டைகள் கட்சி பேதங்களால் தொடர்வது அந்நாட்டின் எதிர்காலத்தை மேலும் கேள்விக்குறியாக்கியுள்ளது.
உலகின் அதிக சனத்தொகை கோண்ட (84 மில்லியன்) அரேபிய நாடாக திகழ்கிறது எகிப்து என்பது குறிப்பிடத்தக்கது.
0 Responses to மோர்ஸி ஆதரவாளர்கள் - எகிப்து இராணுவம் இடையே கடும் சண்டை : 42 பேர் பலி