Content feed Comments Feed
    “சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”

இலங்கையில் நீண்டு செல்லும் இனப்பிரச்சினையை தீர்ப்பதற்கு இதய சுத்தியுடன் அமெரிக்கா உதவ வேண்டும் என்று கிழக்கு மாகாண முதலமைச்சர் நஸீர் அஹமட் கோரிக்கை விடுத்துள்ளார்.

இலங்கைக்கான விஜயமொன்றை மேற்கொண்டுள்ள அமெரிக்காவின் தெற்கு மற்றும் மத்திய ஆசிய விவகாரங்களுக்கான உதவி இராஜாங்க செயலாளர் நிஷா தேசாய் பிஸ்வால், நேற்று வியாழக்கிழமை கிழக்கு மாகாணத்திற்கு சென்றிருந்தார். அங்கு திருகோணேச்சர ஆலயத்தில் வழிபாடுகளில் ஈடுபட்டதுடன், கிழக்கு மாகாண முதலமைச்சர் நஸீர் அஹமட்டையும் சந்தித்துப் பேசினார்.

இந்தச் சந்திப்பின் போதே, கிழக்கு மாகாண முதலமைச்சர், நிஷா தேசாய் பிஸ்வாலிடம் மேற்கண்ட வேண்டுகோளை விடுத்துள்ளார்.

இது தொடர்பில் ஊடகங்களுக்கு கருத்துரைத்த கிழக்கு மாகாண முதலமைச்சர், “நல்லாட்சி அரசாங்கத்தின் மீது தமிழ் பேசும் சிறுபான்மை இனங்களான தமிழர்களும் முஸ்லிம்களும் முழு நம்பிக்கை கொண்டுள்ளார்கள். இழப்புக்களை சந்தித்த மக்களின் எதிர்பார்ப்பு வீண்போகாத வண்ணம், சமாதான முன்னெடுப்புக்களை நோக்கி நகரும் இலங்கை அரசுக்கு, பொருளாதார ரீதியிலும் இராஜதந்திர ரீதியிலும் அமெரிக்கா பக்கபலமாக இருக்க வேண்டும் என்பதையே கிழக்கு மக்கள் எதிர்பார்த்து நிற்கின்றனர் எனக் குறிப்பிட்டேன்.

இனவாதிகளை ஒடுக்குவதற்கும் நாட்டில் சமாதானத்தின் கரம் ஓங்கச் செய்வதற்கும் இதுவே தக்க தருணம். அதேவேளை, இதய சுத்தியற்ற தேசிய மற்றும் சர்வதேச சமாதான முன்னெடுப்புக்களால் இந்த நாட்டு மக்கள் இனியும் இழப்புக்களைச் சந்திக்க இடமளிக்கக்கூடாது.

இலங்கையில் நீண்டகாலமாக இடம்பெற்று வந்த இனப்பிரச்சினையின் காரணமாக இடம்பெயரச் செய்யப்பட்டு அகதிகளான மக்களின் மீள் குடியேற்றத்தில், ஆக்கபூர்வமான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட வேண்டும். அத்தோடு, சுனாமி, பெருவெள்ளம், வறட்சி போன்ற இயற்கை இடர்களால் பாதிக்கப்பட்ட மக்களுக்கான முறையான வாழ்வாதார திட்டங்கள் வெற்றியளிக்காத நிலை காணப்படுகின்றது என்பதையும் அமெரிக்க பிரதிநிதியிடம் தெரிவித்தேன்.

இனப்பிரச்சினைக்கான தீர்வின் ஒரு அங்கமாக, அரசியல் திருத்தத்தின் மூலம் அதிகாரப் பகிர்வாக கொண்டுவரப்பட்ட மாகாண சபைக்குரிய அதிகாரங்கள், குறிப்பாக வடக்கு கிழக்கு மாகாண சபைகளுக்கு இன்னமும் கிடைக்காதிருப்பது பலவழிகளில் அபிவிருத்திக்கு தடையாக இருக்கின்றது. இது நிவர்த்தி செய்யப்பட வேண்டும் என்றும் குறிப்பிட்டேன்.” என்றுள்ளார்.

0 Responses to இனப்பிரச்சினையை தீர்ப்பதற்கு அமெரிக்கா இதய சுத்தியுடன் உதவ வேண்டும்: நஸீர் அஹமட்

Post a Comment

Followers

தொடர்புக்கு: vannionline@gmail.com