“இதயம் ஒரு கோவில்..” - பாடல் ஒலிக்க ஆரம்பித்தது.
உச்சஸ்தாயியில் ஆரம்பிக்கும் ஆலாபனையில், எஸ்.பி.பி.யின் குரல் அப்படியே கீழே இறங்கி வரும்போது சாரல் தெறிப்பதுபோல ஒரு உணர்வு. அப்படியே வேகம் குறைந்து தாலாட்டுவதுபோல சீராகப் போகும். பாடல் முழுவதும் சிறு சந்தோஷமும், ஒரு புத்துணர்ச்சியும் இழையோடியபடி இருக்கும். ஒருவேளை எனக்கு மட்டும் அப்படியிருக்கிறதோ என்னவோ. எனக்கு நினைவு தெரிந்து கேட்ட முதல் பாடல். அதிகமாகக் கேட்ட பாடல். அதனால்தானோ என்னவோ அந்தப் பாடலுக்கென்று தனியாக சில குணங்கள் இருப்பதாகத் தோன்றுகிறது.
இந்தப்பாடல் எப்போதும் எனக்குப் பிரத்தியேகமானதாகவே இருப்பதை உணர்கிறேன். தனிமையில் மட்டுமே கேட்க விரும்புகிறேன். இந்தப்பாடல் எப்போதும் என்கூடவே இருந்ததுபோல, என்னைச் சூழ்ந்திருந்தது போல ஓருணர்வு. முன்பள்ளி சென்றபோதும், முதன்முதலாக பாடசாலை சென்றபோதும் அந்தப்பாடல் கூடவே காற்றில் வந்திருக்கிறது.
முதன்முறை விடிகாலைப் பொழுதில் ஊரை விட்டுச் சென்றபோது முதல்நாள் காலைப்பொழுதில் கேட்ட பாடலாக இருந்தது. திரும்பி வந்து உடைந்த வீட்டைத் திருத்தத் தொடங்கிய அந்த முதல்நாளில் அதே பாடல்தான் ஒலித்திருக்க வேண்டும். மறுபடியும் தொண்ணூறாம் ஆண்டில் நிரந்தரமாக ஊரைவிட்டுப் பிரிந்த அந்தக் கடைசி நாளின் காலைப் பொழுதிலும் நிச்சயமாக ‘இதயம் ஒரு கோவில்’ தான் முதற்பாடலாக ஒலித்திருக்க வேண்டும்.
தாய்நிலம் விட்டுப் பிரிந்தபின் அவ்வளவாகக் கேட்க வாய்க்கவில்லை. எப்போதாவது கேட்க நேரும்போதெல்லாம் சடுதியாக என் சொந்தமண்ணுக்கு, பால்யகாலத்துக்கு அழைத்துச் சென்றுவிடும். அதற்காகவே பின்னிரவு நேரங்களில், என் அறையை மட்டும் நிறைக்கும் மெல்லிய சத்தத்தில், கண்களை மூடிக் கேட்டபடியே நினைவுகளில் மூழ்கிக் கிடந்திருக்கிறேன்.
இப்போதும் அப்படித்தான். சொந்தமண்ணில், பலவருடப் பிரிவால் ஒருவருக்கொருவர் அந்நியமாகிப் போய்விட்ட எனக்கும், எங்கள் வீட்டுக்குமான உறவினைப் பரிச்சயம் செய்துகொள்வதுபோல ஹெட் செட்டை மாட்டி பாடலைக் கேட்கத் தொடங்கியிருந்தேன்.
இந்தப்பாடல் ஒலிக்கும் போதெல்லாம் சோதிலிங்கம் மாமாவின் ஞாபகமும் கூடவே வரும். என் சிறுபிராயத்தில் கேட்ட பாடல்களையும் அவரையும் பிரித்துப் பார்க்க முடிவதில்லை. அப்படியே முன்வாசலில் வந்து நின்றுகொள்கிறேன். அதோ இடது பக்கமாக மண்டிக்கிடக்கும் சிறு இப்பிலிப்பில் மரங்களுக்கப்பால் சோதிலிங்கம் மாமா வீடு தெரிகிறது. அயலில் எல்லா வீடுகளும் சில திருத்தப்பட்டு, பல புதிதாக கட்டப்படுகையில் அந்த வீடு மட்டும் அப்படியே இருகிறது.
