Content feed Comments Feed
    “சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”


நோர்வேயின் தெற்குப் பகுதியில் மரப்பாலம் இடிந்து விழுந்தததில் அப்பாலத்தில் பயணித்த இருவர் ஆற்றில் விழுந்த நிலையில் இருவரும் உயிருடன் மீட்கப்பட்பட்டனர்.

ஓயர் (Øyer) நகரத்தில் இந்த விபத்து இன்று திங்கட்கிழமை காலை 7.30 மணியவில் நடந்தது.

மரப்பாலத்தின் ஊடாகப் பயணித்த மழுந்து ஒன்றும் பாரவூர்த்தியும் ஆற்றில் விழுந்தன. மகிழுந்து ஆற்றில் மூழ்கியது. பாரவூர்தி செங்குத்தாக விழுந்து கிடந்தது.

இரு வாகனங்களிலிருந்தும் ஓட்டுநர்கள் உயிருடன் மீட்கப்பட்டனர் என காவல்துறையினர் அறிக்கையில் தெரிவித்தனர்.

ஏறக்குறைய 150 மீட்டர் நீளமுள்ள பாலம் குட்பிரண்ட்ஸ்டல்ஸ்லாகன் ஆற்றின் மேற்குக் கரையையும் ட்ரெட்டன் கிராமத்தையும் இணைக்கிறது. இது 2012 இல் திறக்கப்பட்டது, சரிவுக்கான காரணம் உடனடியாகத் தெரியவில்லை.

நோர்வே ஆட்டோமொபைல் ஃபெடரேஷன், பாலம் 2021 இல் சரிபார்க்கப்பட்டதாகக் கூறியது. தற்போது அத்தகைய பாலங்களின் பாதுகாப்பு குறித்த கவலைகள் எழுப்பப்படுகிறது.


 சீனாவின் பெரு முதலீடுகளுடன் கொழும்புக் கடலில் முளைத்துள்ள கொழும்பு துறைமுக நகருக்கான அங்கீகாரம் இலங்கைப் பாராளுமன்றத்தினால் வழங்கப்பட்டுவிட்டது.

கொரோனா பெருந்தொற்றில் நாட்டு மக்கள் அல்லாடிக் கொண்டிருக்கின்ற நிலையில், பாராளுமன்றம் கூட்டப்பட்டு துறைமுக நகருக்கான ஆணைக்குழு சட்டமூலம் நிறைவேற்றப்பட்டது. இதன்மூலம் கிட்டத்தட்ட ஒரு தனிநாட்டுக்கு அண்மித்த அதிகாரங்களை துறைமுக நகர் கொண்டிருக்கும். கொழும்பு துறைமுக நகருக்கான ஆணைக்குழு ஒன்றை இலங்கை ஆட்சிக் கட்டமைப்பு பேண முடியும் என்கிற போதிலும், அதனால் குறிப்பிட்டுச் சொல்லக்கூடிய தலையீடுகள் எதனையும் துறைமுக நகருக்குள் செலுத்த முடியாது.

தெற்காசியாவிலேயே மிக முக்கிய துறைமுகமான கொழும்புத் துறைமுகத்தோடு இணைந்த கடல் பகுதிக்குள் துறைமுக நகர் அமைக்கப்பட்டிருக்கின்றது. ஜனாதிபதி செயலகம், பிரதமரின் வதிவிடம் உள்ளிட்ட இலங்கை ஆட்சிக் கட்டமைப்பின் முக்கிய ஸ்தலங்கள் எல்லாமும் துறைமுக நகருக்கு சில கிலோ மீற்றர் தூரங்களுக்குள் வருகின்றன. அதிலும் குறிப்பாக காலி முகத்திடலுக்கு முன்னாலுள்ள நிலப்பகுதி உள்ளிட்ட கொழும்பின் மையப்பகுதிகளின் முக்கிய இடங்களையெல்லாம் சீனா, 99 வருட கால குத்தகைக்கு பெற்று வருகின்றது. நாட்டின் ஆட்சி, நிர்வாகக் கட்டமைப்பின் மையப்பகுதிக்குள்ளேயே நிலப்பகுதிகள், இவ்வளவு நீண்ட காலத்துக்கு இன்னொரு நாட்டினால் குத்தகைக்கு பெறப்படுவது, அதாவது ஆட்சி செலுத்தப்படுவது என்பது மிக அச்சுறுத்தலானது.

சீனா போன்றதொரு நாட்டோடு மேற்கொள்ளப்படும் ஒப்பந்தம் அவ்வளவு இலகுவாக மீளப்பெற முடியாதது. ஏனெனில், பாரிய கடன்களை இலங்கைக்கு வழங்கி, அந்தப் பொறியில் வீழ்த்தியே சீனா நிலங்களைக் கொள்வனவு செய்து வருகின்றது. ஏற்கனவே, அம்பாந்தோட்டை துறைமுகம் சீனாவிடம் வழங்கப்பட்டுவிட்டது.

இந்து – பசுபிக் சமுத்திர கப்பல் வழித்தடத்தில் கொழும்புத் துறைமுகமும், அண்மையில் அமைக்கப்பட்ட அம்பாந்தோட்டைத் துறைமுகமும் மிக முக்கியமானவை. இந்து சமுத்திரத்தில் இந்தியாவின் ஆளுகைகளை இல்லாதொழித்து தன்னுடைய கொடியை நாட்டுவதற்கான முயற்சிகளின் போக்கில் சீனா ஏற்கனவே மாலைதீவில் பெரு முதலீடுகளைச் செய்து தன்னுடைய கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவந்துவிட்டது. அப்படியாதொரு நிலையை இலங்கையிலும் பிரயோகித்து வெற்றி கண்டுவிட்டது. இதன்மூலம்,

இந்து – பசுபிக் சமுத்திர கப்பல் வழித்தடம் என்பது கிட்டத்தட்ட சீனாவின் கைகளுக்குள் சென்றுவிட்டது. ஏனெனில், ஆபிரிக்காவிலும் பெரும்பான்மையான நாடுகள் சீனாவின் கடன் பொறிக்குள் இருக்கின்றன. அந்த நாடுகளின் துறைமுக கட்டமைப்புத் தொடங்கி அனைத்துக் விடயங்களிலும் சீனாவின் தலையீடு என்பது சொல்லிக் கொள்ள முடியாதளவுக்கு இருக்கின்றது.

சர்வதேச ரீதியில் கப்பல் போக்குவரத்து துறையில் சிங்கப்பூர் பிரதான இடத்தில் இருக்கின்றது. சிங்கப்பூரின் துறைமுகக் கட்டமைப்பு உயர்தரத்தில் பேணப்படுவதே அதன் காரணமாகும். தென் கிழக்கு ஆசியாவில் சிங்கப்பூர் செலுத்திக் கொண்டிருக்கும் வகிபாகத்தை கொழும்புத் துறைமுகத்தின் பகுதிகளை தன்னுடைய ஆளுகைக்குள் கொண்டு வருவதன் மூலம் பெற முடியும் என்பது சீனாவின் நிலைப்பாடு. அதன் முக்கிய கட்டங்களை சீனா எப்போதே தாண்டிவிட்டது. அந்தப் பின்னணியில்தான், கொழும்புத் துறைமுக நகரை அது அமைக்க ஆரம்பித்தது. சிங்கப்பூரை ஒத்த வர்த்தக மையப்புள்ளியொன்றை இலங்கையில் துறைமுக நகரின் மூலம் சீனா திறக்கின்றது. அத்தோடு, துறைமுக நகரின் மூலம் தென் இந்தியாவில் முன்னெடுக்கப்படும் விடயங்களை இலகுவாக கண்காணிக்கும் நிலையங்களையும் சீனா வலுப்படுத்திக் கொண்டிருக்கின்றது.

