Content feed Comments Feed
    “சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”

நாட்டில் நீடித்து வரும் தேசியப் பிரச்சினையை தீர்க்காவிட்டால் இலங்கை மீதான சர்வதேச அழுத்தம் மேலும் அதிகரிக்கும் என்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவரும் எதிர்க்கட்சித் தலைவருமான இரா.சம்பந்தன் தெரிவித்துள்ளார்.

ஜனநாயகம் என்பது நாட்டில் உயர்வானதாக இருக்க வேண்டும். இதனை உறுதிப்படுத்தும் வகையில் நிர்வாக கட்டமைப்புக்கள் அமைக்கப்பட வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தியுள்ளார்.

புதிய அரசியலமைப்புக்கான வழிநடத்தல் குழுவின் இடைக்கால அறிக்கை மீதான விவாதம் மூன்றாவது நாளாக நேற்று புதன்கிழமையும் பாராளுமன்றத்தில் இடம்பெற்றது. அந்த விவாதத்தில் கலந்து கொண்டு பேசும் போதே இரா.சம்பந்தன் மேற்கண்டவாறு கூறியுள்ளார்.

அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது, “நாட்டிலுள்ள சகலருடைய ஜனநாயகமும் மேம்படுத்தப்பட வேண்டும். இதன் அடிப்படையில் இந்த அரசாங்கத்துக்கு ஒத்துழைப்பு வழங்குகின்றோம். எமது நாட்டின் மீதான சர்வதேச அழுத்தம் விலக வேண்டும் என்றும், பிரச்சினைகள் உள்நாட்டில் தீர்க்கப்பட வேண்டும் என்றும் விரும்புகின்றோம்.

பிரச்சினையை உள்நாட்டில் தீர்க்காவிட்டால் சர்வதேச அழுத்தம் மோசமடையும் என்பதை நினைவில் வைத்துக் கொள்ள வேண்டும். புதிய அரசியலமைப்பை தயாரிப்பதாயின் பொதுவான விடயங்களில் தேசிய இணக்கப்பாடு அவசியமானது. அதிகபட்ச சாத்தியமான ஒருமித்த கருத்துக்களுடன் புதிய அரசியலமைப்பை தயாரிக்க வேண்டும் என்பதே எமது எதிர்பார்ப்பாகும். பொது மக்களின் கருத்துக்களையும் உள்ளடக்கியதாக இது இருக்க வேண்டும்.

யுத்தம் முடிவடைந்த பின்னர் ஏற்றுக் கொள்ளக்கூடிய தீர்வொன்று முன்வைக்கப்பட வேண்டும் என்பதை அரசாங்கமே சர்வதேசத்துக்கு எடுத்துக் கூறியிருந்தது. எனவே அவ்வாறான தீர்வொன்றை முன்வைப்பதற்கான நடவடிக்கைகளை எடுப்பது கட்டாயமாகும். உலகத்துக்கு வழங்கிய வாக்குறுதிகளை நிறைவேற்ற வேண்டும். சர்வதேச மட்டத்தில் இலங்கை எதிர்நோக்கியுள்ள பிரச்சினைகளை தீர்ப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும். இந்த நிலைமை மோசமடையக் கூடாது. எனவே, தேசிய பிரச்சினையைத் தீர்க்கும் வகையில் அரசியலமைப்பு தயாரிக்கப்பட்டு, மக்களின் அங்கீகாரத்துடன் ஏற்றுக் கொள்ளப்பட வேண்டும்.

அதியுச்ச அதிகாரப் பகிர்வு வழங்கப்படவேண்டும் எனக் கூறியிருந்த முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ, தனது நிலைப்பாட்டை தலைகீழாக மாற்றியுள்ளமை துரதிஷ்டவசமானதாகும்.

2006ஆம் ஆண்டு முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ, சர்வகட்சி மாநாட்டை அங்குரார்பணம் செய்துவைத்து உரையாற்றும்போது, "ஒருமை, ஆட்புல ஒருமைப்பாடு மற்றும் இறைமை என்பன பாதுகாக்கப்பட வேண்டும். இது தொடர்பில் கலந்துரையாடுவதற்கு களம் திறந்துவிடப்பட்டுள்ளது. இதற்கான எமது அர்ப்பணிப்பானது சர்வதேச சமூகத்தை உள்ளடக்கியதாகவும் குறிப்பாக இந்தியா மற்றும் இணைத் தலைமை நாடுகளின் பங்களிப்புடனானதாக இருக்கும். எந்தவொரு பிளவும் ஏற்படாது. பிரிக்கப்படாத நாட்டுக்குள் தீர்வொன்றுக்குச் செயல்வதே எமது நோக்கமாகம்" எனக் கூறியிருந்தார். அவ்வாறு கூறியவர் தற்பொழுது தலைகீழாக மாறியிருக்கின்றார்.” என்றுள்ளார்.

0 Responses to தேசியப் பிரச்சினையை தீர்க்காவிட்டால் சர்வதேச அழுத்தம் மேலும் அதிகரிக்கும்: சம்பந்தன்

Post a Comment

Followers

தொடர்புக்கு: vannionline@gmail.com