பச்சை நிறப் பெயிண்ட் அடித்த வெளிப்புறம் நிறம் மங்கிப் போய் இடையிடையே திட்டுத் திட்டாக மட்டும் வெளிறிய பச்சை தெரிகிறது. வழக்கம்போலவே கதவு யன்னல்கள் நிலையோடு கழற்றப்பட்டு, சுவர் சில இடங்களில் பூச்சுக் கழன்று தெரிந்தது. ஓட்டுக் கூரை போடப்பட்டிருந்ததால் மேற்கூரை பிழைத்திருக்கிறது.
பாடல் இப்போது அந்த வீட்டிலிருந்தே கேட்பதாக ஒரு பிரமை. அல்லது அப்படி நினைத்துக் கொள்கிறேன். அதோ ஃபிளாட் போட்ட அந்த முன் கூடத்தின் அரைச்சுவருக்கப்பால்தான் செட் என அழைக்கப்படும் ரேடியோ வைக்கப்படிருக்கும். அம்ப்ளிஃபயர் இணைத்து, எங்கள் சுற்று வட்டத்தில் ஆறேழு வீடுகளுக்கு தரமான ஒலியில் கேட்க அதுவே போதுமானது. முக்கிய தேவை ஏற்படின், வீட்டிலிருந்து நீண்ட வயரின் மூலம் பெரிய ஒலிபெருகிப் பெட்டி இணைத்துப் பிரதான வீதியும், ஒழுங்கையும் சந்திக்கும் பகுதியில் வைக்கப்ப்பட்டு ஏரியா முழுக்கக் குரல் கொடுக்கப்படும்.
ஒரு பெரிய சைஸ் தீப்பெட்டி போல உயரமான, தட்டையான ஒரு ரேடியோ அவரிடமிருந்தது. ஒரு த்ரீ வீலரின் சில்லின் அளவில் இரண்டு செப்பு நிறத்தில் ஃபிரேம் போட்ட ஸ்பீக்கர்கள் இருபக்கமும் பொருத்தப்பட்டிருக்க நடுவில் கசெட்! அப்போதைய பிரபலமான மொடலாக இருக்கவேண்டும். வேறுசில வெளிநாட்டுக்காரர்களின் வீடுகளில் சப்பட்டையாக உயரம் குறைந்த, நீளம் அதிகமான ஆர்.எக்ஸ். ரேடியோக்கள் புழக்கத்திலிருந்தன.
சோதிலிங்கம் மாமாவுக்குக் கடவுள் நம்பிக்கை இருந்ததா இல்லையா என்பதெல்லாம் தெரியவில்லை. ஆனால் இளையராஜாவை கடவுளாகக் கொண்டு எண்பதுகளில் இயங்கிவந்த திரையிசை மதத்தை எங்கள் மாமாக்கள், சித்தப்பாக்கள் உள்ளிட்ட ஏராளமானோர் பின்பற்றி வந்ததை நாங்கள் கேள்விப்பட்டிருக்கிறோம். பார்த்திருக்கிறோம்.சோதிலிங்கம் மாமாவும் அவர்களில் ஒருவர். காலையில் 'இதயம் ஒரு கோவில்' பாடலைத்தான் எங்கள் ஏரியாவின் திருப்பள்ளியெழுச்சியாக மாற்றி வைத்திருந்தார்.
நடுத்தர உயரம். சற்றே நீளமாக வளர்ந்த நெளியான தலைமுடியை ஒருபக்கம் சரித்து வாரியிருப்பார். அன்றையகால ரஜினி ஸ்டைலாக இருக்கலாம். அப்போதைய ரஜினி மட்டுமல்ல இளையராஜாவும்கூட அப்படித்தான் இருந்ததாகப் பார்த்த ஞாபகம். முகத்தில் சிறு புன்னகையும் கழுத்தில் ஒரு தங்கச்சங்கிலியும் அணிந்திருப்பார். கட்டம் போட்ட சாரத்தைச் சற்றுத்தூக்கிக் கட்டியிருப்பார். மொத்தத்தில் 'சுப்பிரமணியபுரம்' படத்தில் வரும் அதே ஸ்டைல். அன்றைய நாட்களில் மாமாக்கள், பெரிய அண்ணன்கள எல்லோருமே அப்படித்தான் இருந்ததாக ஞாபகம்.யாருடனும் அவர் அதிர்ந்து பேசிப் பார்த்ததில்லை. மெதுவான குரலில் சிறுவர்கள் எங்களுடன் அன்பாகவே பள்ளிக்கூடம், படிப்பு என்று பேசுவார். பின்னாளில் அவரும் ஒரு சண்டியர் என்று சொல்லக் கேட்கையில் நம்ப முடிந்ததில்லை, இப்போதும்கூட.
