Content feed Comments Feed
    “சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”

”மரண தண்டனையை ஒழித்துகட்டும் திசையில் பெரும் அடியெடுப்பு வைத்ததுபோல் உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி திரு சதாசிவம் அவர்கள் தலைமையில் உள்ள மூன்று நீதிபதிகள் கொண்ட அமர்வு பேரறிவாளன் சாந்தன் முருகன் ஆகியோர் தலைக்கு மேல் தொங்கிக் கொண்டிருந்த தூக்குக் கயிற்றை அறுத்து வீசி வரலாற்றுச் சிறப்புமிக்க தீர்ப்பை வழங்கியுள்ளது.

மூன்று தமிழர் உயிர்காப்பு என்ற மகிழ்ச்சியுடன் இனி மரணதண்டனை என்பது ஒழிந்துபோகும் காலம் நெருங்கிக் கொண்டிருக்கிறது என்ற நம்பிக்கையை ஊட்டிய வகையிலும் இந்தத் தீர்ப்பு தமிழின உணர்வாளர்களுக்கும் மனித உரிமைப் போராளிகளுக்கும் மன மகிழ்வை உண்டாக்கியிருக்கிறது. உள்ளக்கிளர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது.

இந்தத் தீர்ப்பின் சிறப்புகளில் இன்னொரு முக்கியமான கூறு உள்ளது. ஏற்கெனவே வாழ்நாள் தண்டனைப் பற்றி உச்ச நீதிமன்றம் கூறிய தீர்ப்பில் வாழ் நாள் தண்டனையென்றால் வாழ் நாள் முழுவதும் சிறையில் கழிப்பதுதான் என்று கூறியிருந்தார்கள். இன்று வழங்கப்பட்ட தீர்ப்பில் அந்தக் கருத்து நீக்கப்பட்டுவிட்டது. மாநில அரசு இராசீவ் காந்தி கொலைவழக்கில் வழங்கப்பட்ட தண்டனையை ஆய்வு செய்து இவர்களை விடுதலை செய்ய முடிவு செய்தால் அவ்வாறு விடுதலை செய்துகொள்ளலாம் என்று இத்தீர்ப்பு கூறுகிறது. இதன்படி தமிழக முதலைமைச்சர் அவர்கள் ஆய்வுசெய்து மரணதண்டனை வாழ்நாள் தண்டனையாக மாற்றப்பட்டுள்ள பேரறிவாளன், சாந்தன், முருகன் ஆகிய மூவரையும் ஏற்கனவே வாழ் நாள் தண்டனை சிறையிலுள்ள நளினி, இராபட் பயாஸ், செயக்குமார் , அருப்புக் கோட்டை இரவிச்சந்திரன் ஆகிய நாள்வரையும் ஆக மொத்தம் ஏழுபேரையும் உடனடியாக விடுதலைசெய்ய வேண்டுமென்று தமிழ்த் தேசப் பொதுவுடைமைக் கட்சி சார்பில் கேட்டுக்கொள்கிறேன்.

இதற்கான அதிகாரத்தை தமிழக அரசுக்கு அரசமைப்புச் சட்டக் கூறு 161 மற்றும் குற்றவியல் நடைமுறைச் சட்டம் விதி 432 ஆகியவை வழங்குகின்றன. இந்த சட்ட விதிகளைப் பயன்படுத்தி ஏழுபேரையும் விடுதலை செய்ய வேண்டும்.

இந்திய அரசின் கீழ் இயங்கும் நடுவண் புலனாய்வுத்துறை (சி.பி.ஐ) இராசீவ் காந்திக் கொலைவழக்கை ஒருபக்கச் சார்போடு விசாரித்து சாட்சியங்களை திரித்து வழக்கு புனைந்தது என்பது அண்மையில் அம்பலமானது.
ஒப்புதல் வாக்குமூலம் வாங்கிய சி.பி.ஐ.அதிகாரி தியாகராசன், பேரறிவாளன் கூறிய ஒப்புதல் வாக்குமூலத்தை அப்படியே பதிவு செய்யாமல் என் விருப்பப்படி பதிவு செய்தேன் என்று ஒப்புதல் வாக்குமூலம் கொடுத்துள்ளார்.

அடுத்து இந்த வழக்கில் நான்கு பேருக்கான மரண தண்டனையை உறுதி செய்த உச்ச நீதிமன்ற அமர்வுக்கு தலைமைத் தாங்கிய நீதிபதி கே.ட்டி.தாமஸ் அவர்கள் இராசிவ் கொலை வழக்கின் குற்றப்புலனாய்வு அறிக்கையில் உள்ள சில முரண்பாடுகளையும், இட்டு நிரப்ப முடியாத இடைவெளிகளையும் தாங்கள் கவனிக்கத் தவறியதாக இப்போது கூறியுள்ளார். எனவே இப்படிபட்ட அநீதி இழைக்கபட்டு 23 ஆண்டுகள் அப்பாவித் தமிழர்கள் 7 பேர் சிறைக்கொட்டடியில் துண்புற்றுகொண்டிருக்கிறார்கள்.

இவர்கள் ஒவ்வொருவருக்கும் தலா 10 கோடிரூபாய் இந்திய அரசு இழப்பீடு வழங்க வேண்டும். இதே வழக்கில் தடா நீதிமன்றத்தால் மரணதண்டனை விதிக்கப்பட்டு உச்ச நீதிமன்றத்தால் ஏற்கனெவே விடுதலைசெய்யபட்ட 19 பேருக்கும் தலா 5 கோடி ரூபாய் இழப்பீடு வழங்கவேண்டும் ” என்று குறிப்பிட்டுள்ளார்.

0 Responses to பேரறிவாளன் முருகன் சாந்தன் உள்ளிட்ட 7 பேரையும் தமிழக விடுதலை செய்ய வேண்டும் பெ.மணியரசன்

Post a Comment

Followers

தொடர்புக்கு: vannionline@gmail.com