இலங்கையில் மோதல்களுக்குப் பின்னரும் கூட பாதுகாப்பு அச்சுறுத்தல் இருப்பதால் சுற்றுலாப்பயணங்களை
மேற்கொள்ளும் தன்னுடைய நாட்டுப் பிரஜைகள் எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும் என்று அவுஸ்திரேலியா வலியுறுத்தியுள்ளது.
அமெரிக்காவும், பிரித்தானியாவும் தன்னுடைய நாட்டு பிரஜைகளை இலங்கைக்கு செல்வதிலிருந்து தவிர்த்துக் கொள்ளுமாறு கோரியுள்ள நிலையில், அவுஸ்திரேலியாவும் பயண எச்சரிக்கை விடுத்துள்ளது.
மோதல்கள் முடிவுக்கு வந்துள்ள போதிலும் சீரான பாதுகாப்பு ஏற்பாடுகள் இன்னும் இலங்கையில் இல்லை என்பதைச் சுட்டிக்காட்டியுள்ள அவுஸ்திரேலியா வெளிவிவகார பிரிவு, ஏற்கனவே இலங்கைக்கான பயணங்களை மேற்கொண்டுள்ள அவுஸ்திரேலியர்கள் மக்கள் கலகங்கள், ஆர்ப்பாட்டங்கள் இடம்பெறும் பகுதிகளில் இருப்பதை தவிர்த்துக் கொள்ளுமாறும் கேட்டுக்கொண்டுள்ளது.
இலங்கையின் இறுதி மோதல்கள் இடம்பெற்ற வடக்கு பகுதிகளுக்கு செல்வதை கண்ணிவெடிகள் உள்ளிட்ட வெடிபொருட்களின் அச்சுறுத்தலைக் காட்டி முற்றாக தவிர்க்குமாறு எச்சரித்துள்ள அவுஸ்திரேலியா, இலங்கைக்கு பயணங்களை மேற்கொள்ளும்போது அவுஸ்திரேலிய தூதுவராலயத்தின் அறிவுத்தல்களை பின்பற்றுமாறு கோரியுள்ளது.
கொழும்பில் வரும் நவம்பர் மாதம் பொதுநலவாய நாடுகளின் தலைவர்கள் மாநாடு நடைபெறவுள்ள நிலையில் இலங்கைக்கான பயண எச்சரிக்கைகளை மேற்கு நாடுகள் விடுத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
0 Responses to அமெரிக்கா, பிரித்தானியாவைத் தொடர்ந்து இலங்கைக்கான பயண எச்சரிக்கையை அவுஸ்திரேலியாவும் விடுத்தது