இஸ்லாமிய மார்க்கத்தைப் பின்பற்றும் பெண்கள் அணியும் முகத்தை மூடிய அபாயா ஆடையை இலங்கையில் சட்டரீதியாக தடைசெய்ய வேண்டும் என்று அரசாங்கத்திடம் கோரிக்கை விடுத்துள்ள பொதுபல சேனாவின் நடவடிக்கைகளை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு கண்டித்துள்ளது.
மத சுதந்திரத்தின் மீது பொதுபல சேனா அத்துமீறல்களை தொடர்ந்தும் மேற்கொண்டு வருவதனை இது காட்டுவதாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதன் இன்று செவ்வாய்க்கிழமை விடுத்துள்ள கண்டன அறிக்கையில் தெரிவித்துள்ளார்.
முஸ்லிம் பள்ளிவாசல்கள் மற்றும் வர்த்தக நிறுவனங்கள் மீது தொடர்ச்சியான தாக்குதல்களை பொதுபல சேனா அமைப்பு நடத்தியுள்ளது. அதன் தொடர்ச்சியாகவே இப்போது முஸ்லிம் பெண்களின் ஆடை விசயத்தில் தேவையற்ற முறையில் அத்துமீறல் கருத்துக்களை முன்வைக்கிறது. இது, மத சுதந்திரத்தின் மீது விடுக்கப்படும் சவால் என்று அந்த அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
முஸ்லிம் பெண்கள் அணியும் முகத்தை மறைக்கும் அபாயா, நிஜாப் ஆடைகளை இலங்கையில் சட்டரீதியாக தடைசெய்ய வேண்டும். அதற்கான நடவடிக்கைகளை பாதுகாப்பு அமைச்சு முன்னெடுக்க வேண்டும். அதன் மூலம் பயங்கரவாத நடவடிக்கைகளிலிருந்து நாட்டை பாதுகாத்துக் கொள்ள முடியும் என்று பொதுபல சேனாவின் பொதுச்செயலாளர் கலகொட அத்தே ஞானசார தேரர் நேற்றைய ஊடகவியலாளர் சந்திப்பொன்றில் தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.
0 Responses to மத உரிமைகள் மீதான பொதுபல சேனாவின் அத்துமீறலுக்கு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு கண்டனம்