‘இதயம் ஒரு கோவிலி’ல் தொடங்கி இளையராஜாவின் ராஜாங்கம்தான் தினமும். அவ்வப்போது, 'நினைக்கத் தெரிந்த மனமே', 'சொன்னது நீதானா' என அவருடைய அப்பா காலத்துக்கும் அழைத்துச் செல்வார். அவருக்கு வாசிப்புப் பழக்கமும் இருந்தது. குமுதம், ராணிமுத்து என்று புத்தகங்கள் வாங்கிப்படிப்பார். பின்னர் யாரோ ஒருவர் இரவல் வாங்கி, ஏரியா முழுவதும் ஒரு சுற்று வலம்வரும். அக்காக்கள் பலரும் அவரின் இலக்கிய சேவையால் பயனடைந்தார்கள். அப்போது படம் மட்டும் பார்க்கும் வயதிலிருந்த எனக்கு குமுதத்தில் 'ஆவி ராச்சியம்' என்கிற தொடர் வெளிவந்ததாக ஞாபகம்.
ஊரில் இருக்கையில், எப்போதாவது ஓரிரு பாரிய வெடிச்சத்தம் கேட்கும். ‘பலாலில இருந்து ஷெல் அடிக்கிறாங்கள். கொஞ்சம் தள்ளிப் போயிருந்துட்டு வரலாம்’ எனக்கிளம்பிச் சென்று, பின்னர் நிலைமை சீராக மறுநாள் காலையில் மீண்டும் வருவது வழக்கம்.
அப்போது இரவில் டோச் லைட்டைப் பிடித்துக் கொண்டு ஷெல்துண்டு, துப்பாக்கி ரவைக் கோதுகள் சேகரிக்கும் விசித்திரமான வீரப் பழக்கம் எங்கள் பகுதியில் சிலருக்கு இருந்தது.நம் ஒவ்வொருவருக்கும் ஏதோ ஒரு பிடிவாத குணம் இருக்கும். எங்களுக்கே தெரியாமல், யாருக்காவும் மாற்றிக் கொள்ளாத, விட்டுக் கொடுக்காத இயல்பாக இருக்கும். மற்றவர்களுக்கு அது சிறுபிள்ளைத்தனமாகவும் முட்டாள்தனமாகவும் இருக்கும்.
சோதிலிங்கம் மாமாவுக்கும் ஒரு பிடிவாத குணம் இருந்தது. அயலவர்கள் ஏதும் ஷெல்லடி, பிரச்சினை என்று கிளம்பிச்செல்லும்போதெல்லாம், சுயாதீனமான இளவட்டங்களில் ஒருவரான சோதிலிங்கம் மாமா வீட்டை விட்டுச் செல்வதில்லை.
ஓர் சிவராத்திரி நாளின் அதிகாலைப் பொழுதில், ஹெலிகொப்டர் ஒன்று சுற்றிச் சுற்றிச் சுட்டுக் கொண்டிருக்க, துப்பாக்கி வேட்டுக்கள் தீர்க்கும் ஓசையும், அவ்வப்போது ஷெல் சத்தமும் முழங்கிக் கொண்டிருந்த ஒரு அசுபமுகூர்த்த வேளையில் கைக்கு அகப்பட்டதை எடுத்துக் கொண்டு ஊரே மொத்தமாக ஓடியபோதும் அவர் அசையவில்லை. காலை பத்து மணிக்கு இயக்கம் ‘ஃபீல்டில’ இறங்கி, மதியம்போல ‘கிளியர்’ பண்ணி இருதரப்பும் ஓய்வெடுத்த நேரத்தில் பெடியளுக்கு தேநீர் போட்டுக் கொடுத்து, சோறு சமைத்து சேர்ந்து சாப்பிட்டு அங்கேயே இருந்தாராம். ஓரிரு நாட்களில் இனியும் தாக்குப் பிடிக்க ஏலாது என்று இயக்கம் பின்னகர்ந்தபோதுதான் மாமாவும் சேர்ந்து 'விட்ரோ' பண்ணியிருந்தார்.