சீனாவின் பொருளாதார – சந்தைக் கட்டமைப்பிலேயே உலக நாடுகள் பெரும்பாலும் இன்றைக்கு தங்கியிருக்கின்றன. அமெரிக்கா முதல் ஐரோப்பிய நாடுகள் பூராவும் சீனா தன்னுடைய முதலீடுகளினால் நிறைக்கின்றது. அப்படியான நிலையில், இலங்கை போன்றதொரு நாட்டினை சீனா எப்படிக் கையாளும் என்பது வெள்ளிடை மலை.

தெற்காசியாவின் பெரிய அண்ணனாக இதுவரை காலமும் இந்தியா தன்னை முன்னிறுத்தி வந்திருக்கின்றது. இந்தியாவின் வெளிவிவகாரக் கொள்ளை அதன் போக்கில் இன்னமும் நீடிக்கவும் செய்கின்றது. ஆனால், சீனாவோடு போட்டி போட்டுக் கொண்டு ஏனைய நாடுகளைக் கையாளும் அளவுக்கான நிதி வழங்கல் என்பது இந்தியாவிடம் இல்லை. அதனை ஒரு உத்தியாக இந்திய வெளிவிவகார கொள்கை இன்னமும் உள்வாங்கவும் இல்லை. இலங்கையில் சீனா நூறு ரூபாய்களை முதலிட்டல், இந்தியா ஒரு ரூபாயை முதலிடுகின்றது. இதுதான், இரண்டு நாடுகளும் இலங்கையில் செலுத்தும் தாக்கத்துக்கான அண்மைய உதாரணம்.

சீனாவின் வெளிவிவகாரக் கொள்கை என்பது கடன்கள், கொடைகள், முதலீடுகளை பிரதானப்படுத்தியது. அதன்மூலமே பிராந்திய – சர்வதேச உறவுகளைப் பேணுகின்றது. பாரம்பரிய உறவு, நல்லெண்ணம், பிராந்தியம் என்பதெல்லாம் இன்றைக்கு காலம் கடந்த வெளிவிவகார தொடர்பாடலாக மாறிவிட்ட பின்னணியில், பணம் என்பதே முதன்மை பெற்றிருக்கின்றது. அந்தக் கட்டத்தில், இந்தியாவினால் சீனாவோடு போட்டிபோட முடியவில்லை. அம்பாந்தோடைத் துறைமுக கடன் சுமை இலங்கையை அழுத்திய போது, அதனை இந்தியாவிடம் வழங்கவே முன்னைய ஆட்சியாளர்கள் விரும்பினார்கள். ஆனால், அதனைப் பெற்றுக்கொள்ள இந்தியா தயக்கம் காட்டியது. ஆனால், சீனா சில பேச்சுவார்த்தைகளிலேயே அம்பாந்தோட்டையைப் பெற்றுக் கொண்டது. இந்த நிலை, இனி திருகோணமலை துறைமுகம், காங்கேசங்துறை துறைமுகம் என்று விரிந்து இலங்கையின் வடக்கு – கிழக்கிலும் சீனாவின் காலுன்றலுக்கு வழி வகுக்கும். அப்போது, சீனாவின் கண்காணிப்புக் கரங்கள் தென் இந்தியாவை இன்னும் நெருக்கும்.

கொழும்புத் துறைமுக நகர் திட்டம் பத்து ஆண்டுகளுக்கு முன்னரேயே முடிவு செய்யப்பட்டுவிட்டது. அப்போதெல்லாம் அமைதியாக இருந்துவிட்டு, கடலுக்குள் மணலை நிரம்பி, கட்டுமானங்களை சீனா பாரியளவில் முன்னெடுக்கத் தொடங்கியதன் பின்னர்தான் இந்தியா அது குறித்து கரிசனை கொள்ளத் தொடங்கியது. அதிலும் இந்திய ஊடகங்கள், துறைமுக நகருக்கான அங்கீகாரம் சீனாவிடம் வழங்கப்பட்டுவிட்ட பின்னரே அது பற்றி பேசின. இந்தியாவுக்கான அச்சுறுத்தல் என்று கதறின. அது காலங்கடந்துவிட்ட ஞானம். இனி அதனால் எந்தப் பயனும் இல்லை.

இந்தியாவின் முன்னாள் பிரதமர் இந்திராகாந்தியின் ஆட்சிக்காலத்தில், இலங்கைத் தமிழ் மக்கள் மீது இலங்கை அரசின் அச்சுறுத்தல் ஏற்பட்ட போது, இந்திய விமானங்கள் இலங்கை வான் பரப்பில் பறந்து உணவுப் பொட்டலங்களை வீசின. அந்த உணவுப் பொதிகள் தமிழ்மக்களின் பசி தீர்த்தன என்றில்லை. ஆனால் தமக்கான ஆதரவுச் சமிக்ஞையாக நம்பினர். அதில் ஒரளவு உண்மையும் இருந்தது. இந்தியா அந்த நடவடிக்கைக்கு வைத்த பெயர் "ஒப்ரேசன் பூமாலை". இப்போது சீனா விரித்திருக்கும் "முத்துமாலை" திட்டத்தில் இலங்கையின் கடல் பரப்பு கையகப்படுத்தப்பட்டுவிட்டதான் காட்சி படிவம்தான் கொழும்பு துறைமுக நகர்.

இது இலங்கைத் தமிழ்மக்கள் உள்ளிட்ட மக்களுக்கு எவ்விதமான சாதக பாதங்களைத் தரலாம் என்பது குறித்தான பார்வையினை பிறிதொரு கட்டுரையில் விரிவாகப் பார்க்கலாம்.

 

கொழும்புத் துறைமுக நகர ஆணைக்குழுச் சட்டம் கடந்த வாரம் நடைமுறைக்கு வந்தது. தெற்காசியாவின் பிரதான துறைமுகங்களில் ஒன்றான கொழும்புத் துறைமுகத்தோடு இணைந்த கடற்பகுதிக்குள் மணலை நிரப்பி புதிய துறைமுக நகர் உருவாக்கப்பட்டிருக்கின்றது. கொழும்பு மாவட்டத்தின் ஒரு பகுதியாக துறைமுக நகர் கடந்த நல்லாட்சிக் காலத்தில் இணைக்கப்பட்டாலும், அதன் ஆட்சியுரிமை என்பது துறைமுக நகர ஆணைக்குழு சட்டத்தின் ஊடாக சீனாவிடம் வழங்கப்பட்டிருக்கின்றது. 

