Content feed Comments Feed
    “சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”

இராணுவத்தின் ஆக்கிரமிப்பிலுள்ள வடக்கு மாகாணத்தில் சமாதானம் மற்றும் நல்லிணக்கம் ஆகியவற்றுக்கான சூழல் இன்னமும் ஏற்படவில்லை என்று வடக்கு மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார்.

வடக்கில் ஒரு இலட்சத்திற்கும் அண்மித்த இராணுவம் இருக்கின்றது. பொதுமக்களின் காணிகளை இராணுவம் அபகரித்துள்ளது. அத்துமீறல்களில் ஈடுபடுகின்றது. அப்படிப்பட்ட நிலையில், எவ்வாறு சமாதானத்துக்கான சூழல் ஏற்படும் என்றும் அவர் கேள்வியெழுப்பியுள்ளார்.

யாழ்ப்பாணத்துக்கான விஜயமொன்றை மேற்கொண்டு ஐரோப்பிய ஒன்றியத்தின் ஒருங்கிணைப்பு அதிகாரி யோடி கரஸ்கோ முனாஸ் நேற்றுமுன்தினம் வெள்ளிக்கிழமை வந்தார். அவர், வடக்கு மாகாண முதலமைச்சரோடு கலந்துரையாடலில் ஈடுபட்டார். அதன்போதே, சி.வி.விக்னேஸ்வரன் மேற்கண்ட விடயங்களைக் குறிப்பிட்டுள்ளார்.

இலங்கையில் சமாதானம் குறித்து அரசாங்கம் எடுக்கும் நடவடிக்கைகளை ஆராயவும், எந்தளவில் சர்வதேச நாடுகள் உதவியாக இருக்க முடியும் என்பதையும் அறிந்து கொள்ளவும் தான் வருகை தந்திருப்பதாக ஐரோப்பிய ஒன்றியத்தின் ஒருங்கிணைப்பு அதிகாரி முதலமைச்சரிடம் கூறியிருந்தார்.

அதற்குப் பதிலளித்த முதலமைச்சர், “புரிந்துணர்வையும் சமாதானத்தையும் ஏற்படுத்துவதற்கு அரசாங்கம் பல நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றது. ஆனால், அவை தான்தோன்றித்தனமாக அரசாங்கத்தினால் தயாரிக்கப்பட்டதே தவிர, வடக்கு மாகாண பிரதிநிதிகளுடன் கலந்தாலோசித்து நடைபெறவில்லை. சமாதானம் ஏற்படுத்துவதற்கு முன்னர் அடிப்படை சூழல் இருக்க வேண்டும். அந்த சூழல் ஏற்படவில்லை.

தென்னாபிரிக்காவில் அரசியல் ரீதியான பிரச்சினைகளைத் தீர்வுக்கு கொண்டு வந்ததன் பின்னர் தான், நல்லிணக்கம் சம்பந்தமான ஆணைக்குழு நியமிக்கப்பட்டது. அவ்வாறு செய்தால் மாத்திரமே மக்கள் இணைந்து செயற்பட தயாராகுவார்கள்.

வடக்கு மாகாணத்தில் அவ்வாறானதொரு சூழல் இருக்கவில்லை. ஒரு இலட்சத்திற்கும் அண்மித்த இராணுவத்தினர் வடக்கு மாகாணத்தில் இருக்கின்றார்கள். மக்களின் காணிகள் இராணுவத்தினர் வசம் இருக்கின்றது. இன்னும் மக்கள் நலன்புரி முகாம்களில் வசிக்கின்றார்கள். வாழ்வாதாரங்கள் மற்றும் மீன்பிடி தொழில்கள் தடைபடுகின்றன. வளங்கள் சூறையாடப்படுகின்றன. இவ்வாறான சூழ்நிலையில் எவ்வாறு சமாதானத்தினையும் நல்லிணக்கத்தினையும் கொண்டுவர முடியும்.” என்றுள்ளார்.

0 Responses to இராணுவ ஆக்கிரமிப்பிலுள்ள வடக்கில் சமாதானத்துக்கான சூழல் இன்னும் இல்லை: விக்னேஸ்வரன்

Post a Comment

Followers

தொடர்புக்கு: vannionline@gmail.com