Content feed Comments Feed
    “சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”

இராணுவத்தினரால் பிடித்துச் செல்லப்பட்ட விபூசிகா என்ற சிறுமியும் அவருடைய தாயாரும் வவுனியா பொலிஸ் நிலையத்தில் தடுத்துவைக்கப்பட்டிருப்பதாக தகவல் ஒன்று வெளியாகியுள்ளது.

கிளிநொச்சி, தர்மபுரம் பகுதியில் வைத்து பயங்கரவாதத் தடுப்புப் பிரிவினரால் நேற்றிரவு கடத்தப்பட்டு பின்னர் கைது செய்யப்பட்டதாக அறிவிக்கப்பட்ட பாலேந்திரன் ஜெயகுமாரி (வயது 50) மற்றும் அவரது மகள் விபூசிகா (வயது 13) ஆகியோர் வவுனியா காவல் நிலையத்தில் தடுத்து வைக்கப்பட்டுள்ளதாகத் தெரியவருகிறது.

இவர்கள் இருவரும் சட்ட வைத்திய அதிகாரியின் முன் மருத்துவ பரிசோதனைக்கு நிறுத்தப்படுவதற்காக வவுனியாவுக்குச் கொண்டு செல்லப்பட்டிருக்கின்றனர் எனப் புதிய கதை ஒன்று புனையப்பட்டுள்ளது. இத்தகவலை கிளிநொச்சி சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர்  இன்று மதியம் வெளியிட்டிருக்கின்றார்.

தர்மபுரம் பகுதியில் நேற்றுப் பகல் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டுச் சம்பவத்தை அடுத்து இந்த இருவரும் தர்மபுரத்தில் உள்ள அவர்களது வீட்டில் வைத்துப் படையினரால் நீண்ட நேரம் விசாரணை செய்யப்பட்ட பின்னர் நேற்றிரவு 10 மணியளவில் அவர்கள் கடத்தப்பட்டிருந்தனர். ஊடகங்களில் இச்செய்தி பரப்பரப்பாக பேசப்பட்ட இவர்கள் குறித்த செய்தியை காவல்துறையினர் இன்று வெளியிட்டுள்ளனர்.

காணாமல் போனோர் தொடர்பிலான போராட்டங்களில் பங்குகொண்ட விபூசிகாஎன்ற சிறுமி கதறி அழுத்து தனது சகோதரனைத் தேடுவது காண்போர் மனதை உருகவைத்துவந்திருக்கின்றது.

இந்த நிலையில் அந்தக் காட்சிகள் சர்வதேச ரீதியாகவும் கடும் தாக்கத்தினை ஏற்படுத்திவந்த நிலையில் திட்டமிட்ட சம்பவம் ஒன்றை உருவாக்கிய படைத்தரப்பு தருமபுரத்தில் உள்ள அந்தச் சிறுமியின் வீட்டினை நேற்றைய தினம் சுற்றிவளைத்து அந்தச் சிறுமியையும் தாயையும் பிடித்துச் சென்றிருப்பதாக தகவல்கள் ஏற்கனவே வெளியாகியிருந்தன. இந்த நிலையில் அவர்கள் இருவரும் வவுனியா பொலிஸ் நிலையத்தில் தடுத்துவைக்கப்பட்டிருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

அந்த இருவரின் நலன்களையும் கவனிப்பதற்காக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் யாழ். மாவட்ட எம்.பிக்களான மாவை சேனாதிராஜா, ஈ.சரணவனபவன் ஆகியோர் தாயும், மகளும் கைது செய்யப்பட்னர் என்று தெரிவிக்கப்பட்டமையை அடுத்து அவர்கள் கிளிநொச்சி சிரேஷ்ட காவல்துறை அத்தியட்சகர் அலுவலகத்துக்குச் சென்று அது குறித்து அத்தியட்சகருடன் பேச்சு நடத்தினர்.

தாயும் மகளையும் தாங்கள் நீதிமன்றத்தில் ஆஜர் செய்யவிருக்கின்றனர் என்றும் அதற்கு முன்னேற்பாடாக சட்ட மருத்துவ அதிகாரியின் அறிக்கையைப் பெற வேண்டியிருப்பதாகவும் காவல்துறைத் தரப்பிலிருந்து தெரிவிக்கப்பட்டுள்ளது.

கிளிநொச்சியில், சட்ட வைத்திய அதிகாரி இல்லாமையால், வவுனியா சட்ட வைத்திய அதிகாரியின் முன்னால் இருவரையும் ஆஜர் செய்து மருத்துவ அறிக்கையைப் பெற ஏற்பாடுகள் செய்யப்படுவதாகவும், மருத்துவ அறிக்கை கிடைத்ததும் பெரும்பாலும் இன்றே அவர்கள் கிளிநொச்சி நீதிமன்றத்தில் முன்நிறுத்தப்படலாம் எனவும் காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

தாயும் மகளும் நீதிமன்றத்தில் ஆஜர் செய்யப்பட்டால் அவர்களின் நலனைக் கவனிப்பதற்கான சட்டத்தரணிகளை ஏற்பாடு செய்வதில் எம்.பிக்கள் இருவரும், வடக்கு மாகாண சபையின் கிளிநொச்சி மாவட்டத்தைப் பிரதிநிதித்துவப்படுத்தும் தமிழ்த்தேசியக் கூட்டமைப்பு உறுப்பினர்களான பசுபதிப்பிள்ளை, அரியரத்தினம் ஆகியோரும் இன்று பிற்பகல் ஈடுபட்டிருந்தாகச் செய்திகள் வெளியாகியுள்ளன.

0 Responses to சிறுமியும் தாயும் வவுனியாவில் தடுத்துவைப்பு!

Post a Comment

Followers

தொடர்புக்கு: vannionline@gmail.com