நாட்டின் இறைமை, ஒருமைப்பாடு பற்றி தென் இலங்கையில் கடந்த காலங்களில் பேசிக் கொண்டிருந்த தரப்புக்கள் எல்லாமும் துறைமுக நகர் விடயத்தில் கிட்டத்தட்ட பேசாமடைந்தைகளாக மாறிவிட்டன. இலங்கை, பௌத்த சிங்களவர்களுக்கானது என்று மதவாத பேரினவாத சிந்தனைகளை கடந்த காலங்களில் கொண்டு சுமந்தவர்கள் எல்லோரும், கொழும்பு துறைமுக நகர் விடயத்தில் மூச்சைக்கூட விடவில்லை. தமிழ் மக்களின் சமஷ்டிக் கோரிக்கைகளைக்கூட பிரிவினைவாதமாக முன்னிறுத்தி அயோக்கியத்தனம் புரிந்தவர்கள், இன்றைக்கு தனி நாடு ஒன்றுக்கான அதிகாரத்தை துறைமுக நகருக்கு வழங்கும் போது வாய்மூடி மௌனிகளாகிவிட்டனர். அவர்களின் வாய்களை எத்தனை மில்லியன் ‘யுவான்கள்’ நிறைந்தன என்பதுதான் இப்போதைய கேள்வி.

பிரித்தானியர்களின் ஆட்சிக் காலத்தில் கொழும்புத் துறைமுகம் மிகவும் திட்டமிட்ட முறையில் தெற்காசியவின் முதன்மை துறைமுகமாக உருவாக்கப்பட்டது. பம்பாய், கல்கத்தா துறைமுகங்கள் போல, கொழும்புத் துறைமுகத்தின் உட்புற – வெளிப்புற கட்டமைப்புக்களும் முதலிடத்தில் பேணப்பட்டன. இன்றைக்கும் கொழும்புத் துறைமுகத்தின் கட்டமைப்பு என்பது பிரித்தானியர்களின் ஆட்சிக் காலத்திலிருந்து பெரியளவில் மாறிவிடவில்லை. கொழும்புத் துறைமுகம் பம்பாய், கல்கத்தா துறைமுகங்களை விட அதன் அமைவிடத்தினால் எப்போதுமே முதன்மையாக விளங்கி வந்திருக்கின்றது. அதாவது, உலகம் பூராவும் பயணிக்கும் கப்பல்களில், மூன்றில் ஒரு மடங்கு கப்பல்கள் பயணிக்கும் வழித்தடத்தில் கொழும்புத் துறைமுகம் அமைந்திருக்கின்றது. சரக்குகளை ஏற்றி இறக்குதல் மாத்திரமின்றி, கப்பல்களுக்கான எரிபொருள் நிரம்புதல், உணவுக் கொள்வனவு தொடங்கி இன்னோரென்ன தேவைகளுக்காகவும் ஒரு தரிப்பிடமாக கொழும்பு துறைமுகம் விளங்கி வருகின்றது.

சிங்கப்பூர் தன்னுடைய பொருளாதாரத்தை பல வழிகளில் பெருக்கிக் கொண்டது. ஆனால், அதில் துறைமுகத்தைக் கொண்டு உருவாக்கிய பரிவர்த்தனை என்பது மிக முக்கியமானது. கடந்த ஐம்பது ஆண்டுகளில் சிங்கப்பூரின் வளர்ச்சி என்பது அதன் துறைமுகக் கட்டமைப்பில் பெருமளவு தங்கியிருக்கின்றது. பசிபிக் –இந்து சமுத்திர கப்பல் வழித்தடங்களில் கொழும்புத் துறைமுகத்தை மீறி சிங்கப்பூர் துறைமுகம் தன்னை பல மடங்கு வளர்த்துக் கொண்டது. ஆனாலும் கூட இன்றைக்கும் இந்தியத் துறைமுகங்களை விட வெளிநாட்டுக் கப்பல்களின் போக்குவரத்து என்பது கொழும்புத் துறைமுகத்தோடே பேணப்பட்டு வருகின்றது. அப்படியான நிலையில், கொழும்புத் துறைமுகத்தின் தேவை என்பது பிராந்திய வல்லரசுகளுக்கு அவசியப்படுவது என்பது இயல்பானதுதான். அதாவது, நலிந்தவனிடம் இருக்கும் அனைத்துமே வலியவனுக்குரியது என்பது அதர்மத்தின் விதி. அந்த விதியில் நின்றுதான் சீனாவும் இந்தியாவும் மல்லுக்கட்டின. கொழும்புத் துறைமுகத்தினை பகுதி பகுதியாக கூறுபோடும் வேலைகளைச் செய்தன. அதில், சீனா கிட்டத்தட்ட முழுமையான வெற்றியைப் பெற்றுவிட்டது.

கொழும்புத் துறைமுகத்தின் கிழக்கு முனையத்தை இந்தியா கோரிய போது, கடந்த நல்லாட்சி அரசாங்கம் அதற்கு ஒத்துழைத்தது. ஆனால், அதற்கு எதிராக தென் இலங்கையின் பௌத்த சிங்கள அடிப்படைவாதத் தரப்புக்கள் தொடங்கி பல்வேறு தரப்புக்களும் பெரும் போராட்டங்களை முன்னெடுத்தன. கிழக்கு முனையத்தை இந்தியாவுக்கு வழங்குவதில்லை என்ற முடிவுக்கு அரசாங்கம் வந்தது. வேணுமென்றால் மேற்கு முனையத்தை இந்தியா பெற்றுக் கொள்ளலாம் என்றவாறாக முன்வைப்புச் செய்யப்பட்டது. கிழக்கு முனையம் விவகாரத்தில் பெரும் போராட்டங்களை முன்னெடுத்த தரப்புக்களின் பின்னால், சீனா இருந்தமைக்கான சந்தேகம் வெளியிடப்பட்டது. ஏனெனில், அந்தச் சக்திகள் கொழும்பு துறைமுக நகர் விடயத்தில் அமைதியாவிட்டன.

கொழும்புத் துறைமுக நகருக்கு வழங்கப்பட்டிருக்கின்ற அதிகாரங்கள், கிட்டத்தட்ட தனி நாட்டுக்கு ஒப்பானவை. அப்படியான நிலையில், அங்கு ஆட்சி செலுத்தும் தரப்புக்கள் தங்களது நலன்களுக்காக அனைத்து வகை ஏற்பாடுகளையும் அங்கு செய்யும். அத்தோடு, தன்னைச் சுற்றியுள்ள கட்டமைப்புக்களை உடைப்பது முதல் உளவு பார்ப்பது வரையில் செய்யும். இலங்கையின் ஆட்சி நிர்வாகக் கட்டமைப்பு என்பது கொழும்புக்குள்ளேயே சுருக்கப்பட்டிருக்கின்ற நிலையில், அதனை கண்காணிப்பது என்பது துறைமுக நகரின் ஆட்சித் தரப்புக்களுக்கு இலகுவானது. அத்தோடு, கொழும்புத் துறைமுகத்தின் இயக்கத்தை முழுவதுமாக கண்காணித்து எதிர்காலத்தில் கட்டுப்படுத்தும் தளத்துக்கும் தன்னை முன்னிறுத்தும்.

