டெல்லியில் இருந்து சென்னை வந்த தமிழ்நாடு எக்ஸ்பிரஸ் ரயிலில் தீப்பிடித்ததில் 47 பயணிகள் உயிரிழந்தனர்.
டெல்லியில் இருந்து சனிக்கிழமை இரவு 10 மணிக்கு தமிழ்நாடு எக்ஸ்பிரஸ் ரயில் சென்னைக்கு புறப்பட்டது. ஆந்திர மாநிலம் நெல்லூரில் இருந்து இன்று (30.07.2012) காலை 4.30 மணிக்கு கிளம்பியதும் எஸ்-11 பெட்டியில் தீவிபத்து ஏற்பட்டது. நெல்லூர் ரயில் நிலையத்தில் இருந்து ஒரு கிலோ மீட்டர் தூரத்தில் ரயில் வந்தபோது ரயிலில் தீபிடித்தது. ரயிலில் எஸ்-11 பெட்டியில் மின்கசிவு காரணமாக தீ பற்றியதாக தகவல் வெளியாகி உள்ளது. தீப்பிடித்த படுக்கை வசதி கொண்ட 2ம் வகுப்பு பெட்டியில் 72 பயணிகள் இருந்தனர்.
இந்த விபத்தில் 47 பேர் உயிரிழந்துள்ளனர். உயிரிழந்தவர்கள் இதுவரை அடையாளம் காணப்படவில்லை என தகவல்கள் வெளியாகி உள்ளது. விபத்தில் காயம் அடைந்த அனைவரும் நெல்லூரில் உள்ள அரசு மற்றும் தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
இந்த விபத்து குறித்து அறிந்ததும், நெல்லூர் மாவட்ட ஆட்சியர் ஸ்ரீதர் சம்பவ இடத்திற்கு விரைந்து மீட்பு பணிகளை முடுக்கிவிட்டார்.
இந்த விபத்து குறித்து விவரம் அறிய சென்னை சென்ட்ரலில் சிறப்பு வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளது. 044-25357398 மற்றும் 044-25330825 ஆகிய எண்களில் தகவல் அறிய ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. நெல்லூரில் உதவிக்கு 0861-2575038 மற்றும் 0861-2576924 ஆகிய எண்களில் தொடர்பு கொண்டு கேட்கலாம்.
விபத்தில் பாதிக்கப்பட்டவர்களை பார்க்க சென்னை சென்ட்ரலில் இருந்து சிறப்பு ரயில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. அந்த ரயில் நெல்லூருக்கு இன்று காலை 10.00 மணிக்கு புறப்படும் என்றும், பாதிக்கப்பட்டோரின் உறவினர்கள் இந்த ரயிலில் இலவசமாக அழைத்துச்செல்லப்படுவார்கள் என்றும், தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.
இந்த விபத்தால் இன்று (30.07.2012) காலை 7.15 மணிக்கு சென்னை சென்ட்ரல் வரவேண்டிய தமிழ்நாடு எக்ஸ்பிரஸ் ரயில் தாமதமாகும். மேலும் ஐதராபாத்திலிருந்து சென்னை வரும் சார்மினார் எக்ஸ்பிரஸ் ரயிலும் தாமதமாகும்.
டெல்லியில் இருந்து சென்னை வந்த தமிழ்நாடு எக்ஸ்பிரஸ் ரயிலில் தீவிபத்து! 47 பேர் பலி!
பதிந்தவர்:
தம்பியன்
30 July 2012



0 Responses to டெல்லியில் இருந்து சென்னை வந்த தமிழ்நாடு எக்ஸ்பிரஸ் ரயிலில் தீவிபத்து! 47 பேர் பலி!