Content feed Comments Feed
    “சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”

“பாராளுமன்றத்தில் ஆளும் கட்சியினரும் கூட்டு எதிரணியினரும் ‘திருடர்கள்… திருடர்கள்…’ என்று கூச்சலிடுகின்றனர். உண்மையான திருடர்கள் யார் என்பதை மக்கள் நன்கு அறிவார்கள்.” என்று ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.

“அத்தோடு, ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியைப் பலவீனப்படுத்தி புதிய கட்சி ஆரம்பிக்கப்பட்டுள்ளது. அதன் பிரதிபலன்கள் எவ்வாறு அமையும் என்பதை மக்கள் அறிவர். கொள்கை இல்லாத அவசர செயற்பாடுகள் நிலையானதல்ல. அக்கட்சிக்கு எதிர்காலம் கிடையாது” என்றும் ஜனாதிபதி கூறியுள்ளார்.

உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் பிரச்சாரக்கூட்டம் அநுராதபுரத்தில் நேற்று புதன்கிழமை இடம்பெற்றது. அங்கு உரையாற்றும் போதே ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.

அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது, “பாராளுமன்றத்தில் இரண்டு பகுதிகளிலும் உள்ளவர்கள் ஒருவரையொருவர் திருடர்கள் எனக் கூறி கூச்சலிட்டுக் கொள்கின்றனர். யார் திருடர் என்பதை அறிய முடியாதவாறு பெரும் சர்ச்சையும் புரளியும் சபையில் இடம்பெற்றுள்ளன.

முன்பு கொழும்பு கோட்டையில் அதிகம் ‘பிக்பொக்கட்’ இடம்பெறும், அப்போது அப்பாவிகளின் பணப்பையை திருடுபவர் ஓடுவார். பின்னால் அதன் உரிமையாளர் திருடன் திருடன் எனக் கூறிக்கொண்டு ஓடுவார். மக்கள் பார்த்துக் கொண்டிருக்க முன்னால் ஓடிக்கொண்டிருக்கும் திருடனும் ‘கள்ளன் கள்ளன்’ என முன்னால் காட்டிக் கொண்டு ஓடுவான்.

இப்போது அரசியலிலும் இவ்வாறுதான் நடக்கிறது. அதனைப் பார்க்கும் போது யார் திருடன் என்பதை நாட்டு மக்கள் தெளிவாகப் புரிந்து கொள்வர். எனது மனச்சாட்சியும் அதனை அறியும்.

இந்நிலையில் இப்போது நாட்டுக்குத் தூய்மையான பிரதேச, நகரசபைகள் அவசியமாகிறது. மக்களுக்கு அர்ப்பணிப்புடன் சேவை செய்யும் தூய்மையான பிரதிநிதிகள் அவசியம். அதேபோன்று தூய்மையான பாராளுமன்றமும் தூய்மையான ஆட்சியும் நாட்டுக்கு அவசியமாகிறது. மக்கள் ‘கை’ சின்னத்துக்கு வாக்களித்து அதனை உறுதி செய்வது அவசியமாகும். நாம் சிறந்த கிராமங்களையும் நாட்டையும் எதிர்கால சந்ததியையும் உருவாக்க மக்கள் நமது பொறுப்பை நிறைவேற்றுவது முக்கியமாகும்.

ஊழல், மோசடியற்ற சமூகம், மக்களின் வளங்களை சூறையாடாத, மக்களை நேசிக்கின்ற தலைவர்களை உருவாக்கி நாட்டை முன்னேற்றுவது முக்கியமாகும். எமது கட்சியிலுள்ள தலைவர்களோடு இணைந்து அதனை நிறைவேற்றும் பொறுப்பினை நான் ஏற்றுள்ளேன்.

இந்த நிலையில் தற்போது புதிய அரசியல் கட்சி உருவாக்கப்பட்டுள்ளது. புதிய கட்சி ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சியோடு இணைந்த கட்சியல்ல. சுதந்திரக்கட்சியானது அரசியல் வரலாற்றில் பல்வேறு சவால்கள், போராட்டங்களோடு அனுபவங்களைப் பெற்ற கட்சியாகும்.

எஸ்.டபிள்யூ.ஆர்.டி.பண்டாரநாயக்க தூய்மையான தலைவர் என்பதுடன் மனிதாபிமான, மக்களை நேசித்த தலைவர், அவர் நாட்டை மட்டுமன்றி உலகை வெற்றிகொள்வர். இலங்கையை உலகிற்கு அறிமுகப்படுத்தியவரும் அவரே. தேசிய போராட்டம் பிரித்தானிய ஆட்சியிலிருந்து நாட்டை மீட்டமை மட்டுமன்றி நாட்டை நேசிக்கும் சமூகத்தையும் கட்டயெழுப்பியவர் அவர்.

அதேபோன்று சிறந்த அரசியல் தலைவர் டட்லி சேனநாயக்க இறந்த போது அவரது வங்கிக் கணக்கில் 460 ரூபாவே சேமிப்பில் இருந்துள்ளது. ஸ்ரீமாவோ பண்டாரநாயக்க அவரது அரசாங்கத்திலேயே புதிய சட்டத்தைக் கொண்டு வந்து அவரது பெருமளவு காணிகளை மக்களுக்குப் பகிர்ந்தளித்தார். அவர்களே நாட்டை நேசிக்கும் தலைவர்கள். எனினும் இப்போது எமது அரசியல் குப்பையாகிவிட்டது. தொற்று நொய் பேல் ஆகிவிட்டது. ” என்றுள்ளார்.

0 Responses to உண்மையான திருடர்கள் யார் என்பதை மக்கள் அறிவார்கள்: மைத்திரிபால சிறிசேன

Post a Comment

Followers

தொடர்புக்கு: vannionline@gmail.com