Content feed Comments Feed
    “சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”

புள்ளி விபரங்களைக் காட்டி பிரசாரங்கள் முன்னெடுக்கப்பட்டாலும் ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பு அரசாங்கமே ஊவாவில் அமோக வெற்றிபெற்றுள்ளது என்பது உறுதி என்று ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.

இலங்கையின் வரலாற்றில் பாராளுமன்றத்திலிருந்து மாகாண சபைக்கு வந்து தோல்வியைத் தழுவிய முதல் சந்தர்ப்பம் இது என தெரிவித்த ஜனாதிபதி; தோல்வியடைந்தவர்கள் தாம் வெற்றியடைந்ததாக மக்களை ஏமாற்ற நினைப்பதும் விந்தையாக உள்ளது என்றும் குறிப்பிட்டுள்ளார்.

ஊவா மாகாண தேர்தலில் வெற்றிபெற்ற முதலமைச்சர் சஷீந்திர ராஜபக்ஷ உட்பட மாகாண சபை உறுப்பினர்களுக்கான சத்தியப் பிரமாண நிகழ்வு நேற்று செவ்வாய்க்கிழமை ஜனாதிபதியின் மஹிந்த ராஜபக்ஷ தலைமையில் ஜனாதிபதி செயலகத்தில் நடைபெற்றது. இந்த நிகழ்வில் பேசும் போதே ஜனாதிபதி மேற்கண்டவாறு கூறியுள்ளார்.

ஜனாதிபதி மேலும் தெரிவித்துள்ளதாவது, “ஊவா மாகாண சபைத் தேர்தலோடு நாம் நாட்டில் அனைத்து மாகாண சபைகளினதும் தேர்தலை நடத்தி முடித்துள்ளோம் என்பதைக் குறிப்பிட வேண்டும். இதில் வடக்கு மாகாண சபையைத் தவிர ஏனைய அனைத்து மாகாண சபைகளிலும் ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பு வெற்றியீட்டியுள்ளது.

இக்காலங்களில் இணையத்தளங்களை நோக்குகின்றபோது எனக்கே சந்தேகம் வருகிறது. நாம் வெற்றிபெற்றுள்ளோமா இல்லையா என்று. ஏனென்றால் பிரசாரங்களும் ஊடகங்களில் கட்டுரைகளும் ஏதோ எதிர்க்கட்சி வெற்றிபெற்று விட்டதாகவே வெளிவருகின்றன.

மக்கள் மத்தியில் இவ்வாறான கருத்துக்களே முன்வைக்கப்படுகின்றன. ஏதேதோ புள்ளி விபரங்களைக் காட்டி “நாமே வென்றோம்” என்றே எதிர்க் கட்சியான ஐக்கிய தேசியக் கட்சி பிரசாரங்களை முன்வைக்கின்றது.

சில ஊடகங்களில் வெளிவரும் கட்டுரைகளும் ஐக்கிய தேசியக் கட்சி அமோக வெற்றியைப் பெற்றுவிட்டதாகவே உள்ளன. அவர்களது இத்தகைய திறமைக்கு நாம் மதிப்பளிக்க வேண்டும். தோல்வியடைந்தாலும் நாம் வெற்றி பெற்றவர்களே’ என சொல்வதற்கு நாமும் இதைப்பழக வேண்டியுள்ளது. அதேபோன்று வெற்றிபெற்றாலும் தோல்வியடைந்தவர் போன்று இருக்கவும் பழக வேண்டியுள்ளது.

நாம் நேர்மையானவர்களாக மக்களுடன் வாழவேண்டும் என்பதையே நான் கூறவிரும்புகிறேன். எதையாவது கூறி ஏமாறுபவர்களல்ல எமது மக்கள் என்பதை அவர்கள் உணரவேண்டும். யார் எதைச் சொன்னாலும் இது எமக்கு கிடைத்த அமோக வெற்றியாகும். வரலாற்றை பார்க்கும்போது விருப்புவாக்கு தொடர்பாகப் பேசப்படுகிறது. ஒரு இலட்சத்துக்கு மேல் விருப்பு வாக்குகளைப் பெற்ற நடிகர் ஒருவரை நான் பார்த்திருக்கிறேன். சப்ரகமுவவில் இன்னும் இலட்சக்கணக்கில் விருப்பு வாக்குகள் பெற்ற பலரைப் பார்த்திருக்கிறோம். இதுபோன்றவற்றைப் பட்டியலிட்டுக் கூறமுடியும்.

சாதாரணமாக பாராளுமன்றத்திலிருந்து விலகி மாகாண சபைக்குப் போட்டியிட்ட பலரையும் பல சந்தர்ப்பங்களையும் கூற முடியும். அமைச்சர்கள் அமரசிறி தொடங்கொட, நாவின்ன போன்றோர் அண்மையில் எம்முடன் இணைந்த தயாசிறி ஜயசேகர போன்றோரைக் குறிப்பிட முடியும். எனினும், இவ்வாறு எதிர்க்கட்சியிலிருந்து அரசாங்கத்துக்கு வந்தோ அல்லது எதிர்க்கட்சியிலோ அவ்வாறு வந்தவர்கள் வெற்றிபெற்றுள்ளார்கள்.

இது முதலாவது சந்தர்ப்பம் பாராளுமன்ற உறுப்பினர் ஒருவர் மாகாண சபைக்கு வந்து போட்டியிட்டு தோல்வியுற்ற முதலாவது சந்தர்ப்பம் ஊவாவில் தான் இடம்பெற்றுள்ளது. சம்பந்தப்பட்ட உறுப்பினரை இழிவுபடுத்துவதற்காக நான் கூறவில்லை. எனினும், அவரை இத்தகைய நிலைக்கு எதிர்க்கட்சி ஆளாக்கியுள்ளது என்பதைத் தான் குறிப்பிட விரும்புகின்றேன்” என்றுள்ளார்.

0 Responses to ஊவாவில் ஐ.ம.சு.கூ அரசாங்கமே வெற்றி பெற்றது: மஹிந்த

Post a Comment

Followers

தொடர்புக்கு: vannionline@gmail.com