Content feed Comments Feed
    “சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”

வடக்கு, கிழக்கில் செயற்படுவதைப்போன்று தெற்கிலும், மலையகத்திலும் இயங்கும் கட்சிகளை ஒன்றிணைத்து புதிய தமிழ்க் கூட்டணியொன்றை உருவாக்கும் முயற்சியில் மனோ கணேசன் தலைமையிலான ஜனநாயக மக்கள் முன்னணி ஈடுபட்டுள்ளது.

பல்வேறு கொள்கைகளின் அடிப்படையில் தனித்தனியே இயங்கிய போதிலும் தமிழ்த் தேசிய கூட்டமைப்பாக வடக்கு, கிழக்குக் கட்சிகள் கூட்டிணைந்திருப்பதைப்போல், தெற்கிலும் மலையகத்திலும் செயற்படும் சகல தமிழ் அரசியல் கட்சிகளையும் ஒன்றிணைத்து தமிழ்க் கூட்டமைப்பொன்று உருவாகவுள்ளது.

இது தொடர்பில் தென்னிலங்கை மற்றும் மலையக தமிழ் அரசியல் கட்சிகளின் தலைவர்களுடன் ஜனநாயக மக்கள் முன்னணியின் தலைவர் மனோ கணேசன் பேச்சுவார்த்தைகளை ஆரம்பித்துள்ளதாக முன்னணியின் தேசிய அமைப்பாளரும் மேல் மாகாண சபையின் முன்னாள் உறுப்பினருமான எஸ். இராஜேந்திரன் தெரிவித்துள்ளார்.

வெகுவிரைவில் புதிய தமிழ்க் கூட்டணி தொடர்பாக இறுதித் தீர்மானம் மேற்கொள் ளப்பட்டு அறிவிக்கப்படுமென்றும் அவர் கூறியுள்ளார்.

தென் பகுதிக்கான தமிழ்க் கூட்டமைப்பு அமையப்பெற்றதும் தமிழ்த் தேசிய கூட்டமைப்புடன் இணைந்து பொதுவானதொரு தேசியத் தமிழ்க் கூட்டமைப்பொன்றை ஏற்படுத்தி இலங்கையின் சகல பகுதிகளிலும் வாழும் தமிழ் மக்களின் அபிலாஷைகளுக்காக செயற்படுவது குறித்தும் மனோ கணேசன் ஆலோசித்து வருவதாகத் தெரிவித்த இராஜேந்திரன், இது தொடர்பாகத் தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் தலைமைப்பீடத்துடன் பேச்சுவார்த்தை நடத்தி இணக்கம் காணப்படுமெனவும் குறிப்பிட்டுள்ளார்.

புதிய கூட்டணியின் தலைமைப் பொறுப்புக்கு ஜனநாயக மக்கள் முன்னணியின் தலைவர் மனோ கணேசனை நியமிப்பதற்கு கட்சிகள் பூர்வாங்கப் பேச்சுவார்த்தையில் விருப்பம் தெரிவித்துள்ளதாகத் தெரிவித்த இராஜேந்திரன், தமிழ்த் தேசியக் கூட்டமைப்புடன் இணைந்து சகல பகுதிகளுக்குமான ஒரேயொரு தேசியத் தமிழ்க் கூட்டமைப்பை உருவாக்க வேண்டுமென்பதே ஜனநாயக மக்கள் முன்னணியின் எதிர்கால நோக்கமாகுமென்றும் தெரிவித்துள்ளார்.

0 Responses to தென்பகுதி, மலையக கட்சிகள் இணைந்து புதிய தமிழ்க் கூட்டமைப்பு; மனோ கணேசனின் முயற்சிக்கு கட்சிகள் ஆதரவு!

Post a Comment

Followers

தொடர்புக்கு: vannionline@gmail.com