Content feed Comments Feed
    “சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”

ஆயுதப் போராட்டம் முற்றுப் பெற்றிருந்தாலும் முழுமையான அமைதியும், சமாதானமும் மக்களுக்கு கிடைக்கவில்லை என்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவரும் எதிர்க்கட்சித் தலைவருமான இரா.சம்பந்தன் தெரிவித்துள்ளார்.

கொழும்பில் நேற்று சனிக்கிழமை எதிர்க்கட்சித் தலைவருக்கும், இலங்கை வந்துள்ள பொதுநலவாய நாடுகளின் செயலாளர் நாயகம் பட்ரிஸியாஸ் காட்லாண்ட்க்கும் இடையில் சந்திப்பொன்று இடம்பெற்றது. அதன்போதே, இரா.சம்பந்தன் மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.

அவர் மேலும் கூறியுள்ளதாவது, “புதிய அரசாங்கம் பதவிக்கு வந்ததும் மக்கள் குறிப்பாக சிறுபான்மை மக்கள் மத்தியில் பாரிய எதிர்பார்ப்புக்கள் காணப்பட்டன. அரசாங்கம் சர்வதேச மட்டத்திலும் நாட்டு மக்களுக்கும் கொடுத்த வாக்குறுதிகளை நிறைவேற்றும் எனஅவர்கள் எதிர்பார்த்தார்கள்.

பிராந்தியங்களுக்கு அதிக அதிகாரங்களை வழங்கும் வகையில் அரசாங்க கட்டமைப்பில் மாற்றங்களை ஏற்படுத்தும் ஒரு புதிய அரசியலமைப்பு, உண்மை மற்றும் நீதியை நிலைநாட்டுதல், நஷ்டஈடு, காணாமல் ஆக்கப்பட்டோர் தொடர்பிலான விசாரணைகள், படையினர் கைவசமுள்ள பொது மக்களின் காணி விடுவிப்பு, மிக கடுமையான பயங்கரவாத தடுப்பு சட்டத்தின் கீழ் தடுத்து வைக்கப்பட்டுள்ளோரின் விடுதலை, போன்றன அவ்வாறான வாக்குறுதிகளில் சிலவாகும். எனினும் இவை தொடர்பில் அரசாங்கம் எடுத்துள்ள நடவடிக்கைகள் திருப்திகரமாக இல்லை” என்றுள்ளார்.

அத்தோடு, புதிய அரசியலமைப்பினை உருவாக்குவதிலும் இத்தகைய ஒருநிலை உள்ளதனை வலியுறுத்திய இரா.சம்பந்தன், “புதிய அரசியலமைப்பினை உருவாக்கும் பிரேரணையானது பாராளுமன்றில் ஏகமனதாக நிறைவேற்றப்பட்டது. ஆனால் ஒரு சில அரசியல் காரணங்களின் நிமித்தம் இதனை முன்னெடுத்து செல்வதில் அரசாங்கத் தரப்பில் தாமதங்கள் காணப்படுகின்றது.

இந்த நாடு பாரிய யுத்தம் ஒன்றிற்கு முகம்கொடுத்தமைக்கு காரணங்கள் உள்ளன. ஒருவர் உறுதியாக இல்லாதவிடத்து இப்பிரச்சினையை கையாளமுடியாது. கடும்போக்காளர்களின் நடவடிக்கைகளுக்கு அஞ்சி இவற்றினை ஒருவர் கைவிட முடியாது. அரசாங்கமானது உறுதியாக நின்று நாட்டினை சரியான பாதையில் நடத்த வேண்டும். புதிய அரசியலமைப்பின் உருவாக்கமானது நாட்டினை முன்னேற்றப்பாதையில் இட்டுச் செல்லும் மிகப்பாரிய ஒரு கருமமாகும்.” என்றுள்ளார்.

0 Responses to ஆயுதப் போராட்டம் முடிவுற்ற போதும் அமைதியும், சமாதானமும் கிடைக்கவில்லை: சம்பந்தன்

Post a Comment

Followers

தொடர்புக்கு: vannionline@gmail.com