Content feed Comments Feed
    “சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”

கடந்த மார்ச் 9ம் திகதி ஞாயிற்றுக்கிழமை கனடிய தமிழ்ச் சமூகமும் கனடிய மாணவர் சமூகமும் இணைந்து கனடிய தமிழர் தேசிய அவையின் ஏற்பாட்டில் கனடாவாழ் தமிழ் மக்களின் ஒருங்கிணைவோடு நடாத்திய மாபெரும் கவனயீர்ப்பு பேரணியில் பல நூற்றுக்க்ணக்கான மக்கள் பெரும் எழுச்சியுடனும் உணர்வுபூர்வமாகவும் கலந்துகொண்டனர். ரொறொன்ரோ நகரின் மையப்பகுதியில் அமைந்துள்ள யங்-டண்டாஸ் சந்திப்புக்கருகில் அமைந்துள்ள டண்டாஸ் சதுர்க்கத்தில் பல்லின மக்களின் கவனத்தை பெரிதும் ஈர்க்கின்ற வகையில் இந்த கவனயீர்ப்புப் பேரணி மிகுந்த எழுச்சியோடு நடைபெற்றது.

தற்பொழுது ஜெனீவாவில் நடைபெறுகின்ற ஐ.நாவின் 25 வது மனித உரிமை அமர்வில் இலங்கையில் ஈழத்தமிழினத்தின் மீது நடாத்தப்படும் இனப்படுகொலைகளை எடுத்துக் கூறி இலங்கையை  அனைத்துலக சர்வதேச சுயாதீன விசாரணைக்கு அழைக்கவேண்டியும் ஐ.நா வினால் பொதுசன வாக்கெடுப்பை நடாத்தக் கோரியும் ஈழத்தமிழர்களுக்கான நீதியை வேண்டியும் இந்த கவனயீர்ப்பு பேரணி நடைபெறறது.

கடந்த சில மாதங்களாக ஐ.நா மனித உரிமை அமர்வுகளை மையப்படுத்தி தமிழீழ மக்களுக்கு நீதி வேண்டி தொடர் கவனஈர்ப்புப் போராட்டங்களை நடாத்தி வந்த கனடாத் தமிழர்களும் அனைத்துலக தமிழர்களும் ஒரே நேரத்தில் இணைந்த களமாக இந்த பேரணி நடைபெற்றமை இங்கு குறிப்பிடத்த்தக்கது.

பி. ப. 2:00 மணியில் இருந்து டன்டாஸ் சதுர்க்கதிற்கு  திரளாக மக்கள் வருகை தர ஆரம்பித்தனர். டொரோண்டோ தொடரூந்து போக்குவரத்து பாதைகள் சில மூடி இருந்த நிலையிலும்  கடும் குளிரான கால நிலை நிலவியபோதும் மக்கள் பெருமளவில் வருகை தந்திருந்தனர். சிறியோர் முதல் முதியோர் வரை கோசங்களை எழுப்பியவாறு மிகவும் எழுச்சியோடு காணப்பட்டனர். 2:30 மணியளவில் பிரதான வீதியில் ஆரம்பமான இளையோரின் எழுச்சி ஒலி 3:00 மணியளவில் பிரதான மேடையில் நிறைவடைந்தது. இந்த நிகழ்வு பல்லின மக்களையும் எங்களிடம் அழைத்து வந்ததை அவதானிக்க முடிந்தது.

மாலை 3:00 மணிக்கு அகவணக்கத்தோடு அரங்க நிகழ்வுகள் ஆரம்பமாகியது. நிகழ்வுகள் அனைத்தும் தமிழிலும் ஆங்கிலத்திலும்  தொகுத்து வழங்கப்பட்டிருந்தது. கனடாவின் பிரதான கட்சிகளின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் மாநகரசபை உறுப்பினர்கள்,  நகரசபை உறுப்பினார்கள் என பலர் சிறப்புரை ஆற்றினர். அனைவரும் தமிழீழ தேசத்தில் இடம்பெறும் தமிழினப் படுகொலையைச் சுட்டிக் காட்டி அதை கண்டித்ததோடு  எம்மோடு கை கோர்த்து எம் போராட்டத்திற்கு ஆதரவு தெரிவிப்போம் என உறுதி வழங்கினர். எழுச்சி உரைகளுக்கு இடையில் எழுச்சி முழக்கங்களும் தாயாக உணர்வுப்பாடல்களும் பேரணியை எழுச்சியூட்டின.

இன் நிகழ்வின் இறுதியில் பிரதான பேச்சாளர் கலாநிதி ஹெலன் ஜார்விஸ் அவர்கள் சிறப்புரை ஆற்றினார். கலாநிதி ஹெலன் ஜார்விஸ் அவர்கள் கம்போடியா இனப்படு கொலை பற்றிய வேலைத்திட்டதில் தம்மை 1994 -2001 காலப்பகுதியில் இணைத்துக் கொண்டு அது சம்பந்தமான வரலாற்றுப் பதிவில் யெல் யுனிவசிற்றியின் ஆலோசகராக பணி புரிந்தவர். இவர் தொடர்ந்தும் இனப்படுகொலையில் பாதிக்கப்பட்டவர்களுக்கு ஆதரவாக கம்போடிய அரசின் கட்டமைப்பின் தலைவராக பணிபுரிந்தவர். அத்தோடு இவர் தமிழர்களுக்கு நடைபெற்றது ஒரு இனப்படுகொலை என்ற மக்கள் தீர்ப்பாயத்தின் நீதிபதிகளில் ஒருவராக இருந்தவர் என்பதும் குறிப்பிடத்தக்கது. கலாநிதி ஹெலன் ஜார்விஸ் அவர்கள் இந்த போராட்டத்தில் பங்குபற்றியதோடு சிறப்புரை ஆற்றி மக்களுக்கு நமது போராட்டத்தின் அவசியத்தையும் அதற்கான தேவையையும் எடுத்துக் கூறினார். இவர் தன் உரையில் ஈழத்து இனப்படுகொலை இன்னமும் தொடர்வதற்கான சான்றுகளை எடுத்துக் கூறி ஜெர்மன் தீர்பாயத்தின் அறிக்கையின் முக்கியத்துவம் அதனடிப்படையில் அனைத்துலக தேசங்களுக்கு நாம் செய்ய வேண்டிய பரப்புரைகள் எவை என்பன பற்றியும் எடுத்துரைத்தார்.

பிரதான கனடிய மைய ஊடகங்களான 680 News, City TV, CP24, CTV, OMNI, மற்றும் பல சுதந்திர ஊடகவியலாளர்களும் (Freelance Journalists), பத்திரிகை நிருபர்களும் அங்கு வந்து நிகழ்வை பதிவு செய்திருந்தமை குறிப்பிடத்தக்கது. பிரதான மைய ஊடகமான 680 News தமது ஒலிபரப்பில் தமிழ் இனப்படுகொலை பேரணி நடைபெறுகின்றதென்ற விபரத்தை தொடர்ச்சியாக ஒலிபரப்பினர்.

மாலை 6 மணிவரை நடைபெற்ற போராட்டமானது நிறைவில் பிரகடனம்  வாசிக்கப்பட்டு உறுதி மொழி எடுத்து நிறைவு செய்யப்பட்டது.

0 Responses to கனடா நடைபெற்ற எழுச்சிப் பேரணியில் தமிழினப் படுகொலையை எடுத்துரைப்பு!

Post a Comment

Followers

தொடர்புக்கு: vannionline@gmail.com