Content feed Comments Feed
    “சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”

புதிய அரசியலமைப்பினூடாக வடக்கு- கிழக்கிற்கு காணி உரிமை வழங்கப்படாது என்று சபை முதல்வரும், உயர்கல்வி அமைச்சருமான லக்ஷ்மன் கிரியெல்ல தெரிவித்துள்ளார்.

புதிய அரசியலமைப்புக்கான வழிநடத்தல் குழுவின் இடைக்கால அறிக்கை மீதான விவாதம் பாராளுமன்றத்தில் நேற்று திங்கட்கிழமை தொடங்கியது. அந்த விவாதத்தில் கலந்து கொண்டு பேசும் போதே அவர் இவ்வாறு கூறியுள்ளார்.

லக்ஷ்மன் கிரியெல்ல மேலும் குறிப்பிட்டுள்ளதாவது, “வரலாற்றில் இரண்டு சந்தர்ப்பங்களில், இலங்கையில் அரசியலமைப்புகள் கொண்டுவரப்பட்டிருந்தன. இந்த இரண்டு சந்தர்ப்பங்களிலும் தமிழ்க் கட்சிகளும் தமிழ் மக்களும் பங்கேற்றிருக்கவில்லை. முதல் தடவையாக நாம் அனைவரும் ஒன்றிணைந்து சட்டவாக்கத்தை மேற்கொள்ள முனைந்துள்ளோம். இந்த சந்தர்ப்பத்தை நழுவ விடக் கூடாது

இந்த நாட்டில் மொழிப் பிரச்சினையே தனிநாடு கோரிக்கைவரை சென்றது. இந்தத் தவறை திருத்திக்கொள்ள இரண்டு தேசியக் கட்சிகளும் ஒன்றிணைந்துள்ளன. இலங்கையில் 30 சதவீதம் தமிழ் பேசும் மக்களும் 70 சதவீதம் சிங்கள மக்களும் வாழ்கின்றனர். தேசியப் பிரச்சினைகளை தீர்த்து முன்னோக்கிப் பயணிக்க வேண்டும். இடைக்கால அறிக்கை ஓர் இறுதிப்படுத்தப்பட்ட அரசியலமைப்பு அல்ல. சில ஊடகங்கள் இதனை இறுதிப்படுத்தப்பட்ட அறிக்கையாகச் செய்திகளை வெளியிட்டு வருகின்றன.

யுத்தம் நடைபெற்றுக்கொண்டிருந்த தருணத்தில் 13வது திருத்தச்சாட்டத்தை தாண்டி அதிகாரப் பகிர்வை வழங்குவதாக, முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ இந்தியாவுக்கு வாக்குறுதியளித்திருந்தார். இந்தியாவை எதிர்த்து யுத்தத்தை கொண்டு செல்ல முடியாது என்பதன் அடிப்படையிலேயே மஹிந்த இவ்வாறு வாக்குறுதியளித்திருந்தார். ஆனால், இன்று அவர் புதிய அரசியலமைப்புக்கு எதிர்ப்பை வெளியிட்டு வருகிறார்.

வரலாற்றில் இரண்டு கட்சிகளும் ஒவ்வொரு சந்தர்ப்பத்திலும் தேசிய பிரச்சினைக்கான தீர்வை எதிர்த்தே வந்தன. அதனை நாங்கள் வெளிப்படையாக ஏற்றுக்கொள்கின்றோம்.

தற்போது அனைவரும் ஒரே மேசையில் அமர்ந்து தீர்வுகாணும் சந்தர்ப்பம் கிட்டியுள்ளது. புதிய அரசியலமைப்பில் பௌத்த மதத்துக்கான முன்னுரிமை அவ்வாறே பேணப்படும். நாமும் பௌத்தர்கள்தான். பௌத்த மதத்துக்கான முன்னுரிமையை நாங்கள் ஒருபோதும் நீக்க மாட்டோம். அரசமைப்பு நீதிமன்றம் ஒன்று ஸ்தாபிக்கப்படும். ஒற்றையாட்சியின் கீழ் ஒருமித்த பிளவுப்படாத நாட்டுக்குள் அதிக பட்ச அதிகாரத்தை பகிர்ந்தளிப்பதே அரசின் நோக்கமாக உள்ளது.

மொழிப் பிரச்சினைக்கே தமிழர்கள் தீர்வைக் கோரியிருந்தனர். அதில் இருந்துதான் காலத்துக்கு காலம் இந்தப் பிரச்சினை தோற்றம் பெற்றது. தனிநாடு கோரிக்கை வரை தேசிய இனப்பிரச்சினை வலுப்பெற்றிருந்தது. தமிழர்கள் விடயத்தில் நாம் தவறிழைத்துள்ளோம். அதற்காக இந்தச் சந்தர்ப்பத்தைப் பயன்படுத்தி தீர்த்துக்கொள்ள வேண்டும்.

தேசிய பிரச்சினைக்கு தீர்வுகாணப்படும் போதுதான் இலங்கையின் தனித்துவம் பாதுகாக்கப்படும். இன, மதங்களை கடந்து இலங்கையர்களின் தனித்துவத்தை பாதுகாக்க அனைவரும் ஒன்றிணைய வேண்டும்.” என்றுள்ளார்.

0 Responses to வடக்கு- கிழக்கிற்கு காணி உரிமை வழங்கப்படாது: லக்ஷ்மன் கிரியெல்ல

Post a Comment

Followers

தொடர்புக்கு: vannionline@gmail.com