Content feed Comments Feed
    “சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”

“தமிழ் மக்களாகிய எம்மை அடக்கி ஆள வேண்டும் என்று இன்று எண்ணுகின்ற சிங்களப் பெரும்பான்மைச் சமூகத்தினர், மிக விரைவில் எம்மையும் தமது சகோதரர்களாக அணைத்துக் கொண்டு, வெளிநாட்டுச் சக்திகளிடமிருந்து இலங்கையையும், அதன் உள்ளக வளங்களையும் பாதுகாப்பதற்குச் சேர்ந்து போராட வேண்டிய ஒரு சூழ்நிலை ஏற்படப்போகின்றது என்பதை உணர்கின்றேன்.”என்று வடக்கு மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார்.

“வடக்குப் பகுதியில் மட்டுமன்றி, இலங்கையின் முழுப்பகுதிகளிலும் வெளிநாட்டு உள்நுழைவுகளும் அவற்றின் மேலாதிக்கங்களும் இன்று உணரப்பட்டு வருகின்றன. எமது பகுதிகளில் காணப்படுகின்ற கூடிய வருமானங்களை ஈட்டக்கூடிய இயற்கை வளம் மிக்க பகுதிகள், சுற்றுலாத்தளங்கள், இயற்கைத் துறைமுகங்கள், கடல்வளம், நீர்வளம், நிலவளம் என அனைத்தையும் தமதாக்கிக்கொள்வதற்கான முயற்சிகள் மேற்கொள்ளப்படுகின்றன”என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

முல்லைத்தீவு பால் பதனிடும் தொழிற்சாலையின் திறப்புவிழா, நேற்று ஞாயிறுக்கிழமை நடைபெற்றது. இதில், கலந்துகொண்டு உரையாற்றும் போதே முதலமைச்சர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.

அவர் மேலும் கூறியுள்ளதாவது, “இலங்கையின் வடக்குப் பகுதியில் இடம்பெற்ற நீண்டகால யுத்தத்தின் இறுதி நாள்களில் மிகப் பெரிய அழிவுகளைச் சந்தித்த பிரதேசமாக, இந்த முல்லைத்தீவுப் பிரதேசம் அடையாளம் காணப்பட்டுள்ளது.

பல பகுதிகளில் இருந்தும் இப்பகுதிக்கு வந்து சேர்ந்த மக்களை ஒரு குறுகிய வட்டத்துக்குள் வலிந்து உள்ளே தள்ளி கொத்துக் கொத்தாக குண்டுகளை வீசியும், இடி முழக்கம் போன்ற சத்தத்துடன் விமானக் குண்டுகளை வீசியும் மற்றும் எறிகணைத் தாக்குதல், துப்பாக்கிச் சன்னப் பிரயோகங்கள் என, பல முனைத்தாக்குதல்களினூடாக சுமார் ஒன்றரை இலட்சத்துக்கும் மேலான மக்கள் ஒரே நாளில் கொன்றொழிக்கப்பட்டு, இரத்தம் தோய்ந்த பூமியாக இந்த முல்லைத்தீவுப் பகுதி மாற்றப்பட்டது.

அந்த அதிர்ச்சியிலிருந்து மீள முடியாத மக்கள் பலர் இன்றும் நடைபிணங்களாக எமது கண் முன்னே உலா வருவது, எமக்கு இழைக்கப்பட்ட அநீதிகளின் உச்ச வரம்புச் செயல்களுள் ஒன்றாகக் கொள்ளப்படலாம். போரின் வடுக்களை இன்றும் சுமந்து சென்று கொண்டிருப்பவர்கள் பலர். இந்தளவு துன்பங்களையும் தாங்கி, எஞ்சியிருக்கும் எம்மக்களுக்கு ஏதாவது வகையில் உதவ வேண்டுமென, மாகாண சபையும், புலம்பெயர்ந்த அமைப்புகளும், பரோபாகாரிகளும், பணம் படைத்தவர்களும் தனியாகவும் கூட்டு முயற்சியாகவும் பல அபிவிருத்தித் திட்டப் பணிகளை இப்பகுதிகளில் மேற்கொண்டுவருவது, மனதுக்குச் சற்று இதமளிப்பதாக இருக்கின்றது.

வடக்குப் பகுதியைப் பொறுத்த வரையில், எமது பெரும்பான்மை உற்பத்திகள், மூலப் பொருட்களாகவோ அல்லது ஆரம்ப நிலையிலோ எமது பிரதேசங்களுக்கு வெளியே தென் பகுதிக்கோ அல்லது வெளிநாடுகளுக்கோ எடுத்துச் செல்லப்பட்டு, அவற்றின் பயன்பாட்டுப் பெறுமதிகள் விருத்தி செய்யப்பட்டு, மிகக் கூடிய விலையில் மீளவும் எமக்கு விற்பனை செய்யப்படுவது, பல சந்தர்ப்பங்களில் உணரப்பட்டுள்ளது. சில சமயங்களில் இங்கு கொள்வனவு செய்யும் உற்பத்திப் பொருட்கள் பல நூறு மடங்கு இலாபத்தில் அரசாங்கத்தாலோ தெற்கத்தியவர்களாலோ, சர்வதேசக் கம்பனிகளாலோ விற்பனை செய்யப்படுகின்றன.

முதலீட்டைச் சொந்த மண்ணில் செய்யும் போது, நிலத்துடனும் மக்களுடனும் பிரதேசத்தினுடனும் உணர்வு பூர்வமாக இணைந்தே செய்வார்கள். இவ்வாறான முதலீடுகள் தான் எமக்கு வேண்டும். வெளியிலிருந்து வருபவர்களுக்கு எமது மண்மேல் மதிப்பும் மாண்பும் உணர்வும் இருக்காது. எனவேதான், எமது உள்நாட்டு மக்களும் புலம்பெயர் மக்களும்தான் வடமாகாணத்தில் முதலீடுகளை ஏற்படுத்த வேண்டும் என்று விரும்புகின்றேன்.

தெற்கில், 15,000 ஏக்கர் காணி பிறிதொரு நாட்டுக்குத் தாரைவார்த்துக் கொடுத்துள்ளமை உங்கள் அனைவருக்கும் தெரியும். அதனால் தான் நான், இப்போதிருந்தே எமது நிலங்கள் பாதுகாக்கப்படல் வேண்டும், எமது விவசாய முயற்சிகள் தடைகளின்றி மேற்கொள்ளப்படல் வேண்டும், கடல் வளங்கள் ஏனையவர்களின் சுரண்டுகைகளுக்கு உட்படாது பாதுகாக்கப்படல் வேண்டும் என்று கூறுகின்றேன்.

இன்றைய இளைய சமுதாயத்தைக் குறுக்கு வழிகளில் சென்று, தீய பழக்கங்களைப் பழகிக் கொள்ளவும் கொலை, களவு, பாலியல் சேஷ்டைகள், மதுபாவனை, கூரிய ஆயுதங்களுடனான அடாவடித்தனங்கள் போன்றவற்றைப் புரியவும் தூண்டுகின்ற தீய சக்திகளிடமிருந்து எமது இளைய சமுதாயம் பாதுகாக்கப்பட வேண்டும்.” என்றுள்ளார்.

0 Responses to சிங்கள மக்கள் தமிழ் மக்களையும் இணைத்துக் கொண்டு போராட வேண்டிய சூழல் ஏற்படும்: சி.வி.விக்னேஸ்வரன்

Post a Comment

Followers

தொடர்புக்கு: vannionline@gmail.com