இங்கேதான் சோதிலிங்கம் மாமாவின் தனித்தன்மையான ஒரு வினோதமான பழக்கம் வருகிறது. பின்வாங்கிச் சென்ற இயக்கம் கொல்லன்கலட்டியில் ஒரு இடத்தில கவர் எடுத்து நிலைகொண்டிருந்தது. அந்தப் பொயிண்டுக்கு மிகச் சமீபமாகத்தான் அவரும் நிலைகொண்டிருந்தாராம். ஆமிக்கும், இயக்கமும் நூறு மீட்டர் இடைவெளியில் பங்கர் அடிச்சு பொசிஷன்ல இருந்ததாம். இயக்கத்தின்ர பங்கர்ல இருந்து இரண்டு மூன்று வீடு தள்ளித்தான் மாமாவின் பொசிஷன். அதற்குப் பிறகு அரைக் கிலோமீட்டராவது தாண்டித்தான் பொதுசனம் குடியிருந்தது. ஆமி இயக்கத்தைத் தாண்டி வந்தாலும், சோதிலிங்கம் மாமாவை எதிர்கொண்டுதான் சனத்தை நெருங்க வேணும் என்பதுபோல இந்த ஏற்பாட்டை அவர் கடைப்பிடித்திருக்கலாம். அந்த இடம்பெயர்வுக்குப் பின்னரும்கூட அவர் அப்படியேதான் இருந்தார்.மாற்றிக் கொண்டதில்லை.
இந்திய அமைதிப்படையின் காலம். ஆரம்பத்தில் விதவிதமான விநோதமாக வேடிக்கையாகத் தோன்றிய ஆமியும், கடலைப்பருப்பு, கடலை எண்ணெய் பற்றிய தேடல்கள் மக்களுக்கு முடிந்து போயிருந்தது. இராணுவமும் பெரிய வீடுகள், வீட்டுக்கொரு கிணறு, கிணறு நிறையத் தண்ணீர் என்று யாழ்ப்பாணத்தைப் பிரமித்துப் பாராட்டி ஓய்ந்துபோய் வந்த வேலையான ‘அமைதியைக் கவனிக்கத்’ தொடங்கியபோது எங்களூரிலும் சிலர் கவனிக்கப்பட்டார்கள்.
அன்று காலை வேளை அமைதியாக இருந்தது. ‘சோதிலிங்கத்தைப் பிடிச்சுக்கொண்டு போட்டாங்களாம்’ செய்திவந்தது. அன்றும் மறுநாளும் எந்தப் பாட்டுச் சத்தமும் கேட்கவில்லை.ஊரில பெயர் சொல்லும் அளவுக்கு சண்டியர்தானே, அதனால் ஏதோ தனிப்பட்ட பகையை, நாட்டுப் பிரச்சினையாக்கி தீர்வு காணும் நோக்கத்தில் யாரோ காட்டிக் கொடுத்துவிட்டதாக ஒரு பேச்சு. முக்கியமான சமயங்களில் சந்தியில் சத்தமாக இயக்கப்பாட்டுக்கள் போடுறதுதான் காரணம் என்றும் ஒரு சாரார் சந்தேகம் தெரிவித்தார்கள்.
"ஆ..." என்று ஆரம்பித்த இளையராஜாவின் குரல் தொடர்ந்து, "தென்பாண்டி சீமையிலே தேரோடும் வீதியிலே..." காலையின் அமைதியை வருடிக் கலைத்தது.
‘ஆமி சோதிலிங்கம் மாமாவை விட்டுட்டாங்கள்!’ அயலுக்குத் தெரிவித்துக் கொண்டதாகவேபட்டது. "யார் அடித்தாரோ.." வழமைக்கு மாறாக திரும்பத் திரும்பக் கேட்டதாக ஒரு பிரமை. ‘நல்ல அடியாம்’ என்று பேசிக் கொண்டார்கள். ‘யாரையோ கேட்டு விசாரிச்சாங்களாம். கட்டி வச்சு அடிச்சவங்களாம். ரெண்டு காதுக்குப் பக்கத்தாலையும் உரசிக் கொண்டு போறமாதிரி சுட்டவங்களாம். ஒண்டுக்குமே வாயே திறக்கேல்லயாம். அவங்களும் களைச்சுப் போய் விட்டுட்டாங்களாம்’- பலவாறாகப் பேசிக் கொண்டார்கள். பலவாறான பேச்சுக்கள் உலாவின. சோதிலிங்கம் மாமா அதுபற்றி எதுவும் பேசவில்லை. எதுவும் நடக்காதது போல அமைதியாக இருந்தார்.
மறுநாள் காலை கிணற்றடியில் தோளில் துவாயும், வாயில் டூத் பிரஷ்ஷையும் வைத்துக் கொண்டு சற்றே தலையைச் சரித்து ஒரு தினுசாக மேலே பார்த்துக் கொண்டு ஆழ்ந்த யோசனையுடன் நின்றிருந்தார். பின்னணியில் பாடல் ஒலித்துக் கொண்டிருந்தது, 'வானத்தைப் பார்த்தேன் பூமியைப் பார்த்தேன் மனுஷரை இன்னும் பார்க்கலையே!'
நல்லூரின் வீதியில் திலீபன் உண்ணாவிரதத்தை ஆரம்பித்தபோது, ஊர் முழுவதும் ஒருவித சோகம் கவிந்திருந்தது. சோதிலிங்கம் மாமா ஒழுங்கையும், கீரிமலை வீதியும் சந்திக்கிற இடத்தில் பெரிய பொக்ஸ் எல்லாம் செட் பண்ணி தொடர்ந்து எழுச்சிப் பாடல்களை ஒலிபரப்ப ஆரம்பித்தார். என்னதான் எழுச்சிப் பாடல்கள் எனினும் முதலில் கடவுள் வணக்கத்துடன் ஆரம்பிப்பதுதானே முறை. அது அப்போது எனக்குப் புரியவில்லை. முதலாவதாக ஒலிக்கும் பாடல், 'முதல் வணக்கம் எங்கள் முருகனுக்கே..'
அப்போதெல்லாம் என் வயதொத்தவர்கள் போலவே எனக்கும் சில நம்பிக்கைகள் இருந்தன. 'அதோ அந்தப் பறவைபோல வாழவேண்டும்', 'தோல்வி நிலையென நினைத்தால்' பாடல்களெல்லாம் இயக்கபாடல்கள்தான் என்பதில் நானும் தெளிவாக இருந்தேன். ஆனால் இந்த 'முதல் வணக்கம் எங்கள் முருகனுக்கே' பாட்டும் இயக்கப்பாட்டுத்தானோ என நான்மட்டும் தீவிரமாகச் சந்தேகப்பட்டதற்குக் காரணம் சத்தியமாகச் சோதிலிங்கம் மாமாதான். 'பாடும் பறவைகள் வாருங்கள்' என்றொரு பாடலும் அப்போதுதான் புதிதாக ஒலிக்க ஆரம்பித்தது. ஓர் அதிகாலைப் பொழுதில் பாடல்கள் நின்றுபோய் ஷெனாயும், சித்தாரும் நிகழ்ந்துவிட்ட ஒருபெரும் சோகத்தை அறிவித்தன.
இந்திய இராணுவம் வெளியேறியபோது சந்திக்குச் சந்தி ஒலிபெருக்கி கட்டி, கோலாகலமாகக் கொண்டாடப்பட்டது. 'பரணி பாடுவோம்' பாடலோடு எங்கள் ஏரியாவும் கலகலத்தது. அடுத்துவந்த நாட்கள், மாதங்கள் மிக வேகமாக கடந்து போயின. நாங்களும் நிரந்தரமாக ஊரை விட்டு எங்கெங்கோ பிரிந்துபோனோம்.
ஊரை வீட்டு பிரிந்த பிறகு நீண்ட நாட்களாக, இல்லை பல வருடங்களாகவே 'இதயம் ஒரு கோயில்' பாடலைக் கேட்ட ஞாபகம் இல்லை. ஏனோ தெரியவில்லை அந்தப் பாடல்மட்டும் கேட்ட ஞாபகம் இல்லை.
சோதிலிங்கம் மாமா தொடர்ந்தும் கேட்டுக் கொண்டிருந்தாரா எனவும் தெரியவில்லை. அவரிடமிருந்த ஏராளமான பாடல் காசெட்டுகள் என்னவாயின? நிச்சயமாகத் தன்னுடன் எடுத்துச் வந்திருக்கக்கூடும். சோதிலிங்கம் மாமா ஏ.ஆர்.ரஹ்மான் இசையைக் கொண்டாடியிருப்பாரா? அல்லது அதுவரை தீவிர இளையராஜா ரசிகராயிருந்த மாமாக்கள் பலரைப்போல ரஹ்மானை ஏற்றுக் கொள்ளமுடியாமல் ஒரு மனத்தடை உண்டாகியிருக்குமா? நான் அப்படி நம்பவில்லை. 'சின்ன சின்ன ஆசை' அவரது காலையின் முதற்பாடலாக மாறியிருக்குமா என்பது தெரியவில்லை. ஆனால் நிச்சயமாக 'காதல் ரோஜாவே' அவர் அன்றாடம் கேட்கும் பாடல்களில் இடம்பிடித்திருக்கும்.
நீண்டகாலத்தின் பின்னர் 'இதயம் ஒரு கோயில்' பாடலைத் திரும்ப ஓர் பின்னிரவு வேளையில் லயித்துக் கேட்டபோது, கொழும்பில் வேலைக்குச் சேர்ந்து விட்டிருந்தேன். அப்படி முதன்முதல் கேட்டபோதும், அதன்பின் எப்போது கேட்டாலும் அது என்னைச் சடுதியாக என் பால்ய காலத்துக்கு கொண்டு சேர்த்துவிட்டதுபோல உணர்கிறேன்.
இதோ சோதிலிங்கம் மாமா வீடு, அதே பழைய அடையாளங்களின் எச்சத்தோடு, அயற்சூழலுக்கு முற்றிலும் மாறானதாகதனித்திருக்கிறது. இன்னும் சில காலம் அப்படியே இருக்கக் கூடும். யாரவது திருத்துவர்களா? இடித்துவிடுவார்களா? தெரியவில்லை. அவர் இப்போது இங்கே இருந்தால் என்ன பாடல் ஒலித்துக் கொண்டிருக்கும்? விடை தெரியாத பல கேள்விகள் எப்போதும் எம்மைச் சூழ்ந்தவாறே இருக்கின்றன.
தொண்ணூற்று ஐந்தில் 'முன்னேறிப் பாய்தல்' என்கிற பெயரில் இலங்கை இராணுவம் யாழ்ப்பாணத்தைக் கைப்பற்றும் நடவடிக்கையை ஆரம்பித்திருந்தது. அப்போது, அளவெட்டியில் முன்னேறி நிலைகொண்டிருந்தது இராணுவம். வழக்கம்போல புலிகளின் முன்னரங்க நிலைக்கு சமீபமாக சோதிலிங்கம் மாமாவும் நிலைகொண்டிருந்தாராம்.
இராணுவம் தொடர்ந்து முன்னேறிக்கொண்டிருந்தது. புலிகளின் வழமைக்கு மாறாக ஒரு பௌர்ணமி இரவின் வெளிச்சத்தில் 'புலிப்பாய்ச்சல்' என்கிற பதில் நடவடிக்கை ஆரம்பிக்கப்பட்டது. மீண்டும் புறப்பட இடத்துக்கே இராணுவம் திருப்பியனுப்பப்பட்டது. எங்கும் 'முன்னேறிப் பாய்வதென்ன அம்மா' பாடல் உற்சாகமாக ஒலிக்க, இடம்பெயர்ந்தவர்கள் மீண்டும் தங்கள் சொந்த இடங்களுக்குத் திரும்ப, வழமைக்கு மீண்டது யாழ்ப்பாணம்.
சோதிலிங்கம் மாமா பற்றி ஒருதகவலும் இல்லை. அவர்தங்கியிருந்த வீட்டில் அவரது சைக்கிள் மட்டும் கிடந்ததாம். நிச்சயமாக அந்தச் சைக்கிளில் டைனமோ ஒன்று பொருத்தி இருந்திருக்கும்.
அவர் கடைசியாகக் கேட்ட பாடல் எதுவாயிருக்கும்?!

0 Responses to இதயம் ஒரு கோவில்! (ஜீ உமாஜி)