Content feed Comments Feed
    “சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”

ஆந்திர பிரதேசத்தின் சித்தூர் மாவட்டத்தில் திருப்பதிக்கு அருகில் உள்ள சேஷாச்சலம் வனப் பகுதியில் பொலிஸாருக்கும் சந்தனக் கடத்தல்காரர்களுக்கும் இடையில் நடந்த துப்பாக்கிச் சூட்டில் குறைந்தது 20 பேர் கொல்லப்பட்டிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

அதோடு ஆந்திரப் பிரதேசத்தில் பொலிஸாரின் சுற்றிவளைப்பில் அதிகளவிலானோர் கொல்லப்பட்ட சம்பவமாகவும் இது பதிவாகியுள்ளது.

உலகிலேயே ஆந்திராவின் சேச்சாலம் வனப்பகுதி மற்றும் தமிழகம், கர்நாடாகவின் சில இடங்களில் மட்டுமே இவ்வகையான மிக அரிதான செந்நிறச் சந்தன மரங்கள் காணப்படுகின்றன. எனவே இங்கு அதிகளவில் சட்டவிரோதமாக சந்தனக் கடத்தல் நடைபெற்று வந்ததாகவும் இதை முறியடிக்கவே தற்போது சிறப்புப் படையினரின் உதவியுடன் இத்தாக்குதல் நடத்தவேண்டியிருந்ததாகவும் காவற்துறையினர் கூறியுள்ளனர்.

எனினும் இத்தாக்குதலில் கொல்லப்பட்டவர்கள் நிஜ சந்தனக் கடத்தல் காரர்கள் அல்ல. மாறாக அன்றாடம் தொழில் செய்யும் கூலித் தொழிலாகள் தான் கொல்லப்பட்டுள்ளதாக மதிமுக பொதுச் செயலாளர் வைகோ குற்றம் சாட்டியுள்ளார்.

இது குறித்து வைகோ வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

மரங்களை வெட்டிக் கடத்துகின்ற பெரும் திமிங்கலங்களும், பண முதலைகளும் எதிலும் சிக்காமல் தப்பித்துக்கொள்கின்றனர், அன்றாடம் உழைக்கின்ற அப்பாவி கூலித் தொழிலாளர்கள் படுகொலை செய்யப்பட்டுள்ளனர்.

சட்ட விரோதமான செயலில் ஈடுபட்டிருந்தால், அவர்களை கைது செய்து சட்டப்படி நடவடிக்கை எடுப்பதுதான் முறையாகும். காடுகளில் உலவும் விலங்குகள், பறவைகளைக்கூட சுட்டுப் பொசுக்கக் கூடாது என்று சட்டம் இருக்கிறது.

ஆனால், 12 தமிழர்கள் உள்ளிட்ட தொழிலாளர்கள் ஆந்திர காவல்துறையினரால் சுட்டுப் படுகொலை செய்யப்பட்டுள்ளனர். இப்படுகொலையில் ஈடுபட்ட காவல்துறையினருக்குக் கண்டனம் தெரிவிப்பதோடு, இதற்குக் காரணமான காவல்துறையினர் மீது கொலை வழக்கு தொடரப்பட்டு பணி நீக்கம் செய்வதுடன், கைது செய்யப்பட வேண்டும்.

பணியில் இருக்கும் உயர் நீதிமன்ற நீதிபதி தலைமையில் நீதி விசாரணை நடத்தப்பட வேண்டும். துப்பாக்கிச் சூட்டில் பலியான தொழிலாளர்களின் குடும்பங்களுக்கு தக்க நிவாரணத்தை ஆந்திர மாநில அரசு வழங்க வேண்டும்.

துப்பாக்கிச் சூட்டில் உயிர் நீத்த தொழிலாளர்களின் குடும்பத்தினருக்கு ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக்கொள்கிறேன். இவ்வாறு அந்த அறிக்கையில் வைகோ கூறியுள்ளார்.

0 Responses to ஆந்திரப் பிரதேசத்தில் பொலிஸாரின் தாக்குதலில் 20 பேர் பலி!

Post a Comment

Followers

தொடர்புக்கு: vannionline@gmail.com