Content feed Comments Feed
    “சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”

மன்னார் 'சதொச' வளாகத்தில் முன்னெடுக்கப்பட்டு வந்த மனித எலும்புக்கூடுகள் அகழ்வு பணிகள் எதிர்வரும் 20 ஆம் திகதி திங்கட்கிழமை வரை இடைநிறுத்தப்பட்டுள்ளது.

எனினும் அகழ்வுப் பணிகள் இடைநிறுத்தப்பட்டதற்கான காரணம் எதுவும் வெளிடப்பட்டிருக்காத சூழலில் இன்று இரவு கிளிநொச்சிக்கு திடீர் விஜயம் மேற்கொண்டுள்ள பிரதமர் ரணில் விக்கிரமசிங்க நாளை கிளிநொச்சியிலிருந்த மன்னாருக்கு செல்லவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளமை சந்தேகங்களை வலுப்படுத்தியுள்ளது.

மன்னார் மனிதப் புதைகுழியில் தற்போது வரை 52 நாட்கள் அகழ்வுப்பணிகள் இடம்பெற்றுள்ளதோடு 66 மனித எலும்புக்கூடுகள் அடையாளம் காணப்பட்டிருந்தது.

அவற்றில் 56 மனித எலும்புக்கூடுகள் வெளியில் எடுக்கப்பட்டுள்ளன.

திங்கள் முதல் வெள்ளி வரை தொடர்ச்சியாக குறித்த அகழ்வு பணிகள் இடம்பெற்று வந்ததோடு, சனி, ஞாயிறு, மற்றும் அரச விடுமுறை தினங்களில் மாத்திரம் அகழ்வு பணிகள் நிறுத்தப்பட்டிருந்தன.

இந்நிலையில் நேற்று (13) திங்கட்கிழமை முதல் எதிர்வரும் 20 ஆம் திகதி திங்கட்கிழமை வரை அகழ்வுப் பணிகள் இடைநிறுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

அகழ்வு பணிகள் எதற்காக இடை நிறுத்தப்பட்டுள்ளது என்பது தொடர்பில் காரணம் தெரிவிக்கப்படவில்லை என்பதோடு, குறித்த பகுதியில் பொலிஸார் பாதுகாப்பு கடமையில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.

மன்னார் நகர நுழைவாயிலில் அமைந்திருந்த பழைய 'லங்கா சதொச' விற்பனை நிலையம் உடைக்கப்பட்டு புதிய கட்டிடம் நிர்மாணிக்கும் பணிகள் ஆரம்பிக்கப்பட்டன.

இதன்போது, குறித்த வளாகத்திலிருந்து அகழ்வு செய்யப்பட்ட மண் தனியாருக்கு விற்பனை செய்யப்பட்டது.

குறித்த மண்ணை கொள்வனவு செய்த மன்னார் எமில் நகர் பகுதியில் உள்ள குடியிருப்பாளர் ஒருவர் தனது வீட்டிற்கு முன்னால் குறித்த மண்ணை இட்டபோது சந்தேகத்திற்கிடமான வகையில் எலும்புகள் காணப்பட்டுள்ளன. இதனையடடுத்து, அவர் மன்னார் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்திருந்தார்.

மன்னார் பொலிஸார் அதனை மன்னார் நீதிமன்றத்தின் கவனத்திற்கு கொண்டு சென்றனர்.

இதனையடுத்து, அப்போது மன்னார் நீதவானாக கடமையாற்றிய ஏ.ஜீ .அலெக்ஸ்ராஜா முன்னிலையில் கடந்த மார்ச் மாதம் 27 ஆம் திகதி தொடக்கம் 03 நாட்கள், குறித்த வீட்டில் கொட்டப்பட்ட மண் பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டது.

குறித்த மண்ணை கொள்வனவு செய்த இடங்களிலும் குறித்த சோதனை நடவடிக்கை இடம்பெற்றது. இதனைத்தொடர்ந்து சந்தேகத்திற் கிடமான எலும்புகள் தொடர்ச்சியாக மீட்கப்பட்டது.

அதனைத் தொடர்ந்து, 'லங்கா சதொச' விற்பனை நிலையத்தின் கட்டுமானப்பணிகள் முழுமையாக நிறுத்தப்பட்டு மனித எலும்புக்கூடுகள் அகழ்வு பணிகள் தொடர்ச்சியாக இடம்பெற்று வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

0 Responses to மனிதப் புதைகுழி அகழ்வு இடைநிறுத்தமும் ரணிலின் திடீர் மன்னார் விஜயமும்..

Post a Comment

Followers

தொடர்புக்கு: vannionline@gmail.com