Content feed Comments Feed
    “சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”

இளம் தலைமுறையினர் நாட்டை விட்டு வெளியேறுவதைத் தவிர்த்து சொந்த மண்ணில் வாழ்வதற்கான மனோநிலையை உருவாக்கிக் கொள்ள வேண்டும் என்று ஈழமக்கள் ஜனநாயகக் கட்சியின் (ஈபிடிபி) பாராளுமன்ற உறுப்பினரும், பாராளுமன்றக் குழுக்களின் பிரதித்தலைவருமான முருகேசு சந்திரகுமார் தெரிவித்துள்ளார்.

யாழ்ப்பாணம் சாவற்கட்டு பகுதியில் சட்டத்திற்கு புறம்பான வழியில் அவுஸ்திரேலியா செல்ல முற்பட்டு பாதிப்புற்றவர்களுக்கு வாழ்வாதார உதவிகளை வழங்கி உரையாற்றும்போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.

அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது, “கடந்த யுத்த காலத்தில் எமது பிரதேசங்களில் இளம் தலைமுறையினருக்கு பாதுகாப்பு அச்சுறுத்தல்கள் பல வழிகளில் இருந்தன என்பது மறுப்பதற்கில்லை. அதனால் அன்று இளம் தலைமுறையினர் பாதுகாப்பைத் தேடி நாட்டைவிட்டு வெளியேறினார்கள். ஆனால், இன்று அந்த நிலைமை மாற்றம் பெற்றுள்ளது.

யுத்தம் முடிவுக்கு கொண்டு வரப்பட்டதைத் தொடர்ந்து ஏற்பட்டுள்ள இயல்பு சூழல் மக்களின் வாழ்வியலுக்கு ஏற்ற அனைத்து சாதகத்தன்மைகளையும் கொண்டுள்ளது. இந்நிலையில் இன்றும் எமது இளைஞர்களும் யுவதிகளும் நாட்டைவிட்டு வெளியேறுவதும் உயிராபத்துக்கள் நிறைந்த கடற்பயணங்களை மேற்கொண்டு பாதிப்புக்களை எதிர்கொள்வதும் ஏற்புடையதல்ல.

அதுமட்டுமன்றி வறிய குடும்பங்களைச் சேர்ந்தவர்களும் தமது சொத்துக்களை விற்று பயணிக்க தலைப்பட்டு அது தோல்வியில் முடிந்ததும், அவர்களும் அவர்களின் குடும்பங்களும் நிர்க்கதியான நிலைக்கு செல்வதும் வேதனைக்குரியது. எனவே பாதுகாப்பு என்ற நோக்கங்களுக்கு மாறாக வெளிநாடு வாழ்க்ககை என்ற கனவே இன்று இளைஞர்கள் மத்தியில் மேலோங்கி காணப்படுகின்றன. அந்த கனவு அவர்களை மட்டுமன்றி அவர்களைச் சார்ந்தவர்களின் எதிர்காலத்தையும் அழித்துவிடுகின்றது.

இவை அனைத்திற்கும் அப்பால் அவுஸ்திரேலியா போன்ற நாடுகள் இன்று வெளிநாட்டவருக்கு புகலிடம் வழங்குவதை முற்றாக தடை செய்துள்ளது. அதற்கான சட்ட மூலமும் நிறைவேற்றப்பட்டுள்ள நிலையில் அச்சட்டத்தை அந்நாடு மிக இறுக்கமாக கடைப்பிடித்தும் வருகின்றது. அதையும் மீறி அந்நாட்டுக்குள் சட்டத்திற்கு புறம்பான வழிகளில் நுழைபவர்களை பப்புவா நியூக்கினி என்ற தீவில் சிறைவைக்கப்படுகின்றனர். எனவே இங்கிருந்து தமது குடும்பங்களை விட்டு பிரிந்து சட்டத்திற்கு புறம்பான வழிகளில் வெளிநாடு செல்ல முனைபவர்கள் மீண்டும் தமது குடும்பங்களுடன் இணைவதற்கு பாரிய சாவல்களை எதிர்கொள்ள நேரிடும்.

இதேவேளை, இளைய தலைமுறையினர் நாட்டைவிட்டு வெளியேறுவதால் எமது இனத்தின் விகிதாசாரமும் வீழ்ச்சிகண்டு வருகின்றது. இந்த நிலை தொடருமானால் மிகப்பரந்த நிலப்பரப்பில் வாழ்ந்து வரும் எமது மக்களின் தொகை குறைவடைந்து நிலப்பரப்புக்கள் மட்டுமே எஞ்சுகின்ற அபாயம் ஏற்படும் அந்த நிலைமை எமது இனத்தின் தனித்துவதிற்கு பாதிப்பை ஏற்படுத்தும். இந்த யதார்த்தத்தை அனைவரும் புரிந்துகொண்டு எமது தேசத்தையும் தமது வாழ்வியலையும் பாதுகாத்துக் கொள்ளத் தலைப்பட வேண்டும்” என்றார்.

0 Responses to இளைஞர்கள் சொந்த மண்ணில் வாழத் தலைப்பட வேண்டும்: முருகேசு சந்திரகுமார்

Post a Comment

Followers

தொடர்புக்கு: vannionline@gmail.com