சீனாவின் கடன் பொறிக்குள் இலங்கை முழுவதுமாக விழுந்துவிட்டது. அதிலிருந்து மீள்வது என்பது அவ்வளவு இலகுவாதனல்ல. ஏனெனில், வறிய ஆபிரிக்க நாடுகள் பலவற்றுக்கு சீனா வழங்கிய கடன்கள் மீளப்பெறும் நோக்கோடு வழங்கப்பட்டவை அல்ல. மாறாக, அந்தக் கடன்களுக்காக அந்த நாடுகளின் வளங்களை சுரண்டுவதற்கான முழுமையான அனுமதியைப் பெறும் நோக்கில் வழங்கப்பட்டவை. எத்தியோப்பியா, நைஜீரியா, சம்பியா, அங்கோலா தொடங்கி பல ஆபிரிக்க நாடுகளிலும் ஆட்சிகள் மாறினாலும், சீனாவின் வளச்சுரண்டலுக்கான அனுமதியில் யாரும் தலையிடுவதில்லை. ஏனெனில், அந்த நாடுகள் சீனாவின் கடன்பொறிக்குள் முழுவதுமாக சிக்கிவிட்டவை. கேள்விகளைக் கேட்க முடியாது என்ற நிலையை சீனா அங்கு பெற்றுவிட்டது. அப்படியான நிலையையே இலங்கையிலும் சீனா இன்றைக்கு செய்து கொண்டிருக்கின்றது.

கொழும்பு துறைமுக நகருக்கான தங்கு தடையின்றிய அனுமதியைப் ஆணைக்குழு சட்டத்தினை நிறைவேற்றி பெற்றுக்கொண்டதோடு, கொழும்பின் பிரதான பகுதிகளிலுள்ள அரச நிலங்களையும் கொள்வனவு செய்யும் முனைப்போடு சீனா இயங்கிக் கொண்டிருக்கின்றது. பொலிஸ் தலைமையகம் அமைந்திருக்கின்ற கொழும்பின் மையப்பகுதி தொடங்கி, காலி முகத்திடலை அண்மித்த பல பகுதிகளையும் சீனாவுக்கு 99 வருட குத்தகைக்கு வழங்க அரசாங்கம் முயல்வாக எதிர்க்கட்சிகள் குற்றஞ்சாட்டுகின்றன. ராஜபக்ஷக்களின் முதல் ஆட்சிக் காலத்தில், காலி முகத்திடலுக்கு முன்னால் அமைந்திருந்த இராணுவத் தலைமையகம் அங்கிருந்து கொழும்பின் புற நகருக்கு மாற்றப்பட்டு, அந்தப் பகுதி சீனாவின் முக்கிய நிறுவனங்களுக்கு வழங்கப்பட்டது. இன்றைக்கு அந்தப் பகுதியில் பிரதான நட்சத்திர விடுதிகள், கடைத் தொகுதிகள் முளைத்திருக்கின்றன. அவ்வாறானதொரு நிலை, கொழும்பின் பல பகுதிகளுக்கும் எதிர்காலத்தில் நேரலாம் என்ற அச்சம் அதிகரித்திருக்கின்றது.

இப்படியாக இலங்கையை சீனா கூறுபோட்டுக் கொண்டிருக்கும் நிலையில், இந்தியா அணிலை மரத்தில் ஏறவிட்ட நாயின் நிலைக்கு வந்திருக்கின்றது. ஒரு காலத்தில் இலங்கையை பெரியண்ணன் நிலையில் இருந்து இந்தியா கையாண்டிருக்கின்றது. ஆனால், அந்த நிலை இன்று இல்லை. கொழும்பு நிலப்பகுதிகள் மாத்திரமல்ல, கொழும்பு ஆட்சிக் கட்டமைப்பும் சீனாவின் பிடிக்குள் சென்றுவிட்டது. அப்படியான நிலையில், அந்தக் கட்டமைப்புக்குள் ஆளுமை செலுத்துவது என்பது இந்தியாவினால் இனி முடியாத காரியம்.

கொழும்பை முன்னிறுத்திய சர்வதேச ஆட்டத்தில் பெரும் நிதியைக் கொண்டு சீனா வெற்றிருக்கின்றது. சீனாவின் வெற்றிக்கு தென் இலங்கையில் ஆட்சியாளர்கள் பலமாக ஒத்துழைத்திருக்கிறார்கள். அந்த ஒத்துழைப்பு என்பது நாட்டின் எதிர்காலத்தைக் குறித்த சிந்தனையோடு வழங்கப்பட்டது அல்ல. மாறாக, அவர்களின் தனிப்பட்ட குடும்ப ஆட்சி நலன்களை முன்னிறுத்தி வழங்கப்பட்டவை. அது, நாட்டை தீராத கடன்களுக்குள் சிக்க வைத்துள்ளதுடன், நாட்டு மக்களை பெரும் பொருளாதார சுமைக்குள் தள்ளியிருக்கின்றது.

 

பூகோள மறைமுக வர்த்தகப் போர், கோவிட்-19 பெரும் தொற்றின் தோற்றம் போன்ற காரணிகளால், ஏற்கனவே கடும் முறுகல் நிலையில் இருக்கும் அமெரிக்க சீன உறவில் இன்னொரு குற்றச்சாட்டும் எழுந்துள்ளது.

சீன நிறுவனங்களில் முதலீடு செய்ய அமெரிக்கா விதித்திருக்கும் தடை காரணமாக குறித்த நிறுவனங்களை அடக்க அமெரிக்கா முயற்சிப்பதாக சீனா குற்றம் சுமத்தியுள்ளது.

வர்த்தகம், தென் சீனக் கடற்பரப்பு ஆக்கிரமிப்பு, உய்குர் இன முஸ்லிம்கள் மீதான மனித உரிமை மீறல் செயற்பாடுகள், மற்றும் கொரோனா வைரஸ் பரவல் எனப் பல விவகாரங்கள் இரு நாட்டு உறவுக்கும் தடையாக உள்ளன. இந்த உறவு முன்னால் அமெரிக்க அதிபர் டிரம்பின் ஆட்சிக் காலத்தில் இன்னும் மோசமடைந்திருந்தது. அமெரிக்க தேசிய பாதுகாப்பு மற்று ம் இறையாண்மைக்கு எதிராக இருப்பதாகக் கூறி சீனாவின் பல மாபைல் செயலிகளுக்குக்குத் தடை விதிக்கப் பட்டது.

சீன இராணுவத்துடன் தொடர்புள்ளது என்ற பெயரில் 31 சீனப் பெரு நிறுவனங்களது பங்குகளுக்கு அதிபர் டிரம்ப் தடை விதித்தார். இதனால் சீனாவின் முக்கிய நிறுவனங்களது பங்குகள் கடும் சரிவடைந்தன. அண்மையில் இத்தடைப் பட்டியலை மீளாய்வு செய்த அமெரிக்க அதிபர் ஜோ பைடென் தலைமையிலான குழு இதில் மேலும் 28 சீன நிறுவனங்களைச் சேர்த்து தடையை விரிவு செய்துள்ளது.

பைடெனின் நடவடிக்கைக்கு கண்டனம் தெரிவித்துள்ள சீனா தக்க பதிலடி தரப்படும் என்றும் எச்சரிக்கை விடுத்துள்ளது. மறுபுறம் முன்னால் அமெரிக்க அதிபர் டிரம்பின் பேஸ்புக் கணக்கை 2 ஆண்டுகளுக்கு முடக்கி அந்நிறுவனம் அதிகாரப்பூர்வ அறிவிப்பை விடுத்துள்ளது. இது தனக்கு வாக்களித்த மக்களுக்கு கிடைத்த அவமரியாதை என டிரம்ப் விசனம் தெரிவித்துள்ளார்.

ஆமிக்கும் ஒரு பார்சலாம்!

பதிந்தவர்: தம்பியன்

 

வடகிழக்கில் இரவு, பகல் பாராது கொடிய கொரோனா நோயில் இருந்து நாட்டையும் நாட்டுமக்களையும் காக்கும் பணியில் ஈடுபட்டுள்ள எம் வீரமிக்க படையினருக்கு அங்கர் கொடுத்து புல்லரித்துள்ளனர் அமைச்சரொருவரது ஆதரவாளர்கள்.

இராஜாங்க அமைச்சர் அருந்திக்க பெர்ணான்டோ(பனை, தென்னை,கித்துள்,அதுசார்ந்த பண்டங்களின் உற்பத்தி ,ஏற்றுமதி )எண்ணக்கருவுக்கு அமைய அவருடைய வடமாகாண ஒருங்கிணைப்புச் செயலாளர் பாலரமணன் நெறிப்படுத்தலில்  யாழ்பாண வீதிகளில் வீதித்தடையில் கடமையில் ஈடுபட்டுள்ள படையினருக்கு முகக்கவசம்,தொற்றுநீக்கும் திரவம்,குளிர்பானங்கள்,சீற்றூண்டிகள்,தண்ணீர்ப் போத்தல்கள் என்பவை வழங்கப்பட்டுள்ளதாம்.

 

நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் The family man 2 பாகத்துக்கு எதிராக கடுமையான கண்டனத்தை தெரிவிிித்துள்ளார்.

“தமிழர்களின் தாயகத்தை மொத்தமாய் ஆக்கிரமித்து, ஆதிக்கம் செய்து, அழித்தொழித்த அரசப்பயங்கரவாதிகளான சிங்கள ஆட்சியாளர்களின் குரல் போல ஒலித்து, தமிழர்களை மிகக்கீழ்த்தரமாகக் காட்டி, போர்வெறிக் கொண்ட பயங்கரவாதிகளாவும், தீவிரவாதிகளாகவும் சித்தரிக்க முற்படும் வகையில் the family man 2 இணையத்தொடரை உருவாக்கியிருப்பது வன்மையான கண்டனத்திற்குரியது.

இந்திய வல்லாதிக்கமும், சிங்களப் பேரினவாதமும், அனைத்துலக நாடுகளும் கூட்டுச்சேர்ந்து ஒருமித்து ஈழ நிலத்தில் நடத்திய கோர இனப்படுகொலையில் 2 லட்சம் தமிழர்களைச் சாகக்கொடுத்துவிட்டு அதற்கான எந்த நீதியையும் பெற முடியா கையறு நிலையில், உலக அரங்கில் தமிழர்கள் கூக்குரலிட்டுப் போராடிக்கொண்டிருக்கையில் தமிழர்கள் பக்கமிருக்கும் நியாயத்தையோ, தமிழர்களுக்கு இழைக்கப்பட்ட பெரும் அநீதியையோ, அங்கு நடந்த உண்மைச் செய்திகளையோ, ஈழ விடுதலைப்போராட்டத்தின் பெரும் வரலாற்றையோ பதிவு செய்ய வாய்ப்பிருந்தும், அதனைச் செய்யாது தமிழர்களுக்கெதிராக நச்சுக்கருத்தோடு ஒரு படைப்பை உருவாக்கம் செய்து சிங்களர்களின் தரப்பு வாதத்திற்கு வலுசேர்க்கும் வகையிலான கருத்துருவாக்கங்களைக் கொண்டுள்ள இதுபோன்ற இணையத்தொடர்கள் முழுக்க முழுக்கத் தடைசெய்யப்பட வேண்டும். இந்நூற்றாண்டின் பாரிய இனப்படுகொலைக்கு ஆளாகிப் பெரும் காயம்பட்டு அழிவின் விளிம்பில் நிற்கும், 12 கோடி தமிழ்த்தேசிய இன மக்களின் உள்ளத்து உணர்வுகளை உரசிப்பார்ப்பதாகவும், தரம்தாழ்த்துவதாகவுமே இத்தொடர் எடுக்கப்பட்டிருக்கிறது.

ஈழப்போர் முடிவுற்று, 11 ஆண்டுகளைக் கடந்தும் இனப்படுகொலைக்கு எவ்விதப் பன்னாட்டுப் போர்க்குற்ற விசாரணையோ, பொது வாக்கெடுப்போ கிடைக்கப்பெறாத தற்காலச்சூழலில் அறப்போராட்டங்களின் வாயிலாகவும், சட்டப்போராட்டங்களின் வாயிலாகவும், ஐ.நா.வில் நடக்கும் அமர்வுகளின் வாயிலாகவும், உலக நாடுகளில் பரவி வாழும் தமிழர்களின் அணிச்சேர்க்கை மூலமாகவும் தமிழர்கள் எங்களுக்கு இழைக்கப்பட்டுள்ள கொடும் அநீதியைப் பன்னாட்டுச் சமூகத்திற்கு விளக்கி, அதற்கான நீதிகோரி நிற்கிறோம்.

முதல் பாகத்தில் இசுலாமியர்களையும், இரண்டாவது பாகத்தில் இப்போது தமிழர்களையும், மூன்றாவது பாகத்தில் வங்காளிகளையும் எனத் தொடர்ச்சியாக தேசிய இனங்கள் மீதும், இம்மண்ணின் மக்கள் மீதும் உண்மைக்கு மாறான திட்டமிட்ட அவதூறுகளைக் கட்டவிழ்த்துவிட்டு, பச்சைப்பொய்களைக் காட்சிகளாக உருவாக்கி, வரலாற்றுத் திரிபுகளைத் தொடர்ச்சியாகச் செய்து வரும், ‘தி பேமிலி மேன்’ இணையத்தொடரை முற்றாகத் தடைசெய்யவும், நிறுத்தவும் செய்ய வேண்டியது இன்றியமையாத தேவையாகும்.

இத்தகைய இணையத்தொடருக்குத் தமிழக அரசு தனது கண்டனத்தைப் பதிவுசெய்து, அதற்கு எதிர்ப்பு நிலையினை எடுத்து, தடைசெய்யக் கோரியும்கூட அதனை ஏற்காத மத்தியில் ஆளும் பாஜக அரசின் நயவஞ்சகச்செயல் அப்பட்டமான தமிழர் விரோதப்போக்காகும்.

இத்தொடரைத் தடை செய்யாவிட்டால், சட்டரீதியாகவும், சனநாயகப்பூர்வமாகவும்  களமிறங்கித் தடுத்து நிறுத்துவோமென எச்சரிக்கிறேன்” என்று  தெரிவித்துள்ளார்.

தமிழ்நாடு அரசு சார்பில் இத்தொடர் ஒளிபரப்பப்படுவது நிறுத்தப்பட வேண்டும் என்று மத்திய அரசுக்குக் கடிதம் எழுதப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.

 

வரலாற்று புகழ் மிகு நயினை ஆலயத்திற்கு நேற்று வருகை  ராஜநாகங்கள் பக்தர்களிடையே பக்தி பிரவாகத்தை தோற்றுவித்துள்ளது.

நேற்று முழுவதும் ஆலய சூழலில் காட்சி கொடுக்கும் இராஜநாகங்களை புகைப்படமெடுத்து பக்தர்கள் முகநூலில் பகிர்ந்துவருகின்றனர்.

காலையில் அன்னையின் வீதியில் பகல் காட்சி மீண்டும் அன்னை  நாகபூசணி அம்பிகை ஆலயத்தின் தீர்த்தக்கேணியில் இரவு காட்சி. எண்ணி வியக்கின்றோம் தாயே உந்தன் அற்புதங்களை என பக்தர்கள் சிலாகித்து வருகின்றனர்.

ஒரு பௌத்த குடும்பமுமே இல்லாத நயினாதீவில் பௌத்த விகாரை அமைக்கப்பட்டுள்ளதுடன் நயினாதீவை பௌத்த சிங்கள மயமாக்க இலங்கi அரசு முனைப்பு காட்டிவருகின்றது.

தேசிய வெசாக் கொண்டாட்டத்திற்கு அழைப்பு விடுக்கபட்ட நிலையில் ஜனாதிபதி கோத்தபாய முதன்முதலில் நயினாதீவு செல்ல திட்டமிட்டிருந்ததும் குறிப்பிடத்தக்கது.

 

இலங்கை அரசாங்கம் வரலாற்றில் முதல் தடவையாக மீள முடியாத வெளிநாட்டு கடன் சுமையில் சிக்கி கொண்டு இருக்கின்றது . 

இந்நிலையில் அடுத்தடுத்து எதனை விற்க கோத்தபாய அரசு முறபட்டுள்ளதென்பதை அம்பலாப்படுத்தியுள்ளார் பதிஞர் ஒருவர் 

குறிப்பாக இலங்கையின் வெளிநாட்டு கடன் மட்டும்  $ 70 billion என்கிற நிலையை எட்டி விட்டது. 

அதே போல சர்வதேச கடன் மதிப்பிட்டு நிறுவனங்கள் கடன்களை மீள செலுத்தும் ஆற்றலை இழக்கும் அபாயத்தை எதிர்கொள்ளும் நாடுகளில் ஒன்றாக இலங்கையை மதிப்பீடு செய்து இருப்பதால் மேலதிக கடன்களை பெற்றுக்கொள்ளுவதிலும் நெருக்கடிகள் ஏற்பட்டு வருகின்றன. 

இது தவிர, மத்திய வங்கி மோசடியில் இழக்கப்பட்ட $ 268 million  , Greek junk bonds முதலீடுகளில் ஏற்பட்ட  $6.6 million நட்டம், 

MIG மிகையொலி விமான கொள்வனவு ஊழல் $6 million, சீனி கொள்வனவு மோசடியால் ஏற்பட்ட இழப்பு $ 83 million,  

BMW கார் இறக்குமதி வரி மோசடி $ 84 million என வரையற்ற ஊழல் மோசடிகளால் இலங்கையின் நிதி நிலவரம் ஆபத்தான கட்டத்தை நெருங்கி இருக்கின்றது 

இதுமட்டுமில்லாது அரசியல் நோக்கங்களுடன் மேற்கொள்ளப்பட்ட அம்பாந்தோட்டை துறைமுகம் , சர்வதேச விமான நிலையம் போன்ற பாரிய முதலீடுகள் தோல்வியடைந்த நிலையில் இலங்கை அரசாங்கம் தனது வருமானத்தை விட ஆண்டு தோறும் மீள செலுத்த வேண்டிய கடன் அதிகரித்து இருக்கின்றது 

இதன் பிண்ணனியில்  Private Public Partnership (PPP) என்கிற திட்டத்தின்  கீழ்  அரச நிறுவனங்கள் , கட்டடங்கள் மற்றும் காணிகளை தனியாருக்கு விற்கும் நிலைப்பாட்டை  கோட்டாபயா ராஜபக்சே நிருவாகம் எடுத்து இருக்கின்றது .

மேற்குறித்த கொடுக்கல் வாங்கல் நடவடிக்கைகளுக்காக Selendiva Investments Limited என்கிற நிறுவனம் ஒன்றை உருவாக்கியுள்ள  கோட்டாபய ராஜபக்சே நிருவாகம் மூன்று கட்டத்தின் கீழ் கொழும்பின் பெருமளவான பிரதேசத்தை விற்கும் தீர்மானத்தை  எடுத்து இருக்கின்றது 

அந்த வகையில் Colombo Fort Heritage Square என்கிற முதல் கட்டத்தின் கீழ்,

1. இலங்கை விமானப் படை தலைமையகம்

2. கொம்பனித் தெரு பொலிஸ், கொம்பனித் தெரு பொலிஸ் விளையாட்டு மைதானம், கொம்பனித் தெரு பொலிஸ் விடுதித் தொகுதி.

3. கொழும்பு விமானப் படை முகாம்

4. கொழும்பு விமானப் படை விளையாட்டு மைதானம்   (Rifle Green Ground)

5. கொழும்பு சினமன் லேக் சைட்

6. கொழும்பு M.O.D. Cyber Operation Centre

7. இராணுவ தொலைத் தொடர்புகள் மற்றும் உபகரணங்கள் பொறியியல் ரெஜிமென்ட் தலைமையகம் ஆகிய பிரதேசங்கள் தனியார் மயப்படுத்த பட உள்ளன 

அதே போல Immovable Property Development, என்கிற இரண்டாம் கட்டத்தின் கீழ், 

1. கிரேன்ட் ஒரியன்டல் கட்டிடம்

2. கபூர் கட்டிடம்

3. யோர்க் வீதியில் அரசுக்கு சொந்தமான கட்டிடங்கள்

4. வௌிவிவகார அமைச்சு கட்டிடம்

5. தபால் திணைக்கள தலைமையகம்

6. பொலிஸ் தலைமையகம்

7. செத்தம் வீதியில் அமைந்துள்ள   FICD தலைமையக கட்டிடம் (தற்போது CHEC Port City (Pvt) Ltd என்ற சீன நிறுவனத்தின் பாவனையில் உள்ளது )

8. ஹில்டன் ஹோட்டல் மற்றும் வீடுகள்

9. ஹயாத் ஹோட்டல் மற்றும் வீடுகள்

10. வோட்டர்ஸ் எட்ஜ் ஹோட்டல் மற்றும் அதற்கு அருகில் உள்ள 200 ஏக்கர் காணி உட்பட்ட நிலப்பரப்பு தனியார் மயப்படுத்த  அமைச்சரவை தீர்மானித்து இருக்கின்றது 

அரசாங்கம் மேற்கூறிய இடங்களை  தனியார்மயப்படுத்த  தீர்மானித்து உள்ள  நிலையில்  பெருமளவான இடங்களை China Communications Construction Company (CCCC) என்கிற  சீனா நிறுவனம் வாங்குவதற்கு முன்வந்து இருக்கின்றது . 

ஆனால் இந்த நிறுவனம் அமெரிக்கா அரசாங்கத்தினால்  தடை செய்யப்பட்டு இருப்பதால்  அவர்களது துணை நிறுவனமான CHEC Port City Colombo (PVT) LTD என்ற சீன நிறுவனத்தின் ஊடாக கொடுக்கல் வாங்கல்களை செய்ய முயற்சித்து வருகின்றார்கள் 

இது தவிர , சீனா அரசின் உதவியுடன் கட்டப்பட்ட தாமரை கோபுரம  நட்டம் அடைந்துள்ள நிலையில்  மீண்டும் சீனா நிறுவனத்திடம் ஒப்படைக்க தீர்மானிக்க பட்டுள்ளது 

இந்நிலையில் கொழும்பின் பெரும்பகுதி குறிப்பாக Colombo 1 and Colombo 2 ஆகியன சீனா நிறுவனங்களின் கட்டுப்பாட்டுக்குள்  சென்றால்  இலங்கையின் அரசியலை தீர்மானிக்கும் சக்தியாக சீனா எதிர்வரும் பொதுத்தேர்தல் காலத்திற்கு முதல்  உருவாகும் 

 

கனடாவின் தலைநகரான ஒட்டாவில் தமிழீழ தாயகத்தை நேசித்த ஒரு தேசப்பற்றாளரான ஒட்டாவா சுரேஷ் என்று அழைக்கப்படும் சுரேந்திரன் தம்பிராஜா சாவடைந்துள்ளார். நேற்று முன்தினம் வெள்ளிக்கிழமை மாலை 5.30 மணியளவில் வீதியில் ஏற்பட்ட வாகன விபத்து ஒன்றுக்கு உதவுவதற்காக தனது வாகனத்திருந்து மனைவியுடன் இறங்கி உதவும் நடவடிக்கையில் ஈடுபட்டபோது விபத்துக்குள்ளாகி உயிரிழந்துள்ளார்.

5 பிள்ளைகளின் தந்தையான 52 வயதுடைய சுரேஷ் யாழ்ப்பாணம் புத்தூரைப் பிற்பிடமாகக் கொண்டவர். கனடாவில் 30 வருடங்களுக்கு மேலாக வசித்து வந்தவர்.

ஒட்டாவா மாநிலத்தில் தமிழ் மக்கள் மத்தியில் தமிழீழ விடுதலைப் போராட்ட ஆதரவு தளத்தை விதைக்கவும் தமிழ்த் தேசியத்தை கட்டியெழுப்பவும் தமிழர் ஒருங்கிணைப்புக் குழுவின் பொறுப்பாளராகச் 2009 ஆண்டு வரை தன்னை முழுமையாக அர்ப்பணித்து பணியாற்றியிருந்தவர் சுரேஷ்.

இவரின் விடுதலைச் செயற்பாடுகளை நன்கறிந்த தமிழீழ விடுதலைப் புலிகள் அவரின் விடுதலைப் பற்றை மதிக்கும் வகையில் 2004 ஆம் ஆண்டு வன்னிக்கு அழைக்கப்பட்டிருந்தார்.

வன்னிக்கு வந்த சுரேஷ் அவர்களை வெளிநாட்டிலிருந்து வருவோரை வரவேற்கும் கிளிநொச்சியில் அமைந்த நந்தவனம் வரவவேற்றது. அவர் தங்குவதற்கான சிறப்பு ஏற்பாடுகளையும் அவர்கள் செய்து கொடுக்கப்பட்டிருந்தது.

அதைத் தொடர்ந்து விசுமடு புளியடியில் அமைந்துள்ள அனைத்துலகத் தொடர்பகத்தில் பொறுப்பாளர் வீ.மணிவண்ணனுடன் (கஸ்ரோ) சந்திப்பும் விருந்தோம்பலும் நடைபெற்றன. கனடாவில் அமைப்பின் செயற்பாடுகள் குறித்து பல மணி நேர உரையாடல்கள் நடைபெற்றன.

சுரேஷ் தமிழீழத் தேசியத் தலைவர் அவர்களுக்காக 2004 ஆண்டு காலகட்டத்தில் உலகத் தரத்தில் மிக விலையுயர்ந்த கனோன் புகைப்படக் கருவியை (Canon Camera) வாங்கி வந்திருந்தார்.

தேசியத் தலைவருடனான சிறப்பு சந்திப்பும் மறுநாளே ஒழுங்கு செய்யப்பட்டது. தேசியத் தலைவர் அனைத்துலகத் தொடர்பகத்திற்கு வருகை தந்து சுரேஷை சந்திக்கிறார். ஒரிரு மணி நேர உரையாடலும் விருந்தோம்பலும் தேசியத் தலைவரால் வழங்கப்பட்டது.

சந்திப்பின் முடிவில் தேசியத் தலைவருக்காக சுரேஷ் கமெரா எடுத்து வந்த விடயத்தைக் கஸ்ரோ அவர்கள் தேசியத் தலைவரிடம் குறிப்பிட்டார். தலைவரும் அக் கமெராவை எடுத்து வரும்படி கஸ்ரோவிடம் தெரிவித்துக்கொண்டு சந்திப்பை முடித்து கொட்டகையிலிருந்து தன்னுடைய இருப்பிடம் நோக்கிச் செல்வதற்கு கதைத்துக்கொண்டு வெளியேறினார்.

அப்போது போராளி ஒருவர் கமெராவை எடுத்து வருகிறார். வரும் வழியில் தேசிய தலைவரின் பாதுகாப்புக்குப் பொறுப்பாகவும் இம்பிரான் - பாண்டியன் படையணிக்குப் பொறுப்பாகவும் இருந்த ரட்ணம் மாஸ்டர் மற்றும் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்ட (பெயர் குறிப்பிட முடியாது) போராளி ஒருவராலும் குறித்த கமெரா பாதுகாப்பு ஆய்வுக்கு உள்படுத்தப்பட்டது உறுதி செய்யப்பட்டது.

பின்னர் அக்கமெரா சுரேசின் கைகளில் போராளியால் வழங்கப்பட்டது. குறித்த கமெராவை தலைவர் அவர்களிடம் கையளித்த சுரேஷ், கமெராவின் சிறப்பு அம்சங்கள் குறித்து ஆர்வமாக சுரேசிம் தலைவர்  கேட்கவே நின்றநிலையில் உரையாடல் மீண்டும் ஒரு மணி வரை தொடர்ந்தது. கமெராவோ மிகப் பொியது, எடையும் கூடியது, லென்சுகளும் பிரமாண்டமானவை.

இயக்கத்திடமே அத்தரத்தில் கமெரா இல்லை என்பதை தேசியத் தலைவர் தன்னைச் சுற்றி நின்றவர்களிடம் குறிப்பிடுகின்றார். அதன் பிறகு அக்கமெராவை இயக்குவது குறித்த விளக்ககும் சுரேசால் செய்முறையில் செய்து காண்பிக்கப்பட்டது. தலைவரும் அதை ஆர்வமாகக் கேட்டறிந்தார்.

அதைத் தொடர்ந்து தேசியத் தலைவர் ''என்னை எடுங்கள்'' உங்கள் கமெராவின் தரத்தைப் பார்ப்போம் என்று கூறவே சுரேஷ் மிக உச்சாகத்துடன் தலைவரை மாமரத்தின் கீழ் நிறுத்தி படத்தினை எடுத்தார். ஒரு கிளிக்  படபடபடபட என சந்தம் சுற்றியிருந்தவர்களை வியக்க வைத்தது. சுரேசும் கிடைத்த சந்தர்ப்பத்தை பயன்படுத்தி மிக நேர்த்தியாக படங்களை எடுத்தார்.

பின்னர் எடுத்த படங்களை தலைவரிடம் கமெரா திரையில் சுரேஷ் காண்பிக்கிறார். படங்கள் மிகத்தெளிவாகவும் மிகத் துல்லியமாகவும் இருந்ததைப் பார்த்து தலைவரும் வியந்தார். வியந்தது மட்டுமல்லாமல் சுரேசையும் பாராட்டினார்.

தேசியத் தலைவரை சுரேஸ் எடுத்த படம் அன்றை ஆண்டே அனைத்துலகத் தொடர்பகத்தின் வெளியீட்டுப் பிரிவால் புலம் பெயர் நாடுகளில் வெளிவரும் தமிழ் தாய் நாட்காட்டியில் பிரசுரிக்கப்பட்டது மட்டும் அல்லாம் இன்று வரை அப்படம் வெளியீடுகளிலும் பிற தேவைகளுக்கும் பயன்படுத்தப்பட்டு வருகின்றது.

தேசியத் தலைவரும் சுரேசும் இணைந்து நிற்க  அக்கமெராவால் போராளி ஒருவர் படம் எடுத்தார்.

தொடர்ந்து உரையாடிய தேசியத் தலைவர்கள் அவர்கள் இக்கமெராவை நிசாமிடம் (அஞ்சுனா புகைப்படப் பிரிவுப் பொறுப்பாளர்) கொடுக்கும் படி  கஸ்ரோவிடம் கூறி சிறிது நேரத்தின் பின் அங்கிருந்து வெளியேறினார்.

பின்னர் வெளிநாட்டிலிருந்து செல்வோர் தேசியத் தலைவருடனான சந்தித்திப்பில் புகைப்படம் எடுக்கும் டிஜிட்டல் மயமான புதிய கலாச்சாரமும் அவ்விடத்திலேயே ஆரம்பமாகியது.

தங்கியிருந்த ஒவ்வொருநாளும் தமிழீழ கட்டுமானங்களை பார்வையிட போராளிகளால் அழைத்துச் செல்லப்பட்டார் சுரேஷ். அவர் அங்கிருந்த நாட்களில் தமிழர் தாயகத்தின் இயற்கை அழகுகள், மக்கள், வாழ்வியல், புலிகளின் கட்டுமானங்களை புகைப்படங்கள் எடுத்து ஆவணப்படுத்தினார்.

தாயகத்திலிருந்து திரும்புப் போது தனது சொந்த தேவைக்காக எடுத்து வந்த அதே மாதிரியான மற்றொரு கமெராவையும் கஸ்ரோ அவர்களிடம் கொடுத்துவிட்டு வந்தார். அக்கமெரா வெளிநாடுகளிலிருந்து சென்ற தழிழர் ஒருங்கிணைப்புக்குச் செயற்பாட்டாளர்கள், ஆதரவாளர்கள், தேசியத் தலைவருடனும், கஸ்ரோ அவர்களுடன் புகைப்படங்கள் எடுப்பதற்கு நிலவன் என்ற போராளியால் இறுதி வரை பயன்படுத்தப்பட்டது சுட்டிக்காட்டத்தக்கது.

கனடா திரும்பியதும் தாயக நோக்கிய வேலைத் திட்டங்களை இறுதி வரை முன்னெடுத்தார். 2004 ஆம் ஆண்டு டொரோண்டோவில் பிரமாண்டமாக Queens park முன்றலில் நடைபெற்ற பொங்குதமிழ் நிகழ்வை முற்றுமுழுதாக ஒழுங்கமைத்தவரும் சுரேஷ் அவர்களே.

தாயகத்தில் எடுத்த புகைப்படங்களை சுரேன் என்ற இணையத்தில் மக்கள், வாழ்வியல், செஞ்சோலை, அறிவுச்சோலை, நவம் அறிவுக்கூடம், மயூரி இல்லம், முதியோர் இல்லங்கள், பராமரிப்பு இல்லங்கள் போன்ற பொதுவெளியில் பார்வையிடக்கூடிய படங்களை  தரவேற்றம் செய்திருந்தார்.

தமிழீழ கனவை சுமந்து பணியாற்றிய தேசப்பற்றாளனான சுரேஷ் அவர்களின் இழப்பு என்பது பேரிழப்பாகும். அவர் ஆற்றிய விடுதலைப் பணிக்கு தலை வணங்கி வீர வணக்கம் செலுத்துவோம்.

மீளும் நினைவுகளுடன்

-அகராதி-

 

அதிபர், ஆசிரியருக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டதையடுத்து  மருதனார்மடம் இராமநாதன் கல்லூரி மூடப்படுகிறது

அதேவேளை 2021இரண்டாம் தவணை ஆரம்பிக்கும் போதே மருதனார்மடம் இராமநாதன் கல்லூரி திறக்கப்படுமென வடமாகாண கல்வி அமைச்சின் செயலாளர், எல்.இளங்கோவன் தெரிவித்தார்.

மருதானர்மடம் இராமநாதன் கல்லூரியின் அதிபர், ஆசிரியருக்கு கொரோனா தொற்று உள்ளதாக சுகாதாரத் திணைக்களத்தினால் அறிவிக்கப்பட்டுள்ளதால் இந்த முடிவு எடுக்கப்பட்டது என்றும் அவர் குறிப்பிட்டார்.

இதன்மூலம் மருதனார்மடம் இராமநாதன் கல்லூரி வரும் ஏப்ரல் 19ஆம் திகதி இரண்டாம் தவணை ஆரம்பித்திலேயே திறக்கப்படும் என்றும் அவர் சுட்டிக்காட்டினார்.

Followers

தொடர்புக்கு: vannionline@